கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் கல்லூரி மாணவியாகவும் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது.
எனினும், இதய ராணியாக அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. முடிவெடுக்க முடியாமல் குழம்பி, அக்குழப்பத்தை நாயகன் மேல் கோபமாகக் காட்டும் காட்சி என தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார். படத்தின் பலமே, பிரதான பாத்திரங்களின் கேரக்ட்ரைசேஷன்தான். நாயகன் வேலைக்குப் போகிறானா, போகும் எண்ணத்தில் இருக்கிறானா, என்ன படித்திருக்கிறான் என சகல தெளிவின்மையையும் மீறி, கெளதம் எனும் பாத்திரத்தின் உளவியலைப் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறார் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.
வர்கிஸ் மேத்யூ, பொன்வண்ணன் கதாபாத்திரங்களை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம். நண்பர்களின் நாயகர்களாக வரும் மா கா பா ஆனந்த், பாலா சரவணன் நகைச்சுவைக்குப் பெரியளவில் உதவவில்லையெனினும், படத்தில் தங்களுக்கான ஸ்பேஸைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
கோபக்கார இளைஞனாக ஹரிஷ் கச்சிதமாய்ப் பொருந்துகிறார். மைதானத்தில், தேன் பாட்டிலைக் கொண்டு குமாரின் தலையில் அடிக்கும் ஒரு காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். அடுத்தடுத்த கதைத்தேர்வுகளில் கவனமாக இருந்தால் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்ந்துவிடுவார் என்பது உறுதி.
குழப்பத்தில் இருந்தால், அதிலிருந்து மீள புல்லட்டில் ஒரு லாங்-ட்ரைவ் போகவேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்கித் தந்துள்ளார். அதை அடியொட்டி, தமிழ் சினிமா நாயகர்கள் பலரும் கிளம்பிவிட்டனர். அதற்கு வசதியாக நாயகர்களை வேலைக்கு அனுப்பாமல் பொத்திப் பாதுகாக்கின்றனர் இயக்குநர்கள். அதனால் அவர்களுக்கு stalking செய்வது குறித்த குற்றவுணர்வும் இல்லாமல், தங்களை ‘ரெமோ’வாக இயல்பாக உள்ளனர்.
படத்தின் இரண்டாம் பாதி நீளத்தைக் குறைத்திருக்கவேண்டும். படம் எப்பொழுது முடியுமென்ற சலிப்பு மிகுகிறது. போதாக்குறைக்கு, இயக்குநர் ஒரு பிச்சைக்கார வேடத்தில் தோன்றி, சைக்கோத்தனமாகப் பேசி, நாயகனுக்குக் கஞ்சா அளிக்கிறார். ‘உண்மையாகக் காதலித்தால், காதலித்தவரின் மகிழ்ச்சியே பிரதானமாக இருக்கணும்’ என படத்தில் அட்வைஸ் செய்யப்பட்டாலும், இளைஞர்கள் உறவுச்சிக்கல்களில் உழன்று தவறான முடிவெடுப்பது அதிகமாகி விட்ட காலத்தில், பொறுப்புணர்வோடு அத்தகைய காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.