தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார்.
அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம்.
முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். சுருக்கமான பின் கதையில் கூறப்படும் பழி வாங்குவதற்கான வலுவான காரணத்தை யூகிக்க முடியாமல் திரைக்கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.
படத்திற்கு ௭ஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். படத்தின் பலவீனங்களில் ஒன்று பின்ணனி இசை. காட்சிக்கு ‘டெம்போ’ ஏற்ற வேண்டுமானால் காது கிழியும் சத்தத்துடன்தான் பின்ணனி இசை இருக்க வேண்டுமென யாரிடம் பயின்றார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இசையமைப்பாளர் ஹெவி மெட்டல் இசை வடிவத்தின் ரசிகராக இருக்க நிறைய வாயப்புண்டு்.
சசிகுமாரின் வசனங்கள் ஒரு பக்கத்திற்குள் தான் வரும் போல. அநாவசிய பஞ்ச் டயலாக்குகளின்றிச் செம்மையாக நடித்திருக்கிறார். சிறிய வேடமாக இருப்பினும் நந்திதாவும், குழந்தையும் அவரவர் பாத்திரங்களை இயல்பாக செய்திருக்கிறார்கள். அசுரனாய் கலக்கியிருக்கும் வசுமித்ர ஒரு குணசித்திர நடிகராக ஒரு பெரிய சுற்று வரலாம்.
அசுரனால் பாதிக்கப்பட்ட நாயகன் பழிவாங்குவது என்ற கிங் ஆஃப் க்ளிஷே ஒன் லைனைரை வைத்து படம் எடுப்பதற்கு மிக முக்கியத் தேவை விறுவிறுப்பான, வேகமாக நகரும் திரைக்கதை. வெகு சீக்கிரம் நாயகன் அறிமுகமாக வேண்டுமென்பது கட்டாயமா என்ன? படத்தில் நாயகன் அறிமுகத்திற்குப் பின் வரும் காட்சிகள் சற்றே அலுப்பைத் தருகின்றன. முதற்பாதியில் நாயகன் அறிமுகத்தைச் சற்றே தள்ளி வைத்து வில்லனின் பயத்தைக் கூட்டும் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
பழி வாங்குவதற்குக் காரணமான முக்கியக் காட்சியும் (சற்று பிசகியிருந்தாலும் வக்கிரமாகவோ அல்லது கொடூரமாகவோ அமைந்திருக்கும்), சில குறிப்பிட்ட முக்கிய வன்முறைக் காட்சிகளையும் (லாங் ஷாட்டை உபயோகித்தது சிறப்பு) படமாக்கிய விதத்திற்கும், அக்காட்சியில் சசிகுமாரின் நடிப்பிற்காகவும், சசிக்கும் இயக்குநர் மருதுபாண்டியனுக்கும் சல்யூட்.
– பாளையத்தான்