32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

Dinesh R சேலம் Published: 30/06/2025 5 நிமிட வாசிப்பு Updated: 01/07/2025 சினிமா
எழுத்து அளவு:

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் B.T. அரசகுமார், ”அண்ணன் கே. ராஜன் வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன, க்ரைம் ஸ்டோரியா, ஃபேமிலி ஸ்டோரியா எனக் கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்குச் சென்றேன்.

நான், 1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்தேன். என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன். 89 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தைப் தயாரித்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் கௌரவ் நாராயணன், ”இப்பட முன்னோட்டத்தின் இறுதியில், ‘போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்’ என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனைத் தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரைத் தேட வேண்டும். அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது. பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவனின் மனநிலையைப் போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்தத் தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் ‘கன்டென்ட் வின்ஸ்’ என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான ‘டி என் ஏ’, ‘மார்கன்’ ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.

இன்றைய தேதியில் இயக்குநர்களை விடப் பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களைச் சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்துப் படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது இது த்ரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த த்ரில்லர் அர்த்தமுள்ள த்ரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்” என்றார்.

நடிகர் பிரஜின், ”தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளைக் கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப்படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் ‘வேர்ட் ஆப் மௌத்’தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும்” என்றார்.

பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன், ”இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து, ‘நடிக்கிறீர்களா?’ எனக் கேட்டார். நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல், ‘நான் மாட்டை பிடிக்கிறேன். நீங்கள் மைக்கைப் பிடியுங்கள்’ என்றார். அந்த டீலிங் எனக்குப் பிடிச்சிருந்தது. தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதைச் சொல்லி விடுவேன். இந்தப் படத்தில் எனக்குச் சிறிய கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் என்னை அருமையாகக் கவனித்தார்கள்.

தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் காலத்தில் பாட்டுப் புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும். அதைப் பார்த்துவிட்டு தான் படத்திற்குச் செல்வார்கள். மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன், ”அரசகுமார் துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரைச் சந்தித்து, ‘அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள்’ என அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரைச் சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.

அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில், ‘தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்குத் தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே!’ எனப் பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தித் தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார்.

2001 ஆம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ‘என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தைத் தயாரிக்கிறேன்’ என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌ 25 ஆண்டுகளுக்கு முன் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்துத் தயாரிப்பாளராகி இருக்கிறார்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.