Shadow

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.

பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.

ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ மற்றும் வில்லன்களுக்கு இடையேயான ’டக் ஆஃப் வார்’ படத்தை சோர்வு தட்டாமல் எடுத்துப் போகிறது.

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஜி-20 சர்வதேச மாநாட்டில் சதி வேலைகள் செய்ய களமிறங்கும் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவு தலைவனும், தன் ஐந்து வயது மகளை அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டனுக்கு அழைத்து வந்திருக்கும் நாயகனும், எப்படி எங்கே, எந்த சூழலில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் இருவருக்குமான பின்கதையும், அந்த சந்திப்பைத் தொடர்ந்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் தான் “மிஷந் சாப்டர் 1” திரைப்படத்தின் கதை.

நாயகன் அருண் விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். அதை தனக்கான பெருந்தீனி என்பதை உணர்ந்தவராக வெளுத்து வாங்கி இருக்கிறார்.  உருண்டு திரண்டு திமிறி நிற்கும்  தோள்கள் மற்றும் புஜங்களுடன் சிறைச்சாலையில் கைதியாக சட்டையின்றி நிற்கும் காட்சியிலேயே, இவன் எத்தனை பேரை வேண்டுமானாலும் அடிப்பான் என்கின்ற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திவிடுகிறார். அது சண்டைக்காட்சிகளில் மிகுந்த ஒத்துழைப்பை நல்கி இருக்கிறது.  ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமின்றி, குரலை வைத்தே தன் எதிராளி யார் என்பதைக் கண்டறிந்து, கைதிகள் தப்பிக்க முயற்சிப்பதற்கான வழி இதுவாகத் தான் இருக்கக்கூடும் என்பதை யூகிப்பதும், சமையலறையில் கைதிகளிடம் மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படும் சிப்பந்திகளை மீட்பதற்கு முன் வைக்கும் யோசனைகளும் என அருண் விஜய் கதாபாத்திரம் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

லண்டன் சிறையின் சிறைத்துறை அதிகாரியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு சற்று பலவீனமானது தான்.  கைதிகள் கண்டாலே நடுநடுங்கும் மிகுந்த கொடூரமான ஜெயிலர் என்பது போல்  அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்டப் காட்சிகள் இருக்க, அதை நிருபிப்பதற்கான பின் அத்தியாய காட்சிகள் ஏதும் இன்றி அந்த கதாபாத்திரம் சிதைவுக்கு உட்பட்டு இருக்கிறது.  தன் கட்டுப்பாட்டில் இருந்த சிறை, தன் கண் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை விட்டுப் போவதையும், கட்டுக் கடங்காத கலவரம் கட்டவிழ்த்து விடப்படுவதை பார்த்து திகைத்துப் போய் செய்வதறியாது திகைக்கும் இடங்களிலும் சிறப்பாக நடித்திருக்கும் எமி, பிற காட்சிகளில் பெரும்பாலும் அருண் விஜயின் வீரதீர பராக்கிரமத்தைக் கண்டு மெய்சிலிர்த்து நிற்கும் சிலையாக சிறுத்துவிடுகிறார்.

லண்டன் பெருநகர மருத்துவமனையில் செவிலியராக வரும் நிமிஷா விஜயன் தன் இயல்பான நடிப்பால் வசீகரிக்கிறார்.  நான் மலையாளி நீங்க தமிழ், நீங்க என் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி என்று சொல்லி இயல்பாக உதவ வரும் இடத்திலும், அருண் விஜய்க்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க முனையும் முனைப்பிலும் , ஒரு தாய் போல் பேபி இயலுடன் இருந்து கவனித்துக் கொள்வதிலும், அக்குழந்தையை காப்பாற்ற தன் உயிரை பணய வைக்கும் பொழுதிலும் உயர்ந்து நிற்கிறார்.

நாயகிகளாக வரும் இந்த இருவரையும் தாண்டி ‘பையா, பையா’ என்று பாசமாக அழைத்துக் கொண்டு உடன் வரும் அபிஹாசன் பார்வையாளர்களை அதிகமாக கவருகிறார். நட்புக்கு தோள் கொடுக்க முயன்று துரோகத்தினால் தன் உயிரை விடும் காட்சிகளிலும், போலீஸே விதர்த்துப் போய் கைதிகளின் கூட்டத்திற்குள் நுழைய யோசிக்கையில் நட்பிற்காக துணிந்து அந்தக் கூட்டத்தில் இறங்கும் போதும் அந்த கதாபாத்திரம் நெடுதுயர்ந்த கதாபாத்திரமாக நம் மனதில் நிற்கிறது.

மருத்துவமனையில் ஆண் செவிலியர் கதாபாத்திரத்தில் வரும் நாசர் மகன் நூருல் ஹசனும் வெறுப்பை தன் நடிப்பிற்கான வெகுமதியாக நம்மிடம் இருந்து சம்பாதிக்கிறார். சின்ன சின்ன செயல்பாடுகளில் கூட லாப நோக்கோடு செயல்பட்டு, குழந்தையை விற்கத் துணியும் கயமையுடன் அக்கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைப்பட்டு, முதல் பாதியின் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக அக்கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தீவிரவாதக் குழுவின் தலைவனாக வரும் பரத் போபண்ணா கதாபாத்திரம் புத்தி மலுங்கலுடன் படைக்கப்பட்டு இருப்பது படத்தின் மற்றொரு பலவீனம். கைதிகளை மீட்க நடத்தும் துரித நடவடிக்கைகளும், தன் கட்டளையை கண்டு கொள்ளாமல் செயலாற்ற துணியும் போலீஸ் அதிகாரியை பயமுறுத்த கையிலெடுக்கும் ஆயுதத்திலும் புதுமை இல்லாமல் இருப்பதால் மற்றொரு தீவிரவாத தலைவனாக சுருங்கிப் போகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் நம் நாடி நரம்புகளில் முறுக்கேறும் அளவிற்கு பின்னணி இசையின் ஆளுமை நம் மனதில் தனி ஆவர்த்தனம் புரிகிறது.  நீரவ்ஷா ஒளிப்பதிவில் லண்டன் மாநகரின் நகர வீதிகளும், பேருந்தும், மருத்துவமனையும், பிரம்மாண்ட ஜெயில் செட்டப்பின் இருண்மையும், புதிரும் புத்தம் புதிதாக கண்களில் பதிவாகிறது.  ஆண்டனி-யின் எடிட்டிங் கனகச்சிதம்.

இது போன்ற அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்திற்கு  சண்டைக் காட்சிகள் எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பொறுத்து தான் படத்தின் ரிசல்ட் அமையும். அந்த விதத்தில் படத்தின் ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா இப்படத்திற்கான சண்டைக்காட்சிகளை மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். லண்டன் மாநகரப் பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சியிலும்,  லண்டன் சர்வதேச சிறைச்சாலையில் கைதிகளுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக மாட்டிக் கொண்டு அருண் விஜய் சண்டை செய்யும் காட்சிகளும் சர்வதேச தரத்துடன் படமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த சண்டைக்காட்சிகளுக்கு அருண் விஜயின் கட்டுமஸ்தான உடற்கட்டும், நம்பகத்தன்மையுடன் கூடிய காட்சி அமைப்பும் கூடுதலாக உயிர் கொடுக்கின்றன.  கிட்டத்தட்ட படத்தின் இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் திரைக்கதை நிரப்பப்பட்டு இருக்கிறது.

பழகி சலித்த பாகிஸ்தான் தீவிரவாதியின் கதை, ஓரிரு இடங்களில் எல்லை மீறும் ஹீரோயிசம்,  நாட்டிற்காக தன் மகளின் உயிரையும் பொருட்படுத்தாத போலீஸ் அதிகாரி என்பதான பொய்மை, அந்த நேர்மையான அதிகாரியே ஹவாலா பின்னணியில் பணப் பரிமாற்றம் செய்வது, எளிதில் யூகிக்கக் கூடியதும், சில லாஜிக் ஓட்டைகளும் நிரம்பிய இரண்டாம் பாதி, போன்ற பலவீனங்கள் திரைக்கதையில் இருக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும்  இயக்குநர் ஏ.எல்.விஜயின் ஸ்பெஷன் ஸ்கோரிங் ஏரியாவான சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான உணர்வுபூர்வமான பந்தம்,  நாயகன் மற்றும் இன்னும் சில கதாபாத்திரங்களின் பாத்திர வடிவமைப்பு, துரித வேகத்துடன் செல்லும் முதல்பாதி திரைப்படம்,  இரண்டாம் பாதியின் சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள், ஆக்சன் காட்சிகளுக்கு பார்வையாளர்களை தயார் செய்யும் முந்தைய காட்சிகளின் டெம்போ என அனைத்தும் மிகச்சரியாக அமைந்திருப்பதால் “மிஷன் – சாப்டர் 1” புறக்கணிக்க முடியாத திரைப்படமாக மாறுகிறது.

மேலும் பொங்கல் திரைப்படத்திற்கான ரேஸில் அனைத்துப் படங்களுமே ஆவரேஜ் என்கின்ற கேட்டகிரியில் முட்டி மோத,  அதில் சிறப்பான ஆக்சன் காட்சிகள் மற்றும் அதற்கேற்ற திரைக்கதையையும் கொண்டு இருப்பதால் ‘மிஷன் சாப்டர் 1’  அந்த வரிசையில் கொஞ்சமாய் முந்துகிறது.

”மிஷன் சாப்டர் – 1” – ஏமாற்றமில்லை

மதிப்பெண் 3.0 / 5.0