மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, ‘இது என்னோட வீடு’ என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார்.
வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். “வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல” என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது.
நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே ‘டத்தோ’ ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென விழையும் பாசக்காரரை, அவரது குடும்பத்தினர் அவர் இறந்த பின் கொல்கின்றனர். பேய்க்கு அழகானதொரு சென்ட்டிமென்ட்டை வைத்து படத்தைப் போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார். விஷால் சந்திரசேகரின் இசையில், ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹ்தா தா’ பாடல் ரசிக்கும்படி உள்ளது.
சூரணமாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவியுள்ளார். நாயகியான ஸ்ரீதிவ்யாவிற்குக் காதலிக்கும் டிப்பார்ட்மென்ட்டை மட்டும் ஒதுக்கியுள்ளனர். வனரோஜாவாக வரும் தேவதர்ஷினிக்கு, கோவை சரளாவை விட காமெடிக்கு அதிக வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கெளசல்யாவின் சிறப்புத் தோற்றம் நல்ல சர்ப்ரைஸ்.
சங்கிலியாண்டவன் என்பது ராதாரவி ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர். அவரிடம் தான் ஜீவா, ‘சங்கில் புங்கிலி கதவ தொற’ எனக் குடித்து விட்டுக் கெத்தாகச் சவால் விடுறார். சங்கிலி கதவைத் திறக்க கன்வின்ஸாகும் காரணம் ஆரோக்கியமாகவும், குடும்பம் பற்றிய மதிப்பீடுகளை உயர்த்துவதாகவும் உள்ளது.