
வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் – ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது.
இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம் குறும்படத்திற்காகச் சாரங் தியாகு ரூபாய் 1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் மயிர் குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூபாய் 25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.
2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் பேசும்போது, “இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி.நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாகக் கூட தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. சீசன்-3 இதை விடப் பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார்.
மேலும் இந்தக் குறும்படங்களைப் பார்த்துச் சரியான நேரத்தில் சென்சார் செய்து சான்றிதழ் தர ஒத்துழைத்த சென்சார் அதிகாரி லீலா மீனாட்சிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட ராஜசேகரன், “முன்பெல்லாம் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்துவிட்டு குறித்த நேரத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. இப்போது லீலா மீனாட்சி வந்தபிறகு, திரையுலகினர் தைரியமாக தங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடிகிறது” எனப் பாராட்டினார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்ல படம் எடுப்பது போருக்குப் போவது மாதிரி! அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும்நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள். நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன்.ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.
‘எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால், அதை அப்போதே உடனே சரி செய்து விடவேண்டும். எங்கேயும் குறைவந்து விடக்கூடாது’ என இயக்குநர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது.
நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, அதைப் பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்குக் கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்தச் சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.
இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோஷம்.
எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதோ அதைச் செய்யுங்கள். இந்த மார்க்கெட் ஓப்பனானது. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” எனக் கூறினார் சூர்யா.
முன்னதாக ரசிகர்கள் என்.ஜி.கே (NGK) படம் தீபாவளிக்கு வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யாவிடம் கேட்க, “இந்தக் குறும்படங்களைப் போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது. சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்புக் கொடுத்துதான் ஆகவேண்டும். உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” என அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா.