Shadow

“தம்பி கலக்கிட்டான்” – ஆர்யா | கெளதம் கார்த்திக் | Mr. X

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)’ ஆகும்.

வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் ஆர்யா, “இந்தப் படத்துக்கு என்னைச் சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மிகப்பெரிய பட்ஜெட் ஆகுமே என தயாரிப்பாளரிடம் கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரமிப்பான திரையரங்கு அனுபவத்தைக் கொடுப்பதற்காக சமரசம் இல்லாமல் இந்தப் படத்தை எடுத்து தான் ஆக வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஓடிடி எல்லாவற்றையும் தாண்டி திரையரங்குகளை மட்டுமே நம்பி நாம் படம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் லப்பர் பந்து. அதனாலேயே அவர் இந்தக் கதை மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார். இயக்குநர் மனு ஆனந்த் எல்லாவற்றிலும் பெர்ஃபெக்‌ஷனாக இருக்கக்கூடியவர். எந்த ஒரு காட்சியையும் அழகான முன்கூட்டிய திட்டமிடலுடன் படமாக்கினார். அதனால் தான் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை சரியான நேரத்திற்குள் எடுத்து முடித்தார்.

இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்தக் காட்சிகளைப் படமாக்கினார். இப்படி ஒரு ஒளிப்பதிவாளரைப் பார்ப்பது ரொம்பவே அரிது. ஆக்சன் படம் என்பதால் இசை ரொம்பவே முக்கியம். இசையமைப்பாளர் திபு நிணன் அந்த அளவிற்கு இந்தப் படத்திற்கு தனது ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். சில்வா மாஸ்டர் கிட்டத்தட்ட 80 நாட்கள் இந்தப் படத்தில் பணியாற்றினார். படம் முழுவதுமே ஒரு ஆக்சன் மூடு இருக்கும். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட படத்தின் இணை இயக்குநர் போலவே அவர் பணியாற்றினார்.

கெளதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனுவும் பேசும் போது கூட “தம்பி கலக்கிட்டான்” என்று தான் அவரது நடிப்பைப் பற்றிக் கூறுவோம். இந்தக் கதாபாத்திரத்தை தமிழில் இவரைத் தவிர வேறு யாருமே பண்ண முடியாது என்பது போல சரத்குமாருக்கு என அளவெடுத்து தைத்த சட்டை போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது.

சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் அவர் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன்.

மஞ்சுவாரியார் இந்தப் படத்தில் கதாநாயகியாக கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்று மனு ஆனந்த் புலம்பும் அளவுக்கு இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே வலுவானது. கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவரைப் பின் தொடர்ந்து இந்தப் படத்திற்கு நடிக்க அழைத்து வந்துள்ளார்.

நாயகி அனகா ஒவ்வொரு காட்சிக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்பார். ஒரு படத்தில் கூட இவ்வளவு சந்தேகங்கள் கேட்க முடியுமா என ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சனும் ஆக்சன் காட்சிகளுக்காக தினசரி ஆறு மணி நேரம் ரிகர்சல் எடுத்தார்கள். காரணம் பெண்கள் சண்டை போடுகிறார்கள் என்றால் பார்ப்பதற்கு அது போலியாக இருப்பது போல் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தப் படத்தில் மட்டுமே நடித்தேன். இந்தப் படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.