Shadow

ஜிப்ஸி விமர்சனம்

gypsy-movie-review

ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார்.

அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள் தானென இயக்குநர் ராஜு முருகனுக்கு ஓங்கி உரக்க அறிவிக்க வேண்டுமென்ற அவரது ஆவல் புரிந்தாலும், வஹிதாவின் மனநிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருந்தது. அன்றைய இரவோடு, ஜிப்ஸியுடன் சுதந்திரப் பறவையாய்க் கூட்டில் இருந்து பறக்க விரும்பிய அவளது மனம், ‘பாகிஸ்தானியர் தான உங்க ஆளுங்க’ எனச் சொன்ன நொடியிலேயே சுக்குநூறாய் உடைந்திருக்கும். படத்தின் அழகியல், பேச விழையும் அரசியல் என சகலமும் அப்புள்ளியிலேயே நழுவி விடுகிறது.

இடைவேளை வரை, தான் சொன்ன விழைந்த கதைக்குள் செல்லாமலும், கதாபாத்திரங்களையும் சரியாக வடிக்கத் தவறியுள்ளார் ராஜூ முருகன். ஸ்னீக் பீக்காக, சென்சார் கட் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியிருப்பது மதிநுட்பமான யோசனை. இதுவரை வந்த இரண்டு ஸ்னீக் பீக்கையும் படத்தில் சேர்த்துப் பார்த்தாலும் கூட, இந்தப் பத்தியின் முதல் வரியில் எந்த மாற்றமும் இல்லை.

இரண்டாம் பாதியில் வரும் கலவரக் காட்சிகள் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. அதுவும் டெல்லிக் கலவரத்தின் வெப்பம் தணியாத சூழலில், அடிப்படைவாதிகளால் தூபமேற்றப்பட்டு உருவாக்கப்படும் கலவரக்காரர்களின் வெறி எந்தளவுக்குச் செல்லும் என்பதை அழகாகச் சித்தரித்துள்ளார் ராஜூ முருகன். ஆனால், அக்கலவரத்தால் பாதிக்கப்படும் ஜிப்ஸியின் தனிப்பட்ட சோகமும் வலியும், பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை. அதன் பின் ஜிப்ஸி, கேரளா சென்று மனைவியை மீட்கப் போராடுகிறார். அந்தக் கலவரம், ஒரு குடும்பத்தை எப்படிச் சிதைக்கிறது என அகவயமாக உணர முடியவில்லை. குதிரையின் பெயர் ‘சே’ என்றளவில், அக்கலவரமும் புறவயமான ஒரு நேரடிச் சண்டை என்றளவிலேயே இருக்கிறது. காரணம், வஹிதாவின் பிரிவு ஜிப்ஸியை எப்படிப் பாதிக்கிறது என்பது சரியாகச் சொல்லப்படவில்லை. கலவரத்தால் மூடிக் கொள்ளும், தன் பிரிய மனைவியின் மனக்கதவுகளைத் திறக்க, மலையாள எழுத்தாளரின் சிலைக்குக் கீழே புரட்சிப் பாடல் பாடுகிறார். ஙே!!

படத்தின் தொடக்கத்திலேயே, ‘தேசாந்திரி பாடும் பாடலே’ என்ற பாடலின் மூலம் மனதைக் கொள்ளை கொள்கிறார் சந்தோஷ் நாராயணன். மனைவிக்காக உருகும் நேரத்தில் பாடும் பாடலோ, தன்னோட ஆயுதம் தெருப்பாடல் என உணர்ந்து Peace concert செய்யும் ஜிப்ஸி பாடும் பாடலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், குக்கூ போலவோ, ஜோக்கர் போலவோ, இப்படமும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும்.

வஹிதாவின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் மலையாள இயக்குநர் லால் ஜோஸ் கலக்கியுள்ளார். அவரது மலையாள நெடியுடன் கூடிய தமிழ், படத்திற்கு ஒரு தனி அழகைத் தந்துள்ளது. முத்தலிப்பின் நம்பிக்கையும் மனநிலையும் புரிவதால், நாயகன் – நாயகியை விட அதிகமாக மனதில் இவர்தான் பதிகிறார். கேரளத்துத் தோழர் பாலனாக நடித்திருக்கும் சன்னி வேய்னும் தனித்துத் தெரிகிறார்.

பியூஷ் மானுஷ், எழுத்தாளர் சல்மா, பாடகர் சுஷீலா ராமன், சீக்கியப் பாடகர் பண்ட் சிங் எனப் படத்தில் நிறைய ஆளுமைகளைக் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தியுள்ளார் ராஜூ முருகன். வஹிதாவாக நடித்திருக்கும் அழகான நடாஷா சிங் நிறைவாக நடித்துள்ளார். ஜீவாவும். எம்ஜியார் போல் பாராமுகமாய் இருக்கும் நாயகன் மேல் நாயகிக்கு எப்படிக் காதல் வந்தது என்பதுதான் மிகப்பெரும் புதிர். காதலும், புதிரும் வெவ்வேறல்ல என்பதால் ராஜூ முருகன் தைரியமாக, நாயகிக்கு நாயகன் மேல் கண்டதும் காதல் என வைத்துவிட்டார் போலும். காதல், மதப் பிரிவினை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்துள்ளதார். இரண்டு குதிரைகளுமே தனது பாதையில் கவனமாக இல்லாமல் இலக்கைத் தவற விட்டுள்ளதால், படம் எத்தகைய தீர்மானமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மய்யத்தில் விட்டுள்ளது.