Shadow

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

மூன்று நண்பர்கள். அதில் ஒருவன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவன், மற்றொருவன் தீவிரவாதிகளின் செல்ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றைத் தன் கல்லூரி ப்ராஜெக்ட் ஆகச் செய்துவிட்டு, அது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போனதை எண்ணி நொந்து போய் இருப்பவன்.  இவர்களுக்கு உதவிக் கொண்டு ஜாலியாகச் சுற்றித் திரியும் மற்றொருவன். இவர்கள், ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார்கள்.  மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா, யூகிக்க முடிந்தால் அது தான் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை.

மிக எளிமையான கதை, அதைவிட எளிமையான திரைக்கதை என ஒரு அடிப்படையான சினிமா தான் ஜிகிரி தோஸ்த். அது தவிர்த்து அதை ஆழமாக அலசிப் பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்குத் தயாரிப்புக் குழுவினருக்கும் இயக்குநர் அறன் வி அவர்களுக்கும் வாழ்த்துகள். இன்னும் கொஞ்சம் கதை மற்றும் திரைக்கதையைச் செழுமையாக்கி நடிகர், நடிகைகளிடம் மிகச் ,சிறந்த நடிப்பை வாங்கியிருந்தால் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும்.

கதையாகவோ, திரைக்கதையாகவோ பெரிதாகக் குறைபட்டுக் கொள்ள ஏதும் இல்லை என்பதைப் போல் நிறையாகச் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை என்பதே குறை. ஷாரிக் ஹாசன், அறன்.வி, ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, அனுபமா குமார், ஜார்ஜ் விஷ்ணு, சரத் என பலர் நடித்திருக்கிறார்கள். அறன்.வி திரைப்படத்தை எழுதி இயக்கியதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.  அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.  இசையும் படக்காட்சிகளைப் போலவே பலவீனமாக இருக்கிறது.

ஜிகிரி தோஸ்த் – எளிய முயற்சி. சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் புதிதாகவோ புத்திசாலித்தனமாகவோ எதுவுமே இல்லை.

– இன்பராஜா ராஜலிங்கம்