இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது.
படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி.
துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையும், கெத்தான உடற்மொழியும் ரசிக்கும்படி தனித்துத் தெரிகிறது. இவர் படத்தில் உடை வடிவமைப்பாளராகப் பணிபுரிய வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காளீஸ் என்ற கதாபாத்திரத்தில், நாயகனின் நண்பனாக வரும் ரக்ஷனும் ரசிக்க வைக்கிறார்.
டிசிபி பிரதாப் சக்கரவர்த்தியாக கெளதம் வாசுதேவ் மேனன் அசத்தியுள்ளார். தேசிங் பெரியசாமி, கெளதம் வாசுதேவ் மேனனை எப்படி நடிக்க வைத்தால் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் எனத் துல்லியமாய்க் கணித்து உபயோகித்துள்ளார். படம் முடிந்து ரசிகர்களைப் புன்னகையோடு வெளிவர வைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளரவத் தோற்றம் என்று போகும் அவரது ஆக்டிங் கேரியர்க்கு இப்படம் நல்லதொரு பிரேக்கை அளிக்கும்.
ரிது வர்மா சுவாரசியமாக, நகைச்சுவையாக, போரடிக்காமல் படம் போகிறது. பாடலுக்கும் காதலுக்கும் என்று மட்டுமில்லாமல், ரிது வர்மா படத்தின் முக்கிய் திருப்புமுனைக்கு உதவும் கதையின் நாயகியாகவும் வருவது சிறப்பு. வழக்கம் போல் துல்கர் சல்மான் இளமைத் துள்ளலுடன் படம் நெடுகே ரசிக்க வைக்கிறார்.
அறிமுக இயக்குநரின் படமெனத் தெரியாதளவிற்கு மிக அற்புதமாய் படத்தை உருவாக்கியுள்ளார் தேசிங் பெரியசாமி. சூதும் வாதும் ஒரு ஃபன் (fun) என்பது போல் படம் பயணிப்பது மட்டுமே ஒரு குறை. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தனது லோகோவில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற தமிழ்ப் படத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.