Search

இடி மின்னல் காதல் விமர்சனம்

ஹரனும் ஜனனியும் காதலிக்கின்றனர்; காரில் செல்லும் பொழுது, ரித்தீஷ் ஜெயினை மோதிவிடுகின்றனர். ரித்தீஷ் ஜெயினின் மகன் அபிஷேக் ஜெயினிற்கு ஆதரவாக அப்பகுதியில் வசிக்கும் விபச்சாரி துணை நிற்கிறாள். ரித்தீஷ் வாங்கிய கடனிற்காக அபிஷேக்கைக் கவர நினைக்கிறான் வல்லநாட்டு அருள்பாண்டியன். இவர்தான் இடி; அபிஷேக்தான் மின்னல்; ஹரனும் ஜனனியும்தான் காதல். இடைவேளையில், மூன்று திரைச்சட்டகங்களாகப் பிரித்துப் படத்தின் தலைப்பைப் போடுகிறார்கள்.

மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்த படம் என்று படக்குழு சொல்லியிருந்தனர். அபிஷேக்கிற்கு, ‘இருமன ஒழுங்கின்மை (Bipolar Disorder)’ இருப்பதாக நாயகன் கண்டுபிடிக்கிறார். நாயகன் சைக்காலஜி படித்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவ்வுழுங்கின்மை வாய்க்கப்பெற்றால் மனம் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளின் எல்லைக்கு ஊஞ்சல் போல் (swing) போய் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில காட்சிகளில் அபிஷேக்கின் கண்களிலும் முகத்திலும் தெரியும் குரூரப் புன்னகை நாயகனை வெறுக்கும் அபிஷேக், நாயகன் அடிவாங்கும்போது காட்டும் அஞரின்ப (Sadistic) பாவனைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அதை விடக் கொடுமை, அந்த சிறுவன் பிறரை அடிக்கும் பொழுது துணுக்குறுகிறான்; உளவியல் அறிந்த நாயகன், அந்த சிறுவனை மேலும் நடுக்கமுறச் செய்ய, உளப்பிறழ்வாளி (Psycho) போல் அபிஷேக்கைப் பார்த்தவண்ணம் வில்லனை அடிக்கிறார். இதிலென்ன நகைமுரண் என்றால், அந்த நாயகனின் நோக்கம் அபிஷேக்கை அவரது உளப்பிரச்சனையில் இருந்து மீட்பதாம். ஆனால், நாயகனது நடவடிக்கை அதற்கு நேர்மாறாகவே அபிஷேக்கின் மனநிலை மேலும் பாதிப்படையத் தூண்டுவது போலவே இருந்தது.

தெரியாமல் செய்துவிடும் ஒரு விபத்தினால், குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார் ஹரன். அவரைச் சமாதானப்படுத்தும் ஜனனி, “நம்மள இன்னும் சட்டம் தேடி சரலை. அப்பன்னா என்ன அர்த்தம், நாம சட்டப்படி தப்பு பண்ணலைன்னு அர்த்தம்” என்கிறார். என்னய்யா லாஜிக் இது! ஆழமற்ற வசனங்கள் படத்தின் தொய்வுக்குக் காரணமாகின்றன. இயக்குநர் பாலாஜி மாதவன் கதையில் இருக்கும் தெளிவு, திரைக்கதையில் இல்லாதது படத்தின் பெரிய பலவீனம். அருள் பாண்டியன் அவசரமாக அறிமுகமாகி அவசர அவசரமாக அச்சுறுத்தலான வில்லனாக முயற்சி செய்து, படத்தின் ஓட்டத்திற்குப் பெரும் தடையாக உள்ளார். படத்தொகுப்பாளர் அந்தோனியாவது கவனமாக இருந்திருக்கலாம். 

நாயகன் ஹரனாக சிபியும், ஜனனியாக பாவ்யா த்ரிகாவும், பாதிரியராக ராதாரவியும், ஹெட் கான்ஸ்டபிளாக பாலாஜி சக்திவேலும், அமுல் குட்டி அபிஷேகாக ஜெயாதித்யாவும் நன்றாக நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் க்ளைமேக்ஸ் வசனம் பேசிய யாஸ்மின் பொன்னப்பா, அப்படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத் தேர்வில் காட்டிய அக்கறையைக் கதாபாத்திர உருவாக்கத்தில் காட்டத் தவறவிட்டுள்ளனர்.