மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார்.
அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, கடத்தலுக்குத் துணை புரிகின்றனர் நான்கு இலங்கைத்தமிழர்கள். இந்த மூன்றும் கதையும் ஒரு புள்ளியில் இணைந்து கலகலப்பாக பயணிக்கிறது படம்.
கெரஸ்கோஃபோபியா (Gerascophobia) எனும் வயதாகுதல் குறித்த அச்சத்தினையுடைய நவநாகரீக யுவதி வடிவுக்கரசியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். அந்தப் பயத்தைப் போக்குவதற்காக, Happy Menopause -ஐக் கொண்டாடும் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, வடிவுக்கரசியின் பயத்தைப் போக்குகிறான் கூகுள். கூகுள் எனும் அற்புதமான பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சந்தானம். ஓடிக் கொண்டே இருக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்ட மனித சமூகம், நின்று சக மனிதனிடம் பேசவே நேரம் ஒதுக்கத் தடுமாறுகையில், யாரென்ன உதவி கேட்டாலும் நின்று நிதானமாகக் கேட்பதோடு மட்டும் நில்லாமல் உதவவும் செய்கிறார் குலுபாய்.
பொதுவாக சந்தானத்தின் நகைச்சுவை என்பது மற்றவர்களைக் கலாய்ப்பதன் மூலமே நிகழும். ஆனால், இப்படத்தில் உடன் பயணிக்கும் பெண்களை எல்லாம் மிகக் கண்ணியமாக நடத்தும் பாத்திரம் வாய்த்திருக்கிறது அவருக்கு. A1 இல் கொஞ்சம் விதிவிலக்காக மற்ற கதாபாத்திரங்களுக்கு இடம் கொடுத்து அடக்கி வாசித்திருப்பார். அதே போல், இப்படத்தில் சந்தானத்திற்கு மற்றவர்கள் பேசுவதற்கு ரியாக்ஷன் செய்வது மட்டுமே வேலை. இலங்கைத் தமிழ் பேசும் ஜார்ஜ் மரியான், சிக்கணமாக இருக்க யோசனை சொல்லும் TSR, வில்லன் பிரதீப் ராவத்தின் தம்பியாக வரும் பிபின், லொல்லு சபா ‘மாறன்’, சேசு, ஹரிஷ் (முதலும் நீ முடிவும் படத்தின் சைனீஸாக நடித்தவர், தீனா, பாகற்காய் குழம்பா எனக் கடுப்பாகும் இளைஞன் என அனைத்துக் கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு காட்சியிலாவது நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கின்றனர். கடத்தப்படும் இளைஞனின் தந்தை குரலுக்கு, மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனின் குரலை உபயோகித்து, வெறும் குரலைக் கூட ரசிக்க வைக்கின்றனர்.
பப்ஜியில் தோற்றதால், அதற்குப் பழிவாங்க சைனாவில் இருந்து ஒரு கேங் துப்பாக்கிகளுடன் வருகின்றனர். பள்ளிச் சிறுமியை ஆளில்லாத இடத்துக்குக் கடத்திக் கொண்டு வருகின்றனர் இரண்டு இளைஞர்கள். இன்ஸ்டாகிராமில் ஃபோலோ செய்யும் பெண்ணின் முகவரி கண்டுபிடித்து பெண் பார்க்கச் செல்லுகிறான் ஒருவன். இப்படி படம் நெடுகே ஒரு காட்சிக்கு மட்டும் வரும் நபர்கள் கூட படத்தின் சுவாரசியத்திற்கு உதவியுள்ளனர். நமீதா கிருஷ்ணமூர்த்தி போல், படம் நெடுகே வரும் பாத்திரம் இல்லையென்றாலும் கூட மதில்டாவாக நடித்திருக்கும் அதுல்யா சந்த்ராவிற்கும் முக்கியமான ரோலைக் கொடுத்துள்ளார் ரத்னகுமார்.
கிறுக்கன்கள் தான் ஆபத்தானவர்கள் என்ற வசனத்தைத் தொடர்ந்து, ‘கிறுக்கனிடம் நாட்டைக் கொடுத்தால் என்னாகும் எனப் பார்க்கிறோம்ல!’ என்ற வசனத்தின் மூலம், தான் நம்பும் அரசியலைப் பேசவும் தவறவில்லை ரத்னகுமார். விஜய் கார்த்திக் கண்ணனின் அட்டகாசமான ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்குப் பெரும்பலம். ஒரே மாதிரி சீரியசான படங்கள் பார்த்து சலிப்படைந்த சூழலில், ஆசுவாசத்தை அளிக்கும் மாறுபட்ட காமெடிப்படமாக ரசிக்க வைக்கிறது குலுகுலு.