
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமர்ஷியலாகப் படமெடுத்துச் சம்பாதித்து விட்டுப் போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனைப் பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலைத் தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ்த் திரையுலகிற்குக் கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்குக் கமல் சார் மீது ஒரு வருத்தம் உண்டு.
இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரைத் தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரைச் சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்தத் தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா எனத் தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து, இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரைப் பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க, மக்களுக்கு நல்லது செய்யுங்க, வேண்டாம் எனச் சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலைக் கொட்டினார்.