Shadow

“கயிலன்: சங்க காலச் சொல்” – இயக்குநர் அருள் அஜித்

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் ‘கயிலன்’ என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.

இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.

தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன். இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.

300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்” என்றார்.

இயக்குநர் அருள் அஜித், “ ‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜைச் சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.

என்னுடைய பார்வையில் த்ரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான். அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்‘, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.

இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ், ”கே. ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.

நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி‘. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளைச் சொன்னார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.

இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.