32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டிரோன்ஸ் விமர்சனம் | Drones review

Dinesh R சேலம் Published: 15/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 22/10/2026 இது புதிது
எழுத்து அளவு:

காலங்களில் அவள் வசந்தம், பன் பட்டர் ஜாம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராகவ் மிர்தாத். இந்த டிரோன் அவரது மூன்றாவது படம். இப்படத்தில் சின்ன பேண்டஸி ஒன்லைனை வைத்து நகைச்சுவையால் நிரப்ப முயற்சி செய்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கல்லூரியில் செய்த சேட்டையால் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் ஹீரோ டிராவிட். கூடவே அவரது தோழியும் தோழனும். மூவராலும் வீட்டுக்குச் செல்ல முடியாது. அதனால் ப்ளாக் ஹோல் ஹவுஸ் எனும் விசித்திர வீட்டுக்குள் செல்கின்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் குரேஷி இவர்களுக்கு வெல்கம் பண்ணி என்ட்ரி கொடுத்தாலும் லாக் செய்து வைக்கிறார். கிட்டத்தட்ட பிக்பாஸ் வீடு போன்ற அவ்வீட்டிலிருந்து வெளியுலகைத் தொடர்பு கொள்ள மூவருக்கும் ஒரு டிரோன் மட்டுமே இருக்கிறது. அந்த டிரோன் மூலமாக ஹீரோ டிராவிட் சித்தி இத்னானியைக் கண்டடைகிறார். சித்தி இத்னானியின் கதையோ வேற லெவல் டெரர் கொண்டது. வீட்டுக்குள் முடங்கியே முளை விட்ட இந்தக் காதல் என்னானது? வீட்டுக்குள்ளிருந்து இவர்கள் எப்படி வெளியேறினார்கள்? சித்தி இத்னானியின் நிஜக்கதை என்ன? இவையெல்லாம் தான் படத்தின் கதை.

நாயகனாக டிராவிட் ஓகே மார்க் வாங்குகிறார். அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கில் இயக்குநர் ஏகத்திற்கும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்துள்ளார். அஞ்சலி நாயர் ஒப்பனையில் நிறைய செயற்கைத் தனம். அந்த ஒப்பனை அவரது நடிப்பையே காலி செய்கிறது. சித்தி இத்னானி அழகாக இருக்கிறார். அவ்வளவே! குரேஷி, சினிமா வாலா சதிஷ் ஆகியோர் நடிப்பும் பெரிதாக எடுபடவில்லை. தேவதர்ஷினி சின்னதாக ஸ்கோர் செய்கிறார்

ஹரி எஸ்.ஆர் இசையில் பெரிதாக எனர்ஜி எதுவுமில்லை. பாடல்களும் மனதில் ஒட்டவில்லை. ஜெயந்த் சேது மாதவன் தனது ஒளிப்பதிவைத் திறம்பட செய்துள்ளார். CG ஷாட்களில் இன்னுமே கவனம் எடுத்திருக்கலாம்.

படம் துவங்கி ஒன்றரை மணிநேரம் இஷ்டத்திற்கு நகர்கிறது. வசனங்களாலே சிரிக்க வைக்க முயன்று முயன்று அத்தனை நடிகர்களும் பார்வையாளர்களைச் சோர்வாக்குகிறார்கள். கடைசியில் கொஞ்சமாக கதைக்குள் வருகிறார் இயக்குநர். அவர் முழுதாகக் கதைக்குள் வருமுன் படமே முடிந்து விடுகிறது. படத்தின் பிரதான பிரச்சனையே மெத்தனமான திரைக்கதை தான். பிரதான புள்ளியை நோக்கித் தள்ளும் காட்சிகள் இல்லாமல் எல்லாக் காட்சிகளும் விட்டேத்தியாகவே அமைந்திருப்பது பெரும் பின்னடைவு. உருவக் கேலிக்கு எதிராகப் பேசிய கடைசிநேர நிமிடங்கள் மட்டுமே படத்தில் ஆறுதல்.

– வெண்பா தமிழ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.