32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

எஸ்கேப் ரூம் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 03/02/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 அயல் சினிமா
எழுத்து அளவு:

escape-room-movie-review

தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் அறை, புத்தியைப் பேதலிக்க வைக்கும் அறை, ஆளை நசுக்கும் சுவர்கள் கொண்ட அறை எனப் படத்தில் வரும் ஒவ்வொரு அறையும் மரண பயத்தைக் காட்டுவன. குறிப்பாக நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறையின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைக்கும் நேர்த்தியும் அழகும் கொண்டது. அங்கு அனைத்துமே தலைகீழாக இருக்கும். மின்விசிறி தரையிலும், மேஜை நாற்காலிகள் அந்தரத்தில் தொங்கியவண்ணமும் இருக்கும். பனிவெளி நினைத்து உலாவ நினைக்கும் டேனி, கண்ணுக்குத் தெரியாத சுவரில் மோதி கீழே விழுவான். பின் மெல்லத் தொட்டுப் பார்ப்பான். கண்ணுக்குப் புலப்பாடாத அந்தச் சுவரை உணர்ந்து, அதை வடிவமைத்தவரின் திறமையை எண்ணி வியப்பான். ப்ரொடக்‌ஷன் டிசைனர் எட்வார்ட் தாமஸ், கலை இயக்குநர் மார்க் வாக்கர், செட் டெகரேஷன் செய்துள்ள ட்ரேசி பெர்கின்ஸ் ஆகிய மூவரின் உழைப்பும் எல்லா அறையிலுமே பளீச்சிடுகிறது.

அமாண்டாவின் சாகசம், ஜேசனின் சர்வைவல் உணர்வு என கதாபாத்திரங்கள் வடிவமைப்பில் ஈர்ப்பு இருந்தாலும், படம் முடியும் பொழுது அவையெதுவும் நினைவில் நிற்கவில்லை. கதாபாத்திரங்கள் இறக்கும் பொழுது அந்தப் பயமும் பதற்றமும் முகத்தில் அறையவில்லை. அனைவரும் தப்பிக்கப் பார்க்க, இது போன்ற உயிராபத்தை விளைவிக்கும் கிறுக்குத்தனமான விளையாட்டை டிசைன் செய்தவனை வரவைக்க ஜோ மேற்கொள்ளும் யுக்தி அருமை. அதை நீட்டித்து, அப்படியே இரண்டாம் பாகத்திற்கான தூண்டிலாய் அது மாற்றியிருப்பது வழக்கமான ஹாலிவுட் பாணி.

அழுத்தமான கதையும், ஆழமான திரைக்கதையும் இல்லாவிட்டாலும், ஒளிப்பதிவாளர் மார்க் ஸ்பைசரின் உதவியோடு விஷுவல் விருந்து அளித்துச் சமாளித்து விடுகிறார் இயக்குநர் ஆடம் ராபிடெல். கதாபாத்திரங்கள் அறுவரின் ஒற்றுமை என்னெவென்றால், அனைவரும் பெரும் விபத்தில் தனித்துப் பிழைத்த லோன் சர்வைவர்ஸ். அந்த ஆறு அதிர்ஷ்டக்காரர்களில் இருந்து ஓர் அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுப்பதுதான் அந்தப் பணக்கார விளையாட்டு. உயிர் பிழைப்பதற்கான நிகழ்தகவாக 4% மட்டுமே வைத்து, அவ்விளையாட்டை வடிவமைக்கிறார்கள். அவர்கள் யாரென அறிய இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கவேண்டும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.