
ஒரு கொலையை நேரடியாக ஒளிபரப்புகிறது ‘வெல்லலாம் வாங்க’ என்ற இணையதளம். அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடக் கூட கொலை செய்யப்படும் நேரம் துரிதமாகும். அதாவது அதன் பார்வையாளர்களே கொலையாளர்கள். நடத்துவது யார், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இரட்டை இயக்குநர்களான ஷங்கரும் சுரேஷும் மிக அழகான கதையை உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அதன் திரைக்கதையும் தொழில்நுட்ப நேர்த்தியும் கதைக் கரு அளவுக்கு ஷார்ப்பாக இல்லை.
நியாயமாகப் படம், பார்வையாளர்களைப் பதற்றத்திலும் குற்றவுணர்விலும் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், காட்சிக் கோணங்களும் படத்தொகுப்பும் அவ்வேலையைச் செய்யத் தவறிவிடுகிறது.
நம்மால் ஓர் உயிர் போகப் போகிறதெனத் தெரிந்தும், எவ்வித லஜ்ஜையும் கிலேசமுமின்றி மக்கள் அந்தக் கொலை புரியும் இணையதளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே, கொலைக்குத் துணை புரிகிறார்கள். ‘நான் மட்டுமா பார்க்கிறேன்? அவனை முதலில் பார்க்காம இருக்கச் சொல்’ என்ற சப்பைக்கட்டு இல்லாத மனித மனமேது? மாற்றம் தன்னில் இருந்து தொடங்க வேண்டுமென்ற உணர்வைப் படம் அளித்திருக்க வேண்டும்.
படத்தின் சீரியஸ்னஸை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது க்ளைமேக்ஸ். இணையதளம் தொடங்கி, டெக்னிக்கலாக தன் இருப்பிடத்தை மறைத்து, கொலை செய்கிறார் சமூக வலைதளங்களால் பாதிக்கப்படும் கொலைக்காரர். ஆனாலும், படத்தின் முடிவில் கொலைக்காரரைச் சாதாரண வில்லனாக்கி, காவல்துறை அதிகாரி கணேஷ் வெங்கட்ராம் ஹார்லி டேவிட்சன் பைக்கில் சென்று ஹீரோயிசம் செய்வது அவ்வளவாக ஒட்டவில்லை. டூயட் பாட்டுகள் எல்லாம் கொடுக்கப்பட்டு, ஈரோடு மகேஷைக் குணசித்திர நடிகராகச் சித்தரித்துள்ளனர்.
சந்திரிகாவாக வரும் சுகன்யாவின் மனநிலையை அழுத்தமாகச் சொல்லாமல் விட்டது மிகப்பெரும் குறை. அவசர கோலமாக அவரைப் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாகப் பங்கேற்கும் டெல்லி கணேஷ் தன் நடிப்பால் கலக்கியுள்ளார். ஈரோடு மகேஷின் காதலி ஸ்டெல்லாவாக வரும் கெளஷிகாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார்.
படத்தின் நாயகியாக மலையாள நடிகை ஸ்வேதா மேனன் நடித்துள்ளார். படத்தின் பிரதான குறையே, படம் யார் நோக்கிலும் இருந்து பயணிப்பதில்லை. ஸ்வேதா, சுகன்யா, ஈரோடு மகேஷ், கணேஷ் வெங்கட்ராம் என எந்த பிரதான கதாபாத்திரத்தினின்றும் பயணிக்கவில்லை. கொலையாளியின் தொழில்நுட்ப வியூகத்தைப் பற்றிக் கூறும் நிபுணர்களாக இரட்டை இயக்குநர்களும் ஒரு காட்சியில் தோன்றுகின்றனர்.
இன்னும் நேர்த்தியாகப் படம் தொகுக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களை உபயோகிக்கும் மக்களின் மொன்னை மனநிலையை இன்னும் வலுவாகவும் விமர்சித்திருந்தாலும், தவிர்க்க முடியாத மிக முக்கியமான படமாக இது அமைந்திருக்கும்.