‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை ‘அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்’ படத்தில் கொடுத்திருப்பார்கள்.
யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது.
யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம். படம் தொடங்குவதே, பிரபஞ்ச வெளியில் எங்கோ உள்ளா க்ரீ சாம்ராஜ்ஜியத்தில்தான். எதிர்பாராத விதமாகத்தான், ப்ரீ லார்சன் பூமியில் விழுகிறார். படத்தில், பூமியைப் பூமி என்று கூடச் சொல்லாமல், சி53 கிரகம் (Planet C53) என்றே அழைக்கின்றனர். ப்ரீ லார்சன் தன் சக்தியை உணர்ந்து கேப்டன் மார்வெல் ஆன பின்பும் கூட, பூமிக்குக் கடைசி வரை அவர் ஏலியனாகவே இருக்கிறார். அவர் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து, க்ரீ சாம்ராஜ்ஜியத்துக்கும், அவர்களால் ஒடுக்கப்படும் ஸ்க்ரல்களுக்கும் நிகழும் போரினைத்தான். மனித இனத்தைக் காப்பாற்றிடாத சூப்பர் ஹீரோயின் என்பதுதான் சுணக்கத்திற்கும், கேப்டன் மார்வெலை நெருக்கமாக உணர முடியாததற்கும் காரணம்.
குறைந்தபட்சம், ஸ்க்ரல்களின் பிரச்சனையையாவது பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கவேண்டும். விரும்பிய வடிவத்தை எடுக்கும், கோரமான உருவம் கொண்ட ஸ்க்ரல்களைத் தீயவர்களாகச் சித்தரித்து, பின் ‘ட்விஸ்ட்’ வைப்பதால், அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. பண்டோரோவைச் சிதைப்பது மனிதர்கள் என்றபோதும், அவர்கள் மீது பார்வையாளர்களின் கோபம் அவதாரில் திசை திரும்பும். இங்கு, க்ரீயினர் மீது பார்வையாளர்களின் கோபம் திரும்பாதது தான் படத்தின் குறை. கடைசியில் பூமி மீது படையெடுத்து வரும், ரோனான் தி அக்யூஸரின் தாக்குதல் கூட ஒரு பதற்றத்தை வரவைப்பதில்லை. படம் ஆடியன்சோடு கனெக்ட் ஆகும் புள்ளிகள் மிகவும் குறைவு.
கொஞ்சமே கொஞ்சம் கனெக்ட் ஆக முடிகிறது என்றால், நிக் ஃப்யூரியாக வரும் சாமுவேல் ஜாக்சனோடுதான் அந்த ஒட்டுதல் நிகழ்கிறது. இளவயதினராக சாமுவேல் ஜாக்சனைத் திரையில் காண்பது, படத்தின் மற்ற விஷுவல் எஃபெக்ட்ஸ் தரும் பரவசத்தை விட மிக அலாதியான அனுபவத்தைத் தருகிறது. அவரது ஒற்றைக் கண் மர்மம் விலகும் போது, ‘அடச்சே, இதுக்காகவா இவ்ளோ சீன்?’ என சப்பென்றிருக்கிறது. கூஸ் என்ற அந்தப் பூனைக்கான காட்சிகளை அதிகப்படுத்தி, இன்னும் காமிக்கலாகக் கொண்டு போய் மார்வெல் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கலாம்.
விழுந்தாலும் குதிரை போல் சட்டென எழுவதுதானே சூப்பர் ஸ்டாரின் இலக்கணம்? அப்படி விழுகின்ற ஒவ்வொரு முறையும் எழுவதே, கேப்டன் மார்வெலின் அசாதாரண சக்திக்கு வித்திடுகிறது.
[…] கொள்ளக் கூடாதா?’ என்ற ஞானத்தை, கேப்டன் மார்வெல் பெற உதவுகிறார். பூமியையும், […]