Search

முதலிடத்தில் இந்தியா

ind-vs-sl---wc2019
 

அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டாலும், முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா -இலங்கை , ஆஸ்திரேலியா தென் ஆஃப்ரிக்கா போட்டிகள் அமைந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா அணியில் ஷமி, சஹோலுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் சேர்க்கபட்டனர்.கருணரத்னே, குஷால் பெரேரா களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இலங்கைக்கான முதல் பவுண்டரியை குஷால் அந்த ஓவரில் அடித்தார். அடுத்த ஓவரை பும்ரா மெய்டினாக வீச, அடுத்து புவனேஷ்வர் குமார் ஓவரில் 12 ரன் அடித்து ரன்ரேட் உயர்த்திக் கொண்டணர். நான்காவது ஓவரில் பும்ரா கருணரத்னேவை வீழ்த்தினார். 10 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேற, ஓரு நாள் சர்வதேச போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனையை பும்ரா புரிந்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்தியா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில், குஷால் பெரேரா கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை குல்தீப் தவறவிட்டார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் குஷால். அடுத்த ஓவரில் பும்ரா வீசிய பந்து பெர்ணண்டே பேட்டில் பட, இந்திய வீரர்கள் LBW கேட்க, கள நடுவர் அவுட் கொடுக்க, மறுமுனையில் இருந்த குஷால் உயரத்தைக் காரணமாக வைத்து ரீவ்யூ கேட்க, தீர்ப்பு மூன்றாவது நடுவரிடம் போனது. ரீப்ளேவில் பந்து ஸ்டேம்பில் மிஸ்ஸாவது தெரிய வர, பெர்ணண்டே அவுட்டிலிருந்து தப்பினார். அடுத்த பந்தில் பௌண்டரி அடித்து தன் ரன் கணக்கையும் துவக்கினார். பும்ரா பந்து வீச்சில் அடிக்கப்பட்ட முதல் ரன் அதுதான்.எட்டாவது ஓவரின் முதல் பந்தில் குஷால் பும்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் வெளியேறினார். அவ்வளவு நேரம் களத்திலிருந்த குஷால், பும்ராவின் பந்துவீச்சில் சந்தித்த முதல் பந்து இதுவே!

பதினோராவது ஓவரை, இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக விளையாடும் ஜடேஜா வீசினார். நான்காவது பந்தில் குஷால் மெண்டிசை வெளியேற்றினார். 3 ரன்னில் ஸ்டம்பிங் முறையில் வெளியேறினார். அடுத்த ஓவரில், பெர்ணண்டேவும் பாண்டியா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் வெளியேறினார். 55 /4 என்று இலங்கை தத்தளித்த நேரத்தில் மேத்யூஸ் – திரிம்மனே இணை சேர்ந்தனர்.அனுபவமிக்க வீரர்கள் இருவரும் அணியைச் சரிவியிலிருந்து மீட்க பொறுப்புடன் விளையாடினார்.

33 வது ஓவரில் மேத்யூஸ் தன் அரை சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து திரிம்மனேவும் 36வது ஓவரில் தன் அரை சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் மேத்யூஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை புவனேஷ்வர் குமார் தவறவிட்டார். இந்த உலகக்கோப்பையில் இதுவரை இருமுறை மட்டுமே கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டிருந்த இந்திய அணி, இந்தப் போட்டியிலயே இருமுறை தவறவிட்டனர்.

ஆனால் அடுத்த ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் திரிம்மனே கொடுத்த கேட்சை ஜடேஜா பிடித்துவிட இலங்கை தன் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது வெளியேறினார். மறுமுனையில் கேட்ச் கண்டத்தில் தப்பிய மேத்யூஸ் சிக்ஸ், ஃபோராக அடிக்க ஆரம்பித்தார். 40வது ஓவர் முடிவில் 200/ 5 என்ற நிலையில் இலங்கை இருந்தது.

44வது ஓவரில் மேத்யூஸ் தன் சதத்தை நிறைவு செய்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இது அவரது மூன்றாவது சதமாகும். மூன்று சதமும் இந்தியாவிற்கு எதிராகக் குவித்தது தான். 113 ரன் குவித்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேத்யூஸ். பின்னர் வந்த திசரா பெரேரா 2 ரன்னில் புவனேஷ்வர் பந்துவீச்சில் பாண்டியா பிடித்த அருமையான கேட்ச்சில் வெளியேறினார்.

50 ஓவர் முடிவில் இலங்கை 264/7 குவித்தது, டி சில்வா 29 ரன்களுடனும், உதானா 1 ரன்னுடனும் களத்திலிருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். 264 ரன்கள் போதுமா என்று சந்தேகமாக இருந்தாலும், இதே மைதானத்தில் நடந்த இலங்கை – இங்கிலாந்து, பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தன் போட்டிகள் குறைந்த ஸ்கோர் போட்டிகளாக இருந்தால் சற்று நம்பிக்கையுடன் இருந்தனர் இலங்கை ரசிகர்கள்.

ஆனால் அந்த நம்பிக்கையை இந்தியா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலயே அழித்துவிட்டனார். ரோகித் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், ராகுலும் சரியாக ஒத்துழைக்க, இலங்கை பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். டி சில்வா வீசிய 17வது ஓவரில் சிக்ஸ் அடித்து தன் அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித். அதே ஓவரில் அடித்த அடுத்த சிக்ஸ் மூலம், இந்த உலகக்கோப்பையில் 600 ரன்களைக் கடந்தார். இதற்கு முன்பாக சச்சின் (2003), ஹேடன் (2007), சாகிப் (2019) ஆகியோர் மட்டுமே இச்சாதனை புரிந்துள்ளனார். 20வது ஓவரை வீசிய திசேரா பந்தில் அடித்த ஃபோர் மூலம், இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

டி சில்வா வீசிய 23வது ஓவரில் பவுண்டரி மூலம் தன் அரை சதத்தை நிறைவு செய்தார் ராகுல். இந்த உலகக்கோப்பையில் அவரது மூண்றாவது அரை சதம். 29 வது ஓவரில் பவுண்டரி மூலம் தன் சதத்தை நிறைவு செய்தார் ரோகித். இந்த உலகக்கோப்பையில் அவரது ஐந்தாவது சதம், ஒரு உலகக்கோப்பையில் ஒரு வீரர் குவித்த அதிகப்பட்ச சதங்கள் இதுவே!

உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் ஆறு சதம் குவித்து, அதிக சதம் குவித்த வீரர் என்ற சச்சின் சாதனையைச் சமன் செய்தார். தொடர்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற கோலியின் சாதனையையும் சமன் செய்தார். இவ்வளவு சாதனையைப் படைத்த அதே வேகத்தில் 103 ரன்னில் வெளியேறினார். பின்னர் கோலி களமிறங்க, 39 வது ஓவரில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார். இந்த உலகக்கோப்பையில் அவரது முதலாவது சதமாகும். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாவது சதமாகும். அறிமுகமான முதல் போட்டியிலேயே ராகுல் தன் முதல் சதத்தை அடித்தது குறிப்பிடதக்கது.

111 ரன்களைக் குவித்து மலிங்கா பந்துவீச்சில் குஷா பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியது மூலம் 56 விக்கெட்களுடன், உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மூண்றாவது இடத்திற்கு முன்னேறினார் மலிங்கா. அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்னில் வெளியேறினாலும், இந்தியா எந்த சிரமமுமின்றி 43.3 இலக்கை எட்டியது. கோலி 34 ரன்களுடனும், பாண்டியா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியுடன் இந்தியா இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேற, இலங்கை அணி தோல்வியுடன் உலகக்கோப்பைப் பயணத்தை முடித்தது.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்