Shadow

Hot Spot விமர்சனம்

இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவனைகளும், இசையமைப்பாளர் சாம் CS-இன் இசையும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கிறது. அந்தப் புள்ளியைத் தொட்டு, சமூகம் எத்தகைய மாற்றத்தை நோக்கி நகரவேண்டுமென எடுத்தியம்பியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

புதிய தென்றல் (1993) படத்தில் ரமேஷ் அரவிந்தும், சிவரஞ்சினியும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் Golden Rules-இல் எதிர்கொள்கின்றனர். சின்ன அத்தியாயம் என்றாலும் ஸுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாமல் பயணிக்கிறது.

காமம் வேறு, காதல் வேறு என வியாக்கியானம் அளிக்கிறார் சுபாஷ். ‘அப்படியா?’ எனக் கேட்டு, ஜனனி ஐயர் எடுக்கும் முடிவே தக்காளி சட்னி அத்தியாயத்தின் கதை. சுபாஷ்க்கு ஏன் வேலை போகிறது, அவரது அம்மாவை ஹோட்டல் அறையில் பார்த்ததால் ஏற்படும் குழப்பம், படத்தின் முடிவு என இப்படமும் ரசிக்க வைக்கிறது.

அருவி படத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாயம், Fame Game ஆகும். ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் அப்யூஸ் செய்யப்படுகிறார்கள் என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல முயன்றுள்ளார் விக்னேஷ் கார்த்திக். அதிலென்ன அப்யூஸ் என யாராவது கேட்டால், அதைப் பூதாகரப்படுத்திக் காட்ட ஒரு சம்பவத்தை வைத்துள்ளார். இரு கோடுகள் தத்துவப் பாணியில், அந்தச் சம்பவதிற்கு அழுத்தம் கொடுத்து கலையரசன் சொல்லும் கதையைக் கேட்டால், Fame Game மனதைக் கனக்கச் செய்வதாக இருக்கும். அந்த சம்பவம் இல்லாமலும், Fame Game இன் அபத்தத்தையும் சொல்லியிருக்கலாம். குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்யும் புது இயல்பு, 90களின் இறுதியில் இருந்தே சமூகத்திற்குள் பல வடிவங்களில் வந்துவிட்டன. குழந்தைக்குப் பூச்சாண்டியைக் காட்டிப் பெற்றோர் சோறு ஊட்டுவது போல், பெற்றோரை ரியாலிட்டி ஷோ சம்பவத்தைக் காட்டிப் பயமுறுத்தி, குழந்தைகளை விளையாட விடுங்கள் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர். படிப்பில் இருந்து கவனத்தைக் கொஞ்ச நேரம் விளையாட்டுக்குத் திருப்பினாலும், அந்த விளையாட்டிலும் வென்றாக வேண்டிய மன அழுத்தத்தைத்தான் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்குத் தருகிறார்கள். படிப்போ, விளையாட்டோ, ரியாலிட்டி ஷோவோ, குழந்தைகளால் பெரியவர்களின் உலகில் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதுதான் நிதர்சனம். முதல் அத்தியாயத்தில் பெண்ணியம் பேசி விட்டு, கடைசி அத்தியாயத்தில் நடக்கும் சம்பவத்திற்கு நாயகி சோஃபியாவைப் பலிகடாவாக்கிவிடுகிறார் இயக்குநர். 

இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தோ, படம் பெற்றிருக்கும் A சான்றிதழ் பார்த்தோ, எந்த ஒரு முடிவும் எடுக்காமல், 18+ வயதினர் இப்படத்திற்கு தாராளமாகப் போய்ப் பொழுதைக் கழிக்கலாம். நான்கு கதைகளும் முடிந்ததும், உடனே அரங்கை விட்டு வெளியேறாமல், இயக்குநரின் காதலைத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதையும் பார்த்துவிடுங்கள்.