(Kingsman: The Secret Service)
கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.
மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ‘Manners maketh man’ என கதவைப் பூட்டி விட்டு, கொலின் ஃபிர்த் குடையை வைத்து சண்டை போடும்பொழுது திரையரங்கமே கலகலப்பாகிறது. படத்தின் நாயகன் டரோம் எகெர்ட்டன் என்றாலும் குடையுடன் வலம் வரும் கொலின் ஃபிர்த் தான் ரசிக்க வைக்கிறார். மிகவும் ஸ்டைலிஷான் ஸ்டண்ட் காட்சிகள் படம் முழுவதும் உள்ளது. சோஃபியா பெளடெல்லாவின் விசித்திர செயற்கைக் கால்கள் படத்தில் முக்கிய பங்கு வசிக்கிறது. கதாபாத்திரங்களுக்குப் பொருந்தும் மனிதர்களை மிகக் கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் ‘கிக் ஆஸ் (Kick Ass)’ புகழ் இயக்குநர் மார்க் வான். எழுதித் தயாரித்ததும் அவரே!
நகைச்சுவையான வசனங்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு மூன்றும் படத்தின் வன்முறைக் காட்சிகளை மட்டுப்படுத்து, கிங்ஸ்மேனை முழுநீள நகைச்சுவைப் படமாக மாற்ற உதவியுள்ளது. குறிப்பாக, பணக்காரப் பயங்கரவாதி வேலண்டைனாக நடித்திருக்கும் சாம்யூல் ஜாக்ஸனின் வசன உச்சரிப்பு த்வனி கூட படத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. அதே போல், தலையில் பதியப்பட்டிருக்கும் சில்லு (Chip) வெடித்து தலை சுக்குநூறாக ஆவது போல் ஒரு காட்சி. அதை பின்னணி இசையாலும், தலையிலிருந்து புஸ்வான தீப்பொறி துவலைகள் வருவதும் போல் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒரு தேவலாயத்துக்குள் வன்முறையைக் கிளிர்ந்தெழச் செய்து விடுகிறார் வேலண்டைன். அப்பொழுது ஒருவரை ஒருவர் மிக மிகக் கொடூரமாக தாக்கிக் கொல்கின்றனர். இசையும் படத்தொகுப்புமே காட்சியின் கோரத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன.
வேலண்டைன் எப்படி மனிதர்களுக்குள் வன்முறையைக் கிளிர்த்தெழச் செய்கிறார்? தனது கம்பெனி மூலம் இலவச சிம்மை அளித்து, அதன் வழியாக இலவச நெட் சேவையை அனைவருக்கும் வழங்குகிறார். பின் சேட்டிலைட் மூலம் நியூராஜிக்கல் அலைகளை அனுப்பி வன்முறையைத் தூண்டி விடுகிறார். அதிகமாக அறிவியல் விளக்கம் கொடுத்து படம் பார்ப்பவர்களைக் குழப்பவில்லை இயக்குநர் (7.83 ஹெர்ட்ஸ் எனும் சுவாரசியமான நாவலில், HAARP மூலம் மக்கள் மனதில் வன்முறையைத் தூண்ட முடியுமென எளிய தமிழில் விளக்கியுள்ளார் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி).
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.