Shadow

எழுதப்படாத முகங்கள் | மு.ஜெகன் கவிராஜ்

நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருப்போம். அதில் பெரும்பாலான முகங்கள் நம் நினைவில் இருந்து அகன்றிருக்கும். வெகு சில முகங்கள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருக்கிற ஒவ்வொரு முகங்களின் பின்னாலும் ஏதோவொரு சுவையுடன் கூடிய வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமின்றி அந்த முகங்களில் சில நம் வாழ்க்கையின் மீளாப் பக்கங்களை தீராத் துயரத்துடன் எழுதி இருக்கக்கூடும். துவண்டு கிடந்த நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கக் கூடும், வாய்ப்பற்று வறண்டு கிடந்த நம் வாழ்வை வளமாக்கியிருக்கக் கூடும்,  தோழமையுடன் நம் தோள் தொட்டிருக்கக் கூடும், நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கக் கூடும்.  இப்படி ஏதோவொரு சிறு துரும்பையாவது நம் வாழ்வில் நிகழ்த்தியிருந்தால் மட்டுமே அந்த முகங்கள் நம் நினைவில் இருக்கும்.

ஆனால் ‘எழுதப்படாத முகங்கள்’ புத்தகத்தின் ஆசிரியர் மு.ஜெகன் கவிராஜ்-க்கு அவர் வாழ்வில் கடந்து வந்த அத்தனை முகங்களும் எப்படித்தான் நினைவில் நிற்கிறதோ தெரியவில்லை. அவரோடு பேசியதிலிருந்து அவரது பிறப்பூராகிய, தென்காசி மாவட்டத்தின் பூலாங்குளம் கிராமத்தின் அத்தனை மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையுடன் கூடிய நினைவுகளின் வாயிலாக, தன் மனதின் நினைவுகளில் ஏற்றி மங்காமல் காத்து வருகிறார் என்பதை அறிய முடிகிறது.  அந்த பூலாங்குளம் கிராமமே ஜெகன் கவிராஜின் கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் சொல்லாடலுக்கும் கருவூலமாகத் திகழ்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.  திருநெல்வேலி வட்டார வழக்குடன் கூடிய அவரின் எழுத்துநடை “எழுதப்படாத முகங்கள்” புத்தகத்தை வாசிப்போருக்குத் திருநெல்வேலி வட்டார வழக்கை தங்கள் வாய்வழிப் பேசிய ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.

“எழுதப்படாத முகங்கள்” புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டப் புரட்ட, நம் வாழ்க்கையில் மறந்து போன, மறக்க முயன்ற, கவனிக்கத் தவறிய, கண்டு கொள்ளாமல் விட்ட, பயந்து நடுங்கிய, பார்ப்பதைத் தவிர்த்த, பரிசுத்தமாக்கிய, படைப்புக்குள் இழுத்த, பரிகாசம் செய்த, பாவத்தில் தள்ளிய அத்தனை முகங்களும்  மெல்ல  மெல்ல நம் மனக்கண்ணில் ஊறத் துவங்குகின்றன.  அட நம் வாழ்க்கையில் கூட நாம் இத்தனை முகங்களைக் கடந்து வந்திருக்கிறோமா என்று அவை நம்மை ஆச்சரியத்தில் தள்ளுவதோடு, நம் கடந்த காலத்தின் கடந்து வந்த ராஜபாட்டைகளின் வழியே மீண்டும் ஒரு நகர்வலத்தை அவை நாசுக்காகக் கோருகின்றன.

சந்திராம்மா என்னும் தாயம்மாவைப் படிக்கும் போது, என் தமையன் பிறந்த ஆஸ்பத்திரியின் மருந்து வாடைகள் நாசியைத் துளைக்கிறது.  ஆஸ்பத்திரியின் பின்புறம் ஆசையோடு கிணற்றில் நீர் இறைக்க முயன்று தவறவிட்ட வாளி தொபுக்கடீர் என நீரில் அமிழும் சத்தமும், தொடர்ந்து அன்னையின் ‘எலேய்’ என்கின்ற அலறல் சத்தமும், பதறிப் போய் ஓடி வந்து பார்த்த சந்திராம்மா போன்ற செவிலியர்களின் நமட்டுச் சிரிப்புடன் கூடிய அதட்டலும் என்னைப் பரிகாசம் செய்த நினைவுகள் இன்று நிஜத்தில் நிழலாடுகின்றன.  தண்ணீர்க்குடம் உடைந்து தவித்துப் போய் ஆங்காங்கே மருத்துவமனைகளில் அலைகழிக்கப்பட்டு, இறுதியில் ஏதோவொரு மருத்துவமனையில் தஞ்சமடைந்த தமக்கையைப் பதட்டத்துடன் பார்க்கச் சென்ற என்னை, அங்கொரு சந்திராம்மா அழகாய்ச் சிரித்தபடி கையில் குழந்தையுடன் வரவேற்ற தருணத்தை  ஆழ்மனம் என் ஒத்துழைப்பின்றியே அசை போடத் துவங்குகிறது.

‘துட்டான் மொயலு’ கட்டுரையைப் படிக்கும் போது, “நாய்வளுட்ட இருந்து தப்பிச்ச மொயலு காலுவளுக்கு முத்தம் குடுக்கும்ல” என்று குட்ட பாஸ்கர் சொன்னதைப் படிக்கும் போது, “ஏலே எம் மேல சாமி வரும்ல… எங்கிட்ட வச்சிக்காதீக ஆமா… சாமி கண்ணக் குத்திபோடும்..” என்று எங்களை நெடுங்காலமாக ஏமாற்றி வந்த நண்பன் வைரமுத்து பவ்வியமாக என் முன் வந்து சிரிக்கிறான். “நீ இவனுக்கு டிஃபன் வாங்கிக் குடுக்குற வரைக்கும் நான் சாப்பிடமாட்டேன்” என்று சொல்லும் தேவதாஸ் அய்யாவைப் பார்க்கும் போது,  என் பெரிய்யா வீட்டுக் கல்யாணத்தின் போது, கடைசியாக வந்த விருந்தினருக்கு உணவில்லை என்று தெரிந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரிய்யா எச்சல் கையோடு எழுந்து,  “என் வீட்டுக் கல்யாணத்துல எவன்டே சோறில்லன்னு சொன்னது, அவுகளுக்கு சோறு போட்டு மரியாதை செய்ற வரைக்கும்  என் கைய சோத்துல வைக்க மாட்டேன்”னு சொன்ன சம்பவம் சலசலத்து ஓடுகிறது.

அய்யா மகாலிங்கத்தின் தண்டோரா குரலைக் கேட்கும் போது, திருவில்லிபுத்தூர் ஜெயகிருஷ்ணா தியேட்டருக்காகப் படப்போஸ்டர்களை விநியோகப்படுத்தி, மைக்கில் அறிவிப்பு செய்தபடி குதிரை வண்டியில் செல்லும்  செவத்தண்ணன் பின்னால் ஓடிய ஓட்டம் நெஞ்சில் தடதடக்கிறது.  எட்டாது வள்ளல் செய்த தியாகத்தையும், ஊரார் அவருக்குச் செய்த துரோகத்தையும் படிக்கும் போது, ஏன் நல்லவர்கள் எல்லோரையும் இந்தச் சமூகம் தோற்கடிக்கத் துடிக்கிறது என்கின்ற கேள்வி எண்ணத்தைத் துளைக்கிறது.  உளவியல் மருத்துவரையும், அவரின் சிகிச்சையையும் படிக்கும் போது, முட்டிக்குக் கீழே மொளிக்கு மேலே புண்களால் குதறிப் போய் கிடந்த என் காலைப் பச்சிலை அரைத்துக் கட்டி பத்தியச் சாப்பாடு கொடுத்துத் தேற்றிய என் மாம்மை ராஜம்மாள் நினைவுக்கு வருகிறார்.

தோணாப் பொருளைத் தொடர்ந்து கண்ட மன்னவர்க்கு கட்டுரையைப் படிக்கும் போது, ஏசு பிரானின் காணாமல் போன ஆட்டுக்குட்டியை தேடும் மேய்ப்பனின் கதை ஞாபகத்தில் பரிமளிக்கிறது. பார்வதியம்மையின் பக்தியைப் பார்க்கும் போது, எல்லாம் இழந்தவர்களுக்கும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை துளிர்க்கும் என்பது சர்வ நிச்சயம்.  குமரேசன் மாமாவும் ஊமத்தையும் வாழ்வின் துயரங்களாக மனதின் அடுக்குகளில் அங்கம் வகிக்கிறார்கள்.  கண்பார்வையற்ற குமரேசன் மாமா யார் தன்னைத் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் அரற்றியபடி அலையும் காட்சி கண் முன் நின்று அகல மறுக்கிறது. ஒன்றுமே இல்லாமல் போன ஊமத்தையின் வாழ்க்கை துயரம் நம் தொண்டையை அடைக்கிறது.

திக்கற்ற வாழ்க்கையில் திசை தெரியாமல் அலையும் போது கரம் பிடித்து நடத்திய கதிரவன் அண்ணாவின் பேச்சிலும் செயலிலும் நம்பிக்கையிலும் உற்ற நண்பனைக் காண முடிகிறது. வார்த்தைக்குச் சொல் கொடுத்தவரும், வயிற்றுக்கு நெல் கொடுத்தவருமாகிய முதலாளி இராஜேந்திர ராஜன், வாழ்க்கையில் உழைப்பின் உயர்வுக்கு ஒப்பற்ற ஒப்பீடாக உயர்ந்து நிற்பதை உணர முடிகிறது.

உற்றாரின் உபசரிப்பிற்காகச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் சின்னத்தையையும், வேற்றாள் ஒருவனை வீட்டில் சேர்க்க யோசித்து விரட்டி,  பின் மனமில்லாமல் சேர்த்துக் கொண்டு,  பின் தன்னூரில் இருந்து விலகிப் போய், வாழ்க்கையின் கொடுந்துயரால் துவண்டிருக்கும் அவனை மனமுவந்து வீட்டிற்கு அழைத்து, தமக்கையாய் தாங்கிப் பிடித்து, பாடற்றவனுக்குப் பாடல்கள் மூலமாக ராஜபாட்டை அமைத்துக் கொள்ள  ஆணிவேர் அமைத்துக் கொடுத்த அமுதாக்காவையும் படத்துடன் பார்க்கும் போதும், படிக்கும் போதும் உச்சி குளிர்ந்து, மனம் உன்மத்தம் அடைகிறது.

மன்னர் மன்னனைப் படிக்கும் போது, உதாசீனப்படுத்தப்பட்டு ஊரில் அலைந்து திரிந்த அத்தனை முகங்களும் அடுக்கடுக்காய் மனக்கண்ணில் தோன்றி அலறத் துவங்குகின்றன. டவுசர் பாண்டி, வெள்ளிக்கிழமை பாட்டி, செரட்டை தாத்தை, ஊமச்சி கிழவி என ஓராயிரம் முகங்கள் உள்ளத்தில் ஊற்றெடுக்கின்றன.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது, காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சுழன்று, என் கடந்த காலத்தில் பயணித்து வந்த மாபெரும் அனுபவம் கிடைத்தது. அது கண்டிப்பாக உங்களுக்கும் கிடைக்கலாம். நீங்கள் மறந்த மனிதர்களையும் அவர்களின் நினைவுகளையும் கண்டிப்பாக இப்புத்தகம் மீளுருவாக்கம் செய்யும் என்பதில் ஐயமில்லை.  கட்டுரையாக எழுதிய ஒவ்வொரு மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலோடு புகைப்படம் எடுத்து, அதைப் புத்தகத்தில் இணைத்திருப்பது தனிச்சிறப்பு.  ராஜு முருகனுக்கு ‘வட்டியும் முதலும்’ என்றால் ஜெகன் கவிராஜ்-க்கு “எழுதப்படாத முகங்கள்” ஆகும்.

மொத்தத்தில் எழுதப்படாத முகங்கள் வாழ்க்கை மீதான புரிதலையும் பரிவையும் குற்றச்சாட்டுகளையும் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் அன்பையும் அடக்கத்தையும்  உழைப்பையும் ஒருங்கே பறைசாற்றும் ஒரு புத்தகம் மட்டுமின்றி, நம் வாழ்க்கையையும் புரட்டிப் பார்க்க உதவும் ஓர் இதழ் வழி கால இயந்திரம். எழுத்தாளர் ஜெகன் கவிராஜ்-க்கும், அவரது படைப்புக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள்.

(பி.கு. : இப்புத்தகம் 47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2024) அந்திமழை பதிப்பகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கடை எண் : 109)

– இன்பராஜா ராஜலிங்கம்

புத்தகத்தைப் பெற அழைக்கவும்: +91 9952 444540, 044 24867540

1 Comment

Comments are closed.