பலவருட கனவும், பதிமூன்று வருட உழைப்பும், அவதார் 2 ஆகத் திரை கண்டுள்ளது.
ஒரு முழுமையான படமாகப் பார்த்தால் எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப்படம் அவதார். எந்த ஒரு தருணத்திலும் நம் கண்களைத் திரையை விட்டு அகலச் செய்யாத காட்சிகள். உணர்வுபூர்வமான பல தருணங்கள் என்று சிற்சில மாயாஜாலங்கள் நிகழாமல் இல்லை. ஆனாலும், அவதார் ஒன்றுடன் சடுதியில் நிகழ்ந்துவிட்ட இணைப்பு அவதார் இரண்டில் நடக்கவில்லை என்பது மட்டுமே உள்ளுக்குள் இருக்கும் ஒரே உறுத்தல்.
மூன்றே கால் மணி நேரப்படத்தில், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்புக் கதையாகச் சொல்லப்படும் கதையை அவசர அவசரமாக சொல்லிச் சென்றது கூட அந்த இணைப்பை உருவாக்கத் தவறியிருக்கலாம். அத்தனை நாவிக்கள் செத்துக் கிடக்கும்போது, நாயகன் தன் குழந்தையை மட்டும் தேடிப் பரிதவிக்கும் காட்சியினால் கூட அந்த விலகல் ஏற்பட்டிருக்கலாம். காரணம், நாயகன் தன் குழந்தைக்கு அப்பன் என்பதைக் காட்டிலும், ஓர் இனத்திற்குத் தலைவன். அவன் கண்களுக்கு அத்தனை மக்களும் சமமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் தன் கையில் இருப்பது தன் பிள்ளை இல்லை என்ற பதட்டத்தில் மரணித்துப் போன அந்த நாவியை அப்படியே தூக்கிப் போட்டுத் தன் பிள்ளையைத் தேடச் செல்லும் காட்சியில், சல்லி ஒரு அப்பனாகத் தான் கண் முன் நிற்கிறானே தவிர தலைவனாக இல்லை. அங்கேயே முதல் ஏமாற்றம் நிகழ்ந்துவிட்டது.
தொடர்ச்சியாக இப்படியான பிரச்சனைகள் ஏற்பாட்டுக் கொண்டே இருந்ததால், அவதார் இரண்டின் கதையை, முதலாம் பாகத்திற்கான தொடர்ச்சியாகப் பார்ப்பதை விட, மூன்றாம் பாகத்திற்கான ஆரம்பமாகப் பார்ப்பது மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் முதலாம் பாகத்தில் நம்மிடம் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நம்மிடம் காட்டுவதற்கு ஓர் உலகம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் சுவாரசியமான கதையும் இல்லை. சுவாரசியமான உலகமும் இல்லை. இதில் இருப்பதெல்லாம் பிசிறு தட்டாமல் எடுக்கப்பட்ட காட்சிகளும், அந்தக் காட்சிகளுக்குப் பின் இருக்கும் உழைப்பும்.
படம் முழுக்கக் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றாலும் அந்தக் காட்சிகளுக்கும் நமக்குமாக ஏற்படும் தொடர்புகளில் ஒருவித சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது. தப்பித்துச் செல்லும் நாயகன், அவனைத் துரத்தி வரும் வில்லன் என்ற ஒற்றைக் கதையைத் தவிர இதில் பிரதானமாக எதுவும் இல்லை. அதையும் தாண்டி, படம் முழுக்க இருப்பதெல்லாம் டெம்ப்ளேட் காட்சிகள். அந்த டெம்ப்ளேட்டில் இதற்கு முன்னும் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. இனியும் வரப் போகின்றன. ஆனால் அவதார் இரண்டும், அதனுள் சிக்கிக் கொண்டது தான் ஏமாற்றமாக இருக்கிறது.
‘சல்லி தனக்கான டிராகனை எப்படிப் புடிச்சான் தெரியுமா? வெறுங்கையால!’ என்று சொல்லி முடிக்கும் முன், மைல்ஸ் அந்தப் பறவையை நோக்கி நகரந்திருப்பான், அதன் மீது ஏறி அமர்ந்திருப்பான். அவன் சோலி முடிஞ்சது என்று நினைக்கும்போது மீண்டும் பறந்து வருவான். அவதார் ஒன்றிலும் இதே மாதிரயான காட்சியைப் பார்த்தோம். அவதார் இரண்டிலும் நாயகன் தனக்கான உயிரியைத் தேர்வு செய்யும் காட்சி இப்படியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. வில்லனுக்கும் அதே டெம்ப்ளேட் என்றால்? நாயகனுக்கு அட்டகாசமாகப் பொருந்திப் போன அந்தக் காட்சி, வில்லனுக்கு என்று வரும்போது நமக்குள் எந்தவொருஅமிலத்தையும் சுரக்கச் செய்யவில்லையே ஏன்? காரணம் நாம் பார்த்துப் பழகிய டெம்ப்ளேட்.
அதற்காக டெம்ப்ளேட் காட்சிகளே இருக்கக் கூடாதா என்றால் இருக்கலாம். ஆனால் அதை எப்படி சுவாரசியமாக உருவாக்குகிறோம், மனதில் பதியச் செய்கிறோம் என்பதில் இருக்கிறது ஒரு படைப்பாளியின் உத்தி. அதற்கான உதாரணங்கள் இதே படத்திலும் கூட இருக்கின்றன. வானில் இருந்து நட்சத்திரங்களைப் போல வந்திறங்கும் மனிதர்களின் வாகனங்கள் ஒட்டுமொத்த வனத்தையும் அழிக்கும் போது, அந்த விலங்குகளைக் கொன்றழிக்கும் நெருப்பு நம்மையும் சுடுகிறது. ‘அய்யோ!’ எனப் பதறுகிறது. தன் அம்மையை வீழ்த்தும் தருணத்தில் அந்தக் குட்டி உயிரி, இறந்து போன தன் அம்மையின் உடலைச் சுற்றிச் சுற்றி வரும் தருணத்தில் அதன் சோகம் நமக்குள் வந்துவிடுகிறது. ‘எத்தனை நீசக்காரன் இந்த மனுஷப்பயல்?’ என்ற கோபம் நம்மை மேலும் மேலும் கேள்வி கேட்டுக் கொல்கிறது. இவையும் டெம்ப்ளேட் காட்சிகள் தான். ஆனால் அதைக் கொடுத்த விதத்தில் ஒரு செய்நேர்த்தி இருக்கிறது. அந்த நேர்த்தியைத் தான் படம் முழுக்கவும் தேடிப் பார்க்கிறேன். ஏனென்றால் இது யாரோ ஓர் அமெச்சூர் இயக்குநரின் படம் இல்லையே!
மேலும் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் காட்டிலும், மூன்றாம் பாகத்திற்கான தொடர்ச்சி இப்படித்தான் இருக்கப்போகிறது என்ற எண்ணம் தான் படம் முழுக்கவே வந்து கொண்டிருந்தது. படத்தின் இறுதிக் காட்சியில், இறுதி யுத்தம் நடக்கும் போதும் சரி, இறுதி யுத்தம் முடிவடையும் போதும் சரி, நாயகனும் நாயகியும் தன் மகனை, தன் வளர்ப்பு மகளைத் தேடுவார்களே தவிர, அவர்களை நினைத்து பதைபதைப்பார்களே தவிர ஒரு காட்சியில் கூட, ‘மைல்ஸ்க்கு என்ன ஆனது? மைல்ஸ் எங்கே? அவன் உயிரோடுஇருக்கிறானா? தப்பிப் பிழைத்தானா?’ என்று ஒருமுறை, ஒருமுறை கூடத் தேடி இருக்கமாட்டார்கள். மனிதர்கள் தான் அப்படியிருப்பார்கள் என்றால், ஆதிகுடியான நாவிக்களும் அப்படியா இருப்பார்கள்? அப்படியென்றால் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம்தான் என்ன? வசிக்கும் கிரகம் மட்டுமே மாறி குணநலன்கள் அத்தனையும் ஒத்துப் போகிறதா?
இல்லை இப்படியெல்லாம் செய்தால் தான், மைல்ஸ் தன் அப்பனைக் காப்பாற்றும்போது, அந்தக் காட்சி இன்னமும் வலுவாக இருக்கும் என்று மீண்டும் அதே டெம்ப்ளேட் கதைக்குள் சிக்கிக் கொண்டாரா கேமரூன்? அப்படியென்றால் அவர் சேர்த்தே சிதைப்பது நாவிக்களின் வாழ்வியலையும் தானே! கதைக்களத்தைக் காட்டுவதில் நிகழ்ந்த அசுர பாய்ச்சல், கதைக்களத்தை நிறுவுவதில் இருந்த நிதானம், இரண்டும், கதையில் தவறுவதால், காட்சியின்பத்தில் நம்மை மறந்து மூழ்கத் தடையாக உள்ளது.