மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடிட்டுக் காட்டத் தொடங்கிவிட்டனர். நாமினேட் செய்பவர்கள் சொல்லும் காரணத்தில் இருந்து அதை யூகிக்க முடிகிறது.
மும்தாஸ் அதிக பேரால் நாமினேட் செய்யப்பட்டதையொட்டி, அவர்களைச் சமாதானம் செய்யும் ஜனனி ஐயர், “இது ரொம்ப நார்மல்” எனக் கூறி விட்டு, “உங்களை அவங்க த்ரெட் (threat) ஆக நினைக்கிறாங்க” என்கிறார். அப்படிப் போடு! ஆக, வைஷ்ணவியை த்ரெட்டாக நினைத்துத்தான் ஜனனி ஐயர் நாமினேட் செய்துள்ளார் என்றாகிறது. டேனியல் சூட்டிய ‘விஷப்பாட்டில்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமானவர் என்று ஜனனி ஐயர் நிரூபித்துவிடுவார் போல! அதே போல், ரேண்டமாக (Random – சீரற்று நோக்கின்றி) ஆட்களைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பிக் பாஸின் ஆணையை அவர், பகுத்தாய்ந்து நோக்குடன் நிறைவேற்றியது போலிருந்தது. கழிவறையைச் சுத்தப்படுத்த செண்ட்ராயன், டேனியல் என அவர் தேர்ந்தெடுத்ததால் இந்த சந்தேகம். முதல் நாள் என்பதால் சந்தேகத்தின் பலனை ஜனனிக்குச் சாதகமாக வழங்கிவிடலாம். ‘என் டிரஸைத் தொடாத! நித்யாவிடம் சுத்தம் இல்லை. எனக்குத் தலைவலி. க்ரீன் டீ-லாம் கேட்கக்கூடாது’ என சிங்கினாதம் பிடித்தவராய்த் தோற்றமளிக்கும் மும்தாஸால் விரைவில் ஒரு பஞ்சாயத்து உண்டு.
கழிவறையைச் சுத்தப்படுத்த டேனியல் அழைத்ததுமே யோசிக்காமல் சென்ற யாஷிகா ஆனந்த் ஆச்சரியப்படுத்துகிறார். அது நட்பின் காரணமாகச் சென்றார் என்றாலும் அந்த ஆட்டிட்யூட் (மனப்பாங்கு) ரசிக்க வைக்கிறது. பொன்னம்பலத்துக்கு, ஆனந்த் வைத்தியநாதன் சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் காட்சி பார்க்க நன்றாக இருந்தது. எப்படியாவது பொன்னம்பலத்திற்குச் சங்கீதம் கைகூடிவிட்டால், காலாவில் ஹரி தாதா வழிபடும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது, அடுத்த சூப்பர் சிங்கரில் கீர்த்தனைககளைப் பாடிப் பக்தர்களை மகிழ்விப்பார் என நம்பலாம்.
எடிட்டரின் கஷ்டம் புரிகிறது. என்றாலும், பார்வையாளர்களின் கஷ்டத்தையும் மனதில் கொண்டு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நிகழ்ச்சியைச் சுவாரசியப்படுத்தலாம். உள்ளாடை பிரச்சனையைப் பெரும் பிரச்சனையாக்கி, ஷ்ஷ்ப்ப்பாஆஆ என்று பொறுமையை ரொம்பவே சோதித்துவிட்டார்கள். முதல் நாளுக்கே நாக்கு தள்ளுகிறது. பெட்டியைக் கொடுத்தனுப்பி ஓவியாவையும் பல்ப் வாங்கச் செய்து வெளியில் அனுப்பிவிட்டீர்கள். பார்த்துச் செய்யுங்கள் பிக் பாஸ்!
– Helen D’Bhakth