

பணம் உறவுகளைப் பிணைத்து, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். காதல் திருமணம் புரிந்து கொண்டு, ஊரை விட்டு ஓடி வந்த காந்தி, மனைவிதான் உலகம் என வாழ்பவர். காந்தி தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி எவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் செல்கிறார். கதிரும் காந்தியும் சந்தித்துக் கொள்வதில் தொடங்கும் படம், கதிரின் வாழ்க்கையில் அச்சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு முடிகிறது.
காட்சிரூபமாகக் கதைசொல்வதை விட வசனங்களின் மூலமே அனைத்தையும் சொல்லிவிடலாம் என்ற பாணியால், ஒரு ஃபீல்-குட் படத்திற்கான அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தும், படம் அதன் இலக்கை அடையத் தடுமாறியுள்ளது. ஒரு நல்ல ஐடியாவை எடுத்துக் கொண்டு, அதில் முழுத் திருப்தியுற்று, சுவாரசியமாகவோ நெகிழ்ச்சியாகவோ திரைக்கதையைக் கட்டியெழுப்பத் தவறியுள்ளனர். குறிப்பாக, அழுத்தமில்லாத கதாபாத்திர வார்ப்புகள், பார்வையாளர்களுக்குப் படத்தோடு பிணைப்பினை உண்டாக்கச் சிரமப்படுகிறது. காந்தியையும், அவரது ஆசையையும் சுற்றி நகர்ந்து கொண்டிருந்த படம், கண்ணம்மா தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் தருணத்தில் அடர்த்தியாகிறது. ஆனால் படம், அந்தக் கணத்திற்கோ, கனத்திற்கோ பார்வையாளர்களைத் தயார்ப்படுத்தவில்லை. கண்ணம்மாவாக அர்ச்சனா நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதிர்க்கு பணமே நோக்கம் என்றாகிவிட்ட பொழுது, Customer is king எனும் அடிப்படை தொழில் தர்மத்தைக் கூட மதிக்காமல், காந்தியைச் சகட்டுமேனிக்கு வாய்யா, போய்யா என்கிறார். 42 லட்ச ரூபாய் மதிப்பீடு செய்யப்படும் வேலைக்கு, 10 லட்சம் லாபம் வைத்து 52 லட்சம் என மாற்றிச் சொல்கிறார். காந்தி கோடீஸ்வரரான பின்பும்கூட கதிரின் மதிப்பிற்கோ, மரியாதைக்கோ ஆளாகவில்லை. ஆனால், கஸ்டமரைக் கிஞ்சித்தும் மதிப்பதில்லை கதிர். நகைச்சுவையாகவும் பயணிக்காமல், சீரியஸாகவும் பயணிக்காமல், ஒரு விலகல் ஆவர்த்தனத்தில் மையம்கொண்டுள்ளது. காரணம், கவுன்ட்டர் தருவதே நகைச்சுவை எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட டிவித்தனத்தை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது, ஒரு கதாபாத்திரத்தைச் செழுமையாக வடிவமைப்பதை விட முக்கியம் என்ற கருதுகோளில் ஊறியுள்ளார் இயக்குநர் ஷெரீஃப். அதனால்தான் 10 லட்சத்துக்கு மட்டுமில்லாமல், அதற்கு மேலும் கமிஷன்க்கு ஆசைப்படுபவராக நாயகன் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அதையும் அழுத்தம் திருத்தமாகப் பதியாமல், நாயகனான பாலாவை நெகடிவாகவும் காட்டிவிடக்கூடாதென்று தெளிவற்று (ஜாக்கிரதையாக) படத்தொகுப்பினைச் செய்துள்ளார் T.சிவநந்தீஸ்வரன். அதோடு நில்லாமல், நாயகனின் தவறை நாயகி சுட்டிக் காட்டியதும், ‘உங்களுக்கெல்லாம் புரியாது’ என male ego-வைக் குளிர்விக்கும் வகையில் வசனங்களால் நாயகன் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளுமாறு பார்த்துக் கொண்டுள்ளார் இயக்குநர் ஷெரீஃப்.
கதிரெனும் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் KPY பாலா. முத்தம் தர நமீதா கிருஷ்ணமூர்த்தியை நெருங்கும் போதும் சரி, காந்தியைக் காணோம் எனத் தெரிய வரும்போதும் சரி, பணப் பிரச்சனைகளால் சூழும்போதும் சரி, தன் தவறை உணரும்போதும் சரி, அனைத்துக்கும் ஒரே முகபாவனையைக் கொண்டு அசத்துகிறார். இவருக்கும் சேர்த்து, நமீதா கிருஷ்ணமூர்த்தி நிறைவாக நடித்துள்ளார். எனினும் குலுகுலு படத்திலிருந்த தனித்துவமோ, வசீகரமோ இல்லை. நாயகி நமீதா, நண்பராக வரும் மதன் என இருவருமே பாலாவின் மனநிலைக்கு எதிர்வினையாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மிகைமகிழ் மனிதரான காந்தியாகப் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். இந்தப் பாத்திரம் ரஜினிக்காக எழுதப்பட்டது என்றார் இயக்குநர். அதனால்தான் என்னமோ, நிலத்துக்கு 50 கோடி தர ஒருவர் தயாராக இருந்தும் 80 லட்சம் போதும் என்கிறார் காந்தி. பணத்துக்காக ஆசைப்படாதவராம். ரஜினி இப்பாத்திரத்தை ஏற்றிருந்தால் கூட, ஏழைகளுக்குத் தர மாதிரி காட்சியமைக்கச் சொல்லிக் கேட்டிருப்பார். பாலாஜி சக்திவேல் என்பதால் ஏமாந்துவிட்டு வரும் கதாபாத்திரமாகப் படைத்துள்ளார் இயக்குநர். சஸ்பென்ஸ் என்ற பெயரில், காந்தியைத் தேடும் அத்தியாயத்தையும் மையக்கதையில் இருந்து விலகி அலைக்கழித்துள்ளார்.
காதல் என்றால் என்ன என்ற பாலாஜி சக்திவேலின் வசனம் பேசுமிடம், யாரேனும் உதவி கேட்டால் அதை எப்படி அணுகவேண்டும் என்று பாலா சொல்லுமிடம், அர்ச்சனாவின் சிங்கிள் ஷாட் வசனம்என படம் இரண்டு மூன்று இடஙகளில் மட்டுமே இயக்குநரின் எழுத்து உயிர்ப்புடன் உள்ளது. படத்தின் ஆகப் பெரிய பலமாக அமைந்திருப்பது விஷுவல்ஸ். ஒளிப்பதிவாளர் பாலாஜி K.ராஜா மிக அழகான வண்ணங்களில் ஃப்ரேம்களை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

