Shadow

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

Kingsmen: The Golden Circle

2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான ‘தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது.

‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது!

ஜேன் கோல்ட்மேனும், மேத்யூ வானும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரி, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

Julianne Mooreபாபீ (ஜூலியன் மூர்) எனும் வசீகரமும் விபரீதமும் கலந்த ஒரு பெண்ணால், கிங்ஸ்மேன் குழுவினர் பாதிக்கப்பட, ஸ்டேட்ஸ்மேன் என்கிற மற்றொரு அமைப்புடன் இணைந்து பாபீயை எதிர்த்துப் போராடுவது தான் திரைக்கதையின் சாரம்.

கதாநாயகன், கேரி எக்க்ஸியாக தாரோன் எகேர்டன் நடிக்க, அவரது குருநாதர் ஹாரி ஹார்டாகக் கொலின் ஃபிர்த் நடித்துள்ளார். முதல் பாகத்தில் அவர் இறந்து விடுவது போல காட்டி இருந்தாலும், கண்களில் மட்டும் அடிபட்டு அவர் தப்பித்துவிட்டதாகக் காட்டியுள்ளார்கள்!

கோல்டன் சர்கிள் தலைப்புக்குக் காரணம், பாபீயின் அடியாட்கள் தங்களது உடலின் தோலில் தங்கத்தைப் பதித்து வைத்திருப்பார்கள். இப்படத்திலும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. மூன்றாம் பாகமும் தயாரிக்கப் பேசிக் கொண்டுள்ளனர்.

இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் 22 அன்று, இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளது.