
‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரிக்கு வயது 90. 6 மாதங்கள் இந்தியாவில் தனியாகவும், 6 மாதங்கள் வெளிநாட்டில் அவரது பேத்தியுடனும் வசிப்பார். ஒருமுறை பேத்தி வீட்டுக்குப் போகும் பொழுது, அவருக்கு அல்சீமர்ஸ் மறதி நோய் இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் எப்படித் தனியாக இருக்கப் போகிறார் எனக் கவலையுறுகிறார். என்ன செய்வதெனத் தேடிய பொழுது அவர்களுக்கு, ட்ரைமெட் (TriMed) பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் சிறப்புச் சிகிச்சைத் திட்டமான GRACE-இன் உதவியை நாடுகிறார்.
GRACE – Geriatric Rehabilitation & Assisted Care Enterprise
வயோதிக்கத்தினாலோ, விபத்தினாலோ, உடல்நல உபாதையாலோ வீட்டோடு முடக்கப்பட்டுவர்களுக்காக GRACE வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு அவர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பதோடு, நோயாளியோடு அவர்களைப் பராமரிப்பவர்களின் மன அழுத்தத்தையும் சேர்த்து அகற்றுவார்கள். வாழ்வின் இறுதிக் கட்டத்திலுள்ள முதியோர்களைப் பராமரிப்பதை GRACE-இன் முக்கிய நோக்கமாக வரையறுக்கலாம்.
2012 இலிருந்து 2015 வரை மூன்று வருடங்கள், ட்ரைமெட் அந்த ராணுவ அதிகாரியின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பராமரித்துள்ளார்கள். அந்த முதியவருக்கு உதவியாக இருந்த பணிப்பெண்ணுக்கு, முதியோர்களைப் பராமரிப்பது பற்றிய பால பாடங்களைப் போதித்து, 24×7 எந்நேரமும் மருத்துவ ஆலோசனைகளும், அவசர கால மருத்துவ உதவியும் வழங்கத் தயாராக இருந்ததையும் நன்றியோடு குறிப்பிட்டார் வெளிநாட்டு வாழ் பேத்தி.
டிக்னிட்டாஸ் என்பது ‘கருணைக் கொலை’க்கு உதவி செய்யும் ஒரு சுவிட்ஸர்லாந்து நிறுவனம். மருத்துவ ரீதியாகக் குணப்படுத்த முடியாத தீராப் பிணி, பொறுத்துக் கொள்ளவே முடியாத வலி, சகிக்க முடியாத உடற்குறை உடையவர்களுக்கு, டிக்னிட்டாஸ் தற்கொலை செய்து கொள்ள உதவுகிறது. உதாரணத்திற்கு, எந்தச் சிகிச்சையும் இல்லாத Multiple Sclerosis (மூளை-தண்டுவட மரப்பு நோய்). Motor Neuron Disease (நரம்பியல் இயக்க நோய்) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக தன் உயிரை மாய்த்துக் கொள்வது அவர்கள் உரிமை என்கிறது டிக்னிட்டாஸ். 98 இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. எனினும், சுமார் 70 நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கோர் அவர்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் மீட்டுக் கண்ணியமாக இறக்க உதவுமாறு கோரி வருகின்றனர். டிக்னிட்டாஸ் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால் இது. பத்தாவது பரீட்சையில் ஃபெயிலாகி விட்டாலே தற்கொலை செய்து கொள்ளும் அழுத்தம் மிகுந்த யுகத்தில் வாழுவதால், ஸ்பெஷலிஸ்ட்களைக் கொண்டு நெடிய ஆய்வுகளுக்கும் நடைமுறைகளும் பின்பே உதவ முன் வருகின்றனர். டிக்னிட்டாஸின் உதவி பெற்றவர்கள் பட்டியலில் கேன்சர் நோயாளிகள் தான் முதலிடம் வகிக்கின்றனர். Pain Management Doctors-க்கான தேவை இங்குப் பெருமளவில் உள்ளதென்பதே டிக்னிட்டாஸ் தன் 18 வருட அனுபவத்தில் இருந்து சொல்லும் பாடம்.
‘Euthanasia (கருணைக் கொலை)’ என்பது ஆதி காலத்தில் இருந்தே நடைமுறையுள்ளதொரு பழக்கம். சாக்ரடீஸ், பிளாட்டோ போன்றோர்கள் இப்பழக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட, “தலைக்கூத்தல்” என்ற சடங்கால் கருணைக் கொலை இன்றளவும் நடக்கிறது (‘மருது’ எனும் தமிழ்ப்படத்தில், விஷாலின் பாட்டியாக வரும் கொல்லப்புளி லீலாவை தலைக்கு ஊத்தித்தான் ஆர்.கே.சுரேஷ் “கொலை” செய்வார்). ஓர் உயிரைக் எடுக்கும் உரிமை சக மனிதருக்கு உண்டா? ‘கருணைக் கொலை’ குறித்தான இந்த அறம் சார்ந்த கேள்விக்கு ஒரு நிச்சய விடை கிடைத்ததில்லை. மிகச் சில நாடுகள் மட்டும் கருணைக் கொலையை அங்கீகரித்துள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்காவில் 5 மாகாணங்கள் மட்டுமே அங்கீகரித்துள்ளது; இங்கிலாந்தில், ‘அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
‘இந்தியாவில் கருனைக் கொலை பற்றிய ஒவ்வொரு வழக்கையும் நீதிமன்றம் தனித்தனியாக அலசித் தீர்ப்பு வழங்கும்’ என்றார் கருணைக்கொலையைப் பற்றி ஆவணப்படம் எடுத்துள்ள சேத்தன் ஷா.
ட்ரைமெட் மற்றும் நியூரோக்ரிஷின் நிறுவனரான மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, “இந்த விவாதம் தற்கொலையை ஆதரிப்பது எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. கண்ணியமான மரணத்தை உறுதி செய்வது மட்டுமே! ஆனால், அதை யார் முடிவு செய்வது? இது தான் சிக்கல் நிறைந்த முக்கியமான கேள்வி. தனி நபர் விருப்பம், மதம் சார்ந்த நம்பிக்கை, அக்குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்து, என நிறைய கேள்விகள் உள்ளன. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் ஒரு கார்ப்ரேட் ஹாஸ்பிட்டலுக்குப் போனால், 2 நாள் வைத்திருந்து அவர் இறந்துவிட்டதாகச் சொல்லி 2 லட்சம் வாங்கிக் கொள்வது சரியா? நோயாளிகளிடமும், அவர்களைச் சார்ந்தவர்களிடமும் வெளிப்படையாக அனைத்தையும் சொல்லுவது ரொம்ப முக்கியம்” என்றார். மருந்துகளை உட்கொள்ள மறுக்கும் உரிமை சட்ட ரீதியாக ஒருவருக்கு உண்டு.
மேலும், “ஒருவரிடம் நீங்கள் இறந்து விடுவீர்கள் என நேரடியாகச் சொல்ல முடியுமா? தொடக்கத்தில், இது போன்ற சூழலை எதிர்கொள்ள நான் மிகவும் பயப்படுவேன். The Tibetan book of Living and Dying என்ற புத்தகம் படித்த பின், அந்தப் பயம் நீங்கியது. நோயாளிகளிடமும், அவர்களைச் சேர்ந்தவர்களிடமும் உண்மையைச் சொல்வது மிக முக்கியம். அந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் படிக்கவேண்டும்” என்றார்.
அந்தப் புத்தகத்தை எழுதிய Sogyal Rinpoche எனும் திபெத்தியத் துறவி, “இறக்கும் தறுவாயில் உள்ளவர்களிடம் அவர்கள் மரணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது மிக அவசியம். அவர்களுக்குக் கடைசியாகச் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஏதேனும் இருக்கலாம். அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அவர்களை அமைதிப்படுத்தி மரணத்தை எதிர்கொள்ள தயார்ப்படுத்த வேண்டும். மரணம் அடைய உள்ளவர்களின் அருகில் அமர்ந்து, அவர்கள் பேசுவதை அரவணைத்தவாறுக் கேட்டு, நகைச்சுவையாகப் பேசி, அவர்களின் இறுதி நிமிடங்களை அன்னியோன்யத்தால் நிறைக்கவேண்டும்” என்கிறார்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில், “கண்ணியமாக இறக்க ஆசைப்பட்டால், கண்ணியமாக வாழப் பழகுங்கள்” என்கிறார் தலாய் லாமா.
– தினேஷ் ராம்