Shadow

கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D

“உயரம் தொட்டவங்க பலரும் பள்ளத்துல இருந்து வந்தவங்களாத்தான் இருக்காங்க” என்பதற்கு மற்றொரு உதாரணமா இருக்குறா எங்கள் காஞ்சிப்பள்ளத்துப் பதியின் நிர்வாகி பார்வதியம்மாவின் மகள்வழி பேத்தி கலைச்செல்வி.

“பெயர்லே கல்விக்கடவுள் இருக்குறதால அவளுக்குக் கல்வி கடல் மாதி வரும்”னு சொன்னாங்க. அப்படி வந்த கல்வி ஒன்னும் ஈசியா வந்திடல. கலைச்செல்வியை எனக்கு அவ எட்டாங்கிளாஸ் படிக்கறப்பவே தெரியும். கலகல பேச்சுக்குச் சொந்தக்காரி. 12ஆம் வகுப்பு வரைக்கும் சின்ன காஞ்சிபுரத்துல இருக்குற BMS லேடிஸ் ஸ்கூல்ல தான் படிச்சா. அப்பா இரும்புக்கடைல லோடு சுமப்பார். அம்மா வீட்ல பீடி சுத்துவாங்க. ஒரு அக்கா, ஒரு தம்பி. இதான் கலைச்செல்வி குடும்பம். வயிற்றுக்கும் வாய்க்கும் இடைப்பட்ட கேப்ல அவளோட படிப்புச் செலவும் நடக்கும்.

+12 முடிச்சதும் சொந்தத்துலே கல்யாணம் முடிக்க சூழல் வந்துச்சு. “கல்யாணத்துக்குப் பிறகும் என்னைப் படிக்க வைக்கணும்” என்ற உத்திரவாதத்தை வாங்கிட்டு, எங்களோட அய்யாப் புள்ள அய்யா ஆசியோட கர்த்தர் சாட்சியா கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்புறம் அவ கணவர் ஜெபத்துரை அண்ணன் கலைச்செல்விக்கு முழு சப்போர்ட் பண்ணி முதுகெலும்பா இருந்தார்.

குருவி தலைல பனங்கா என்ற கதையா குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு, படிப்பையும் விடாம லைட்டா தள்ளாடுனாலும் கனவை விடல கலைச்செல்வி. M.Sc., M.Phil., B.Ed. முடிச்சா. அவ கனவோட End Ph.D பண்ணணும்கிறது. கடந்த நாலு வருசமா அதற்காகக் கடுமையா போராடுனா. இந்த டைம்ல சர்வைவல் பிரச்சனை. அவ படிப்போட சாட்சியா திருநெல்வேலி Sarah Tucker College -ல கிடைச்ச Assistant Professor (Department of Mathematics) வேலையைச் செஞ்சிக்கிட்டே முனைவர் பட்டத்தை நோக்கி முன்னேறிப் போனா. ஒரு மகன், ஒரு மகள் இருவரின் படிப்பையும், வீட்டு வேலையையும், சேர்த்துப் பார்த்துட்டே போன மாசம் Ph.D -ஐ வெற்றிகரமா முடிச்சா. கேள்விப்பட்ட எங்க காஞ்சிபுரம் சொந்தங்க எல்லோருக்கும் பெரிய சந்தோசம். மேலோட்டமா பார்க்குறவங்களுக்கு இது சாதாரணமா தெரியும். படிச்சு வேலைக்குப் போன பிள்ள குடும்பத்தலைவியாகுறது பெருசுல்ல. ஒரு குடும்பத்தலைவியாயிட்டு இப்படிப் படிச்சி எழுந்து நிற்கிறது நிச்சயமா பெரிய விசயம்.

நேற்று நடைபெற்ற எங்கள் காஞ்சிபுரம் அய்யா கோவிலில் திருவிழாவில் கலந்துகொண்டு அவ பேசுனது தான் ஹைலட். “19 வருசத்துக்கு முன்னாடிலாம் அம்பத்தூர் அய்யா கோவில்ல பாட்டுப் போட்டின்னா பார்வதியம்மா என் பெயரைக் கொடுப்பாங்க. நானும் கலந்துப்பேன். இப்ப சர்ச்ல பாட்டுப் போட்டில கலந்துக்கும் போது அய்யா கோவிலில் கலந்து கொண்ட காலம் நினைவுக்கு வரும். இன்னைக்கு எதோ படிச்சி மேல வந்திருக்கோம்னா அதுக்கு அய்யா ஒரு பெரிய காரணம். புகுந்த இடம் கர்த்தர் வழியா இருந்தாலும் பிறந்த இடம் அய்யாவழி. சர்ச்ல மாதம் மாதம் நாங்க பெற்ற பலன்களைச் சாட்சியா சொல்லுவோம். இன்னைக்கு எங்கம்மா, எங்கப்பா, எல்லாத்துக்கும் மேல பார்வதியம்மா இவங்களோட அன்பும் ஆசீர்வாதத்தையும் இப்ப நன்றியோட சாட்சியா இந்த அய்யா முன்ன சொல்றேன். அய்யாவிற்கு நன்றி. அய்யாவின் பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லாப் பிள்ளைகளும், குறிப்பா பெண் பிள்ளைகள் படிப்பை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடாதீங்க. படிப்பிற்காக எதை வேண்டுமானாலும் விடுங்க. நன்றி” என்றார்.

இதையெல்லாம் கலைச்செல்வி பேசப் பேசக் கஷ்டத்திலயும் அசராமல் படித்த எட்டாம் கிளாஸ் கலைச்செல்வி கண்ணு முன்னாடி வந்து போனா.

வாழ்க்கை என்பது தேங்கி நிற்கிறது இல்லை. கடந்து போறது. இப்படிக் கடக்குற ஒவ்வொரு பாதைகளையும் பாசிட்டிவா கடக்கணும் கலைச்செல்வி மாதிரி.

மு. ஜெகன் கவிராஜ்,
பத்திரிகையாளர், பாடலாசிரியர்,
கவிஞர், வசனகர்த்தா,
காயலாங்கடை டூ தயாரிப்பு நிர்வாகி,
எழுதப்படாத முகங்கள் புத்தகத்தின் எழுத்தாளர்.