Shadow

Mr. X | தொலைந்த ஏழு ப்ளூட்டோனியம் கேப்ஸ்யூல்ஸ்

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)’ ஆகும்.

வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் S.லஷ்மன் குமார், “இந்தப் படம் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படம். மனு ஆனந்த் எஃப்ஐஆர் படத்தை முடித்துவிட்டு இந்தக் கதையை எங்களிடம் சொன்னார். அவர் கதை சொன்னபோது எதுவுமே நம்புகிற மாதிரி இல்லை. ஆனால் அவர் சொன்ன நான்கு சம்பவங்கள் பற்றிக் கூறியதும் தான் அவற்றை நம்ப முடிந்தது. 1965இல் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு சீனாவைச் சமாளிப்பதற்காக இமயமலையில் உள்ள நந்தாதேவி மலைக்கு ஏழு புளூடோனியம் கேப்ஸ்யூல்ஸ் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அங்கு எதிர்பாராமல் அவை தொலைந்து விடுகின்றன. இப்போது வரை அவை கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்து நிறைந்த ஒரு விஷயம் அது. 1977இல் அமெரிக்காவில் வெளியான ஒரு பத்திரிக்கைச் செய்தி மூலமாகத் தான் இது வெளியே தெரிய வந்தது. இந்தப் படத்தின் ஆரம்பப் புள்ளியே அதுதான்.

அப்படி ஒரு நியூக்ளியர் கேப்ஸ்யூல் காணாமல் போனதன் பின்னணி, அதன் விளைவு ஆகியவற்றை உண்மைக்கு ரொம்ப நெருக்கமாகக் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கியுள்ளோம்.

போலீஸ் அதிகாரிகளுக்கு, ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கான செயல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. ஆனால் நாட்டுக்காகத் தங்களை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றும் உளவுத்துறை வீரர்களுக்கு அது கிடைக்காமலேயே போய் விடுகிறது.

சர்தார் படத்திற்காக அந்தப் படத்தில் பணியாற்றிய இரண்டு நடிகர்களின் தந்தைகளே கூட இப்படி உளவுத்துறையில் பணியாற்றியவர்கள் தான். அந்தச் சமயத்தில் கதைக்காகப் பேசும்போது தான் அவர்கள் பற்றிய உண்மை தெரிய வந்தது. அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புக்காகத் தடுத்து நிறுத்திய விஷயங்கள் பல. அப்படி வெளியே தெரியாமல் போன அந்த வீரர்களின் தேசப்பற்றுக்குக் காணிக்கை செலுத்தும் விதமாகத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் ரொம்பவே கற்பனையை விரித்து விடாமல் நிஜத்திற்கு பக்கத்தில் இருந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்காகப் போடப்பட்ட செட்டுகளாகட்டும் அல்லது நிஜமான லொகேஷன் ஆகட்டும் எல்லாமே பிரம்மாண்டமானவை தான். ரசிகர்களுக்கு நிச்சயமாகத் திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் தரும் என நம்புகிறோம்” என்று கூறினார்.