32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 03/02/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 அயல் சினிமா
எழுத்து அளவு:

mary-queen-of-scots-movie-review

‘Queen of Scots: The True Life of Mary Stuart’ என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். மேரியின் வரவால், எலிசபெத்தின் அரியணைக்கு ஆபத்து வரலாமென எச்சரிக்கப்படுகிறார். ஏனெனில் மேரிக்கும் அதற்கான உரிமையுண்டு.

கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மேரியை, ஸ்காட்லாந்து ப்ரொடஸ்டன்ட்ஸ் ராணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், ஒரு பெண் ஆள்வதா என்றும் உள்ளுக்குள் புகைச்சலோடு உள்ளனர் ஆண்கள். எனவே மேரிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து கலகங்களை உருவாக்கி வருகிறார்கள். இங்கிலாந்து அரியணையைத் தக்க வைக்க எலிசபெத் ராணி நகர்த்தும் காய்களை, அந்த அரியணையைக் கைப்பற்ற நினைக்கும் ராணி மேரி சாமர்த்தியமாக வெட்டுகிறார். இந்த ஆடுபுலியாட்டம் ஒருபுறம் நிகழ்ந்தாமல், ஆண்கள் கோலேச்சிய காலத்தில் அரசாண்டு கொண்டிருந்த இரண்டு வலிமையான ராணிகள், ஒருவர் ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டாலும், ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையையும் வைத்துள்ளனர். ஆனால், மதமும் அரசியலும் அவர்களைக் கடைசி வரை எதிரும் புதிருமாக வைத்திருக்கிறது.

இவ்விரு ராணிகளும் சந்தித்துக் கொண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆனாலும், அறிமுக பெண் இயக்குநரான ஜோஸி ரூர்கே இருவரும் சந்தித்துக் கொள்வதாகத் தனது படைப்புச் சுதந்திரத்தை உபயோகித்து அருமையான காட்சியைப் படத்தில் வைத்துள்ளார். இரண்டு சகோதரிகளும், இரண்டு மகாராணிகளாகத் தனது கம்பீரத்தைக் கைவிடாமல், முதல் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிக அற்புதம். அவர்கள் சந்தித்துக் கொள்ளும்பொழுது மேரி ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நாடிழந்த ராணியாக இருப்பார். ஆனால், எலிசபெத்திடம் அவர் காட்டும் அந்தக் கம்பீரம் வாவ். க்வீன் மேரியாக நடித்திருக்கும் சர்ஷா ரோனன் (Saoirse Ronan) பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது பாத்திரத்தை வலிமையாக்குவது, எலிசபெத் மகாராணியாக நடித்திருக்கும் மார்கோ ராபியின் (Margot Robbie) அற்புதமான நடிப்புதான். சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை அள்ளுவார் என அடித்துச் சொல்லலாம். ராணிகளை அழகாக்குவது, அலெக்சாண்ட்ரா பர்னின் சிகை அலங்காரமும், ஜென்னி ஷிர்கோரின் உடை வடிவமைப்பும்தான். இவ்விருக்கும் கூட விருதுகள் உறுதி.

மேக்ஸ் ரிச்டெரின் இசை படத்தின் பெரும்பலம். கதையிலும் இசையிலும் இருக்கும் ஆழம், காட்சிகளில் உள்ளபடிக்குப் பிரதிபலிக்கப்படவில்லை. கதைசொல்லும் முறையில் ஓர் அவசரம் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. அதனால் படம் தந்திருக்கவேண்டிய ஹார்ட்-ஹிட்டிங் அனுபவம் ஏற்படவில்லை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.