Shadow

“மக்களை மகிழ்விக்கும் புண்ணியர் கவுண்டமணி” – கே.ராஜன்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் கே.ராஜன், ”கவுண்டமணி நாடகத்தில் நடித்த போதே அவருடைய நடிப்பை ரசித்தவன் நான். சென்னையில் உள்ள பழைய கலைவாணர் அரங்கத்தில் அவருடைய நாடகங்கள் தொடர்ந்து நடைபெறும். அவருடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு அவரை நான் ’16 வயதினிலே’ படத்தில் பார்த்தேன். மக்களை மகிழ்விக்கின்ற புண்ணியமான காரியத்தைச் செய்கின்ற அவர் ஒரு அற்புதமான மாமனிதர்.

நானும், ஐசரிவேலனும் ஒரு முறை ஈரோடுக்கு அருகே உள்ள கருங்கல்பாளையம் என்ற ஊருக்குச் சென்றோம். அங்கு கவுண்டமணியின் ரசிகர்கள் இரவு 11 மணி அளவில் மீனைப் பிடித்து வறுத்து உணவருந்த வழங்கினார்கள். அவரை நான் சில நாட்கள் தான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் பொன்னான நாட்கள்.

கவுண்டமணி நடிக்க வந்த பிறகு தமிழ்த் திரையுலகம் பொற்காலமாக இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் பொற்காலம்.‌ இயக்குநர் கே. பாக்கியராஜ், இயக்குநர் பி. வாசு ஆகியோரின் ஆளுமையில் திரையுலகம் இருந்தது. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கவுண்டமணிக்காக ஓடிய படங்கள் ஏராளம். அவரை நம்பிய எந்தத் தயாரிப்பாளரும் கெட்டுப் போனதில்லை. காலம் தவறாது படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து தயாரிப்பாளருக்காகக் கடுமையாக உழைத்தவர்.

இயக்குநர் சாய் ராஜகோபால் பல படங்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதியிருக்கிறார். அவர் இன்று இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ ஒத்த ஓட்டை வாங்குகிறாரோ இல்லையோ ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளத்தைக் கவர்வார். அனைவரும் இந்தத் திரைப்படத்தை பார்ப்பார்கள். ஏனெனில் மக்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

தற்போது வெளியாகும் பல படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் கவுண்டமணி இருந்தார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சியில் கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்தான் ஆறுதலாக இருந்தன. அவர் என்றென்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்” என்றார்.