Shadow

“கவுண்டமணி மாற்றே இல்லாத ஜாம்பவான்” – கவிஞர் சினேகன்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ”இயக்குநர் என்னிடம் பேசும்போது, ஹீரோ கவுண்டமணி’ என்று சொன்னவுடன் வேறு எதையும் கேட்கவில்லை, நான் பணியாற்றுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தேன். சந்தானம், யோகி பாபு ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, ‘கவுண்டமணி தான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன்’ என சொல்ல கேட்டு இருக்கிறேன். அதனால் கவுண்டமணி தான் ‘பஞ்ச் கிங்’ என்று சொல்வேன்.

இந்தப் படத்தில் பாடல்களைப் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன் ஆகியோர் நன்றாக எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். கதாசிரியராக மட்டுமில்லாமல் இந்தப் படத்தை சாய் ராஜகோபால் நன்றாக இயக்கியிருக்கிறார். பொதுவாக மக்களைச் சிரிக்க வைப்பது என்பது கடினமான காரியம். அதனை இயக்குநர் எளிதாகச் செய்திருக்கிறார்,” என்றார்.

பாடலாசிரியர் சினேகன், ”இந்த மேடை எனக்கு முக்கியமான பதிவு. சின்ன வயதில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் போது ஒட்டியிருக்கும் போஸ்டரில் ‘கவுண்டமணி- செந்தில்’ இடம் பிடித்திருப்பார்கள். உடனே என்னுடைய நண்பர்கள், ‘இந்தப் படத்திற்குச் செல்லலாமா?’ எனக் கேட்பார்கள். அந்தப் படத்தின் நாயகன் யார், நாயகி யார் என்பதெல்லாம் தெரியாது. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருக்கும் படத்திற்குச் செல்லலாமா எனக் கேட்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இதன் காரணத்தினாலேயே நான் இந்த மேடையில் நிற்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.

கவுண்டமணி ஐயாவைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் மணிக்கணக்கில் பேசலாம். சினிமாவில் கதாநாயகர்களை நம்பி படம் எடுத்தார்களோ இல்லையோ, கவுண்டமணியை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நிறைய பேர். இன்றும் அவர்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள்.

மிகப் பெரிய நிகழ்வைக் கூட ஒரு சிறிய புன்னகை மூலம் கடந்து செல்லலாம் என்பதை உணர்த்தியவர் அவர். அகில உலக சர்வாதிகாரியான ஹிட்லரை ஒரு நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் தான் ஒரு கேலியான சிரிப்பு மூலம் கடந்து போக வைத்தார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இயக்குநர் ராஜகோபால் பத்து ஆண்டுக்கு முன் என்னை நாயகனாக வைத்து படம் எடுப்பதற்காக என்னிடம் கதை சொல்ல வந்தார். அன்றிலிருந்து அவருடனான என்னுடைய நட்பு தொடர்கிறது. அந்தத் தருணத்தில் அவரிடம் கவுண்டமணி பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து பாடல் எழுதலாமா எனக் கேட்டேன். அவர் பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதலாம் போலிருக்கிறது. அவ்வளவு பன்ச் டயலாக்கை அநாயாசமாக பேசி இருக்கிறார். இந்தப் படத்தில் எது தேவையோ, அதை மட்டுமே வைத்து ஒரே ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். அந்தப் பாடல் அனைவராலும் ரசிக்கப்படும் என நம்புகிறேன். அத்துடன் கமர்ஷியலான பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன்.

திரையுலகில் அனைவருக்கும் மாற்று இருக்கிறது. ஆனால் கவுண்டமணிக்கு மட்டும் மாற்று இல்லை. ஒரே ஒரு கவுண்டமணி தான். ஒரே ஒரு ஜாம்பவான் தான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஏனெனில் அவர் திட்டினால் மட்டும்தான் யாருக்கும் கோபம் வராது. அவர் அனைவருக்கும் பிடித்த கலைஞர். அவரைக் கொண்டாட வேண்டிய காலகட்டம் இது” என்றார்.