Shadow

MUDDY திரை விமர்சனம்

சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது.

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

அண்ணன் தம்பி இருவர், ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன், ‘உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார்!’ என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்படி வெல்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

ஹாலிவுட் படத்திற்கு இணையாக ரேஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளின் கம்பீரமான வசீகரமும், அம்மலைகளைச் சார்ந்த மக்களின் வாழ்வியலும் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலையில் இருந்து பெரியப் பெரிய மரங்களுடன் இறங்கும் ஜீப்பை அநாயாசமாக ஓட்டி வருகிறார் நாயகன். அம்மக்களின் அன்றாட மலைவாழ்வு ஆச்சரியமூட்டுகிறது.

மட்டி ரேஸ் என்பதே  இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, ஆனால்  அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். புலி முருகன் ‘ புகழ் ஆர்.பி.பாலா இப் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். படம் மேலும் ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ரிதனும் கார்த்தியும் அண்ணன் தம்பியாகக் கலக்கியிருக்கிறார்கள்.

நாயகனாக ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும்,  வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும்  அசத்தியிருக்கிறார். தம்பிக்காக நிற்கும் காட்சிகளில் மனதைக் கவர்கிறார். தம்பியாகச் கார்த்தி நாயகனுக்கு இணையான பாத்திரம். அண்ணனை முறைப்பதும், முரண்படுவதும் என்றிருந்தவர், க்ளைமாக்ஸில் அண்ணனுடன் இணைந்து வில்லனை ஜெயிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. தங்களுக்குத் தரப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து ரசிகர்களைக் கவர முயன்றிருக்கிறார்கள். வில்லன் தான் வரும் இடங்களில் எல்லாம் மிரட்டியிருக்கிறார். எவ்ளோ லோட் ஏற்றினாலும் தாங்கும், நாயகன் உபயோகப்படுத்தும் கருடன் எனும் மஹிந்திரா ஜீப்பும் படத்தில் ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது. 

க்ளைமாக்ஸ் இறுதி 20 நிமிடங்கள் படக்குழுவின் அதி பயங்கர உழைப்பிற்குக் கட்டியம் கூறுகிறது. எப்படி இந்த ரேஸைத் திரையில் கொண்டு வந்தார்கள் என ஆச்சர்யமாக இருக்கிறது. மலையின் காட்டு முகட்டில், பள்ளத்தாக்கு முனையில் தாறுமாறாக வேகமாகப் பறந்து செல்லும் கார்களைக் கேமரா முன்னும் பின்னும் பயணித்து, ஒரு கார் ரேஸினை ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டுவந்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. ரதீஷின் அசகாய உழைப்பும் திட்டமிடலும் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகின்றன. படத்தின் பரபரப்பை அதிகப்படுத்தும்படி கச்சிதமாக நறுக்கென எடிட் செய்துள்ளார் ஷான் லோகேஷ்.

இப்படம், பெரிய திரையில் காண வேண்டிய விஷுவல் விருந்தை அளிக்கும் படம். அதனாலேயே, இப்படத்தின் இயக்குநர், திரையரங்கில் வெளியிட ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருந்து வெளியிட்டுள்ளார். பெரிய திரையில் காண வாய்ப்புள்ளவர்களால், இப்படத்தின் மேக்கிங் குறித்து பிரமிக்காமல் இருக்க இயலாது என்பது திண்ணம்.

(நன்றி: சக்தி சரவணன்)

பி.கு.: இப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.