Shadow

எட்டுத்திக்கும் பற விமர்சனம்

ettu-thikkum-para

சாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா.

திரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ,  இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது.

வயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்குரைஞர் அம்பேத்கராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவரை ஒரு ‘க்ளிஷே’வில் அடைத்துவிட்டனர். சிறைக்கைதியாக வந்தாலும் சரி ஆசிரியராக வந்தாலும் சரி, வழக்குரைஞராக வந்தாலும் சரி, அல்லது எந்தக் கதாபாத்திரமாக வந்தாலும் சரி, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ஏற்றயிறக்கத்துடன் வசனங்கள் பேசுபவராக அவரது கதாபாத்திரம் தேங்கி விடுகிறது.

இதைத்தான் பேசப் போகிறோம் என்பதில் இயக்குநர் வ.கீராவிற்கு இருந்த தெளிவு, அதை எப்படிச் சுவைபடச் சொல்லப் போகிறோம் என்பதில் இல்லாமல் போய்விட்டது. மேலும் வசனங்களில் தொனிக்கும் அரசியலைக் கதையின் ஓட்டத்தோடு இழையோட விடாமல், அரசியலைப் பேசவென்றே காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. கதாபாத்திரங்களிடம் கொடுத்த வசனத்தைப் பேசியுள்ளனரே தவிர, படத்தில் எவருமே கதாபாத்திரமாக மாறி, அதற்கு உயிர் கொடுக்கும் ரசவாதத்தைச் செய்யவில்லை.

பரியனை அறிய முடிந்ததால், பரியனுடைய கேள்வி மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘ஏன் சார் நாங்க காதலிக்கக் கூடாதா?’ என்ற சாந்தினியின் கேள்வி கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய்விடுகிறது. ‘நான் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்’ என சாலையோரம் வாழும் நிதிஷ் வீராவிடம் முனீஷ்காந்த் சொல்லும் படத்தின் ஒரே ஆறுதல்.

படத்தின் தலைப்பிற்கும், கதைக்கருவிற்கும் கூடச் சம்பந்தமில்லாத அளவு திரைக்கதை மிகவும் பலவீனமாய்ப் பயணிக்கிறது. அந்த முதிய தம்பதி மட்டுமே சமூகத்தின் தளைகளில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு விடுதலையை நோக்கி நகர்கிறார்கள். மற்றவர்கள் யாரும் பறப்பதில்லை.  காதலிப்பது பறத்தலில் வருமா? அல்லது சாதி வெறியர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி வருவதுதான் பறத்தலா? காட்சிகளில் தென்படும் ஜம்ப் படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் க்ளைமேக்ஸ் பார்வையாளர்கள் உறைய வைத்திருக்கவேண்டும். பறப்பதன மேன்மையைப் பேசாவிட்டாலும் கூட, பறக்க நினைத்தால் சிறகினை வெட்டி விடுவோம் என்ற எதிர்தரப்பு அரசியலின் வன்மத்தையாவது வ.கீரா ஒழுங்காகச் சித்தரித்திருக்கலாம்.