Shadow

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

Akshar-Arbor-school

ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளியின் ஈஞ்சம்பாக்கம் கிளையைத் திறந்து வைத்தார். மேற்கு மாம்பலத்திலும், தி.நகரிலும் இரண்டு பள்ளிகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க, தற்போது பிரம்மாண்டமாக ஈஞ்சம்பாக்கத்திலும் ஒரு பள்ளியைத் திறக்கப்பட்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி தான் சென்னையின் முதல் IB World School என்பது குறிப்பிடத்தக்கது.

IB – International Baccalaureate (இன்டர்நேஷ்னல் பக்காலோரியட்), என்பது 1968இல் ஸ்விடசர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். மேரி தெரஸ் மெளரட் எனும் ஃப்ரெஞ்ச் கல்வியாளர், ‘அமைதியைப் போதிக்கும் கல்வித்திட்டம்’ என 1948இல் போட்ட விதையே, IB எனும் கல்விமுறை தொடங்கக் காரணம். இந்தியப் பல்கலைக்கழங்கள் உட்பட, உலகிலுள்ள அனைத்துப் பலகலைக்கழங்களாலும், சிறந்த கல்விமுறை என்ற அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டு கல்வி முறையில் இருந்து வெளிவரச் சிறந்த மாற்றாக இக்கல்விமுறை கருதப்படுகிறது.

AAIS-circleஅக்ஷர் (அட்சரம்) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘அசை (Syllable)’ என்றும், ‘முடிவிலி (Infiniy)’ என்றும் பொருள். அர்போல் எனும் ஸ்பானியச் சொல்லுக்கு மரம் என்று பொருள். உலகிலுள்ள முடிவில்லாத எண்ணற்ற வாய்ப்புகளை மாணவர்கள் வரித்துக் கொள்ளுமளவு அவர்களது அறிவும் அனுபவமும் வலுவாக வேர் விடவேண்டும், என்பதே இந்த இரண்டு வார்த்தை கூட்டணியின் பொருள். அதற்கொரு உலகத்தரமான கல்விமுறையைப் போதிக்கும் நிறுவனம் அவசியம் என்ற உந்துதலின் காரணமாகவே, அக்ஷர் அர்போலின் நிறுவனரான சுப்பிரமணியன் அவர்கள் இப்பள்ளியைத் தொடங்கியுள்ளார்.

ஈஞ்சம்பாக்கம் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளிதிறப்பு விழாவில் கலந்து கொண்ட Tata Consultancy Social Services-இன் தலைமை நிர்வாகி ராமதுரை, “மாணவர்களுக்குக் கற்றுத் தர, ஆசிரியர்களும் வளரும் தொழில்நுட்பத்தினைத் தெரிந்து கொண்டு, அவர்களின் துறையில் ஏற்படும் மாற்றங்களைக் கற்றவாறே இருத்தல் அவசியம்” என்று வலியுறுத்தி, ASTRA எனும் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில், “60 வருடங்களுக்கு முன், நான் பள்ளியில் 64% எடுத்துப் பரீட்சையில் தேறியதற்கு, எங்கப்பா ஊரிலுள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார். இப்போ என் பேரன், 89% எடுத்ததற்கு, ஏன் 93-94% எடுக்கவில்லை என பேரனை என் மருமகள் திட்டிக் கொண்டிருக்கிறாள். இப்போ கல்வியில் போட்டி மிகவும் மிகுந்துவிட்டது.

திரு. ராமதுரை அவர்கள் சொன்னது போல் ஆசிரியர்களும் படித்துக் கொண்டே இருப்பது மிகவும் அவசியமாகிறது. இல்லை என்றால் என்னைப் போல் நவீன மாற்றத்துக்குப் பழகாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனது மொபைலை உபயோகிக்கவே நான் பிறர் உதவியை நாடுகிறேன். 10 வருடங்களுக்கு முன் இருந்தது போல், இப்போ மருத்துவத்துறை இல்லை. இன்னும் கொஞ்ச நாளில், அமெரிக்காவில் இருந்து கொண்டே, இங்கே ரோபாட்டிக்ஸ் உதவியால், ஒரு மருத்துவரால் அறுவைச் சிகிச்சை செய்ய இயலும். உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. கல்வியும் ஆசிரியர்களும் அதற்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்.

நான், இந்தியாவிலேயே மகாராஷ்டிராதான் கல்வியில் சிறந்த மாநிலம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தமிழகம் தான் முதல்நிலை வகிக்கிறது என்பதை இப்பொழுது உளமாற நம்புகிறேன்” என்றார்.

சிறப்பு விருந்தினர்களைக் கெளரவிக்கும் வகையில், அவர்கள் பெயரில் வளாகத்திற்குள் மரம் நடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இவ்விழாவில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் R.நட்ராஜும், ஆளுநரின் உதவியாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி R.ராஜகோபாலும் கலந்து கொண்டார்கள்.

akshar arbol-logo