பிறப்பிலிருந்தே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று வெறி கொண்டு அலையும் ஒரு கதாபாத்திரம். பிறப்பிலிருந்தே எந்தவொரு நோக்கமும் இன்றி தான் தோன்றித்தனமாக அலைந்து திரியும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைக்கிறது. இந்த இரு நேரெதிர் கதாபாத்திரமும் அந்த சக்திக்காக மோதிக்கொள்ளும் மோதலே இந்த “ஹனுமான்” திரைப்படம்.
இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமிப்பூட்டும் காட்சிகளை படைக்கத் துவங்கி இருக்கும் இந்த நேரத்திலும், அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் நேரத்திலும் இந்த ‘ஹனுமான்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பாகுபலி தொடங்கி ஆதிபுருஷ் திரைப்படம் வரை சிஜி தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடனும் கற்பனையான காட்சிகளை திரைக்கு கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை இந்தியச் சினிமா சாத்தியப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மிகச்சிறந்த விஷ்வல் எஃபெக்ட் காட்சிகளுக்காகவே ‘ஹனுமான்’ திரைப்படம் பாராட்டுக்களைப் பெற்று வருவது கவனத்துக்குரியது. மேலும் சூப்பர் ஹீரோ கதைப் பின்னணியில் கடவுள் பக்தியைக் கலந்த திரைக்கதை வட இந்திய இரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெறும் என்றும் கணிக்கப்படுகிறது.
’ஹனுமான்’ திரைப்படத்தில் கற்பனையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த அஞ்சனாத்ரி நகரமே படத்தின் இயக்குநர் மேல் பிரம்மாண்டமான நம்பிக்கை வரச்செய்யும் மாயத்தை நிகழ்த்திவிடுகிறது. படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் அந்த மலையும், மலையுடன் கூடிய அனுமன் சிலையும், அந்த சிற்றாறும், ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் ஊரின் அழகும் நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.
அஞ்சனாத்ரி ஊரில் ஹனுமந்தா என்னும் லோக்கல் திருடனாக அறிமுகமாகி, பொறுப்பில்லாமல் ஊர் சுற்றித் திரியும் இளைஞனாக தேஜா சஜ்ஜா நடித்திருக்கிறார். துவக்கத்தில் தன் அக்காள் வரலட்சுமி தன் மீது வைத்திருக்கும் அன்பை உதாசீனப்படுத்தி சுற்றும் போதும், வரலட்சுமி தன் மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்து திருந்தும் போதும், தெய்வ சக்தி அடங்கிய சிமிழ் தன்னிடம் வந்ததில் இருந்து நடக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதிலும், தன் சக்தியை உணர்ந்து கொண்டு ஊரில் அடாவடி செய்து கொண்டு அலையும் மல்யூத்த வீரனை வீழ்த்தி வெற்றிவாகை சூடும் போதும் நடிப்பில் பல பரிமாணங்கள் காட்டி வியக்க வைக்கிறார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கும் நடிகை என்று பெயர் எடுத்த வரலட்சுமி சரத்குமார், இப்படத்திலும் தாய் தந்தையை இழந்த தன் தம்பியை ஒரு தாயாக இருந்து பொறுப்புடன் வளர்த்து ஆளாக்கும் அக்காள் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். தனக்குத் திருமணம் நடந்து சென்றுவிட்டால் தன் தம்பியின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்று பயந்து திருமணத்திற்குப் பின்னரும் தன் தம்பி தன்னோடு வருவேன் என்று நிபந்தனைகளிட்டு, அதனாலேயே திருமணம் தள்ளிப் போக, அதை பெரிதும் பொருட்படுத்தாமல், பொறுப்பின்றி அலையும் தம்பியை வெறுத்து ஒதுக்காமல் பாசம் காட்டும் அஞ்சம்மா கதாபாத்திரம் திரைக்கதைக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கரியருக்கும் வலு சேர்க்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஐயருக்கு காதல் செய்யும் வேலை தான் படத்தில் பிரதானமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பள்ளி காலக் காதல் என்பதாலும், படத்தின் மையம் காதல் இல்லை என்பதாலும், கதாநாயகி என்னும் ஒரு வெற்றிடத்தை நிரப்பிச் செல்லும் கதாபாத்திரமாகவே அவர் வந்து செல்கிறார். நடிப்பில் குறையேதுமில்லை.
வினயின் மருத்துவ நண்பராக வரும் வெண்ணிலா கிஷோர் ஆரம்பத்தில் வில்லத்தனமாக அறிமுகமானாலும், ஒரு கட்டத்திற்கு மேல் நல்லவராக மாறிப் போவதோடு, ஆங்காங்கே காமெடி கலகலப்பிற்கும் உத்தரவாதம் கொடுக்கிறார்.
சிறுவயதில் இருந்தே தான் ஒரு சூப்பர்மேன் ஆக வேண்டும் என்கின்ற நோக்கத்தில், பெற்றோர்கள் இல்லாமல் இருப்பதும் சூப்பர் மேன் ஆவதற்கான ஒரு தகுதி என்கின்ற முட்டாள்தனமும், கலக்க, தன் பெற்றோரையே கொலை செய்யும் உச்சக்கட்ட கொடூரத்தனம் நிரம்பிய வில்லன் கதாபாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார். தன் மருத்துவ நண்பர் வெண்ணிலா கிஷோரை உடன் வைத்துக் கொண்டு தன்னை ஒரு சூப்பர் மேன் ஆக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளையும் உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வரும் வித்தியாசமான கதாபாத்திரம். நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கும், ஆக்ஷனில் ஸ்கோர் செய்வதற்கும் சரிசம வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக்காட்சிகளில் வினயின் நடிப்பில் அசுரத்தனம் தெரிகிறது.
ஹனுமான் திரைப்படம் எப்படி ஒரு குரங்கு இல்லாமல் முழுமையடையும். படத்தில் ஒரு குரங்கு கதாபாத்திரமும் இருக்கிறது. குரங்கு கதாபாத்திரத்திற்கு தெலுங்கின் மாஸ் ஹீரோ ரவி தேஜா குரல் கொடுத்திருக்கிறார். இந்த குரங்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவாளர் சிவேந்திராவின் ஒளிப்பதிவு ‘ஹனுமான்’ திரைப்படத்திற்கு அசுரபலத்தைக் கொடுக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியான அவரின் ஒளிப்பதிவு படம் பார்த்து பலமணி நேரம் ஆகியும், நம் கண்களில் குளுமையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
கவுரஹிரி, கிருஷ்ணா சவுரப் மற்றும் அனுதீப் தேவ் மூவரும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் படத்திற்கு தொடர்பில்லாமல் இடைச்செறுகலாகவும் தேவையற்ற தொந்தரவுகளாகவுமே இருக்கிறது.
ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் கே.நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைத்தன்யா இப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யூனிவர்ஸின் முதல்படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஹீரோ கதையில் தெய்வ நம்பிக்கையை கலந்த விதமும், அது ஓவர் டோஸ் ஆக மாறிவிடாமல் இருந்த கவனமும் பாராட்டுக்குரியது. உலகத்தரத்திலான விஷ்வல் எஃபெக்ட் காட்சிகளை குறைந்த பட்ஜெட்டில் சாத்தியப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அவருக்கும் அவரின் குழுவினருக்கும் நம் பாராட்டுக்கள்.
ஹெலிகாப்டரை கயிறு வீசி இழுப்பது, ரயிலின் வழித்தடத்தை மாற்றி அமைப்பது என்பதான சூப்பர் ஹீரோ சாகசங்கள், மயக்க மருந்து புகை, அனுமானின் ரத்த துணுக்குகள் அடங்கிய சிமிழ், சமுத்திரக்கனி கதாபாத்திரத்தைக் கொண்டு பார்வையாளர்களை தயார்ப்படுத்தியது என படத்தில் பாராட்டுதலுக்குரிய பல விசயங்கள் இருந்தாலும், ரெகுலர் டெம்ப்ளட்டில் அமைந்த சூப்பர் ஹீரோ கதை, சொதப்பலான சுவாரஸ்யங்கள் இல்லாத இரண்டாம் பாதி, தேவையற்ற இடங்களில் வரும் பாடல்கள் போன்றவை படத்தின் குறைகள்.
இருப்பினும் ஒரு கற்பனையான உலகத்தை அவர்கள் நிஜத்தில் உருவாக்கி நம் கண் முன்னே பரிசளித்து விருந்து படைத்திருப்பதற்காகவும், சிறப்பான முதல்பாதிக்காகவும், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதற்கான கதைக்களம் கொண்டிருப்பதாலும், “ஹனுமான்” வணக்கம் மற்றும் கொண்டாட்டத்திற்கான கடவுளாக மாறி நிற்கிறார்.
மதிப்பெண் – 2.75 / 5.0