Shadow

க/பெ. ரணசிங்கம் விமர்சனம்

ariyanachi-review

கால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாதகால சக்கரம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது; மனிதர்களால் இயக்கப்படும் அரசு இயந்திரமோ ஆட்களுக்குத் தக்கவாறு தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்ளும். புகழ்மிகு நடிகை ஸ்ரீதேவியின் உடல் ராஜ மரியாதையோடு கொண்டு வர உதவ இயங்கும் அரசு இயந்திரம், ரணசிங்கத்தின் இறந்த உடலைக் கொண்டு வர இல்லாத நொறுநாட்டியமெல்லாம் பேசுகிறது.

அரசு இயந்திரம் சாமானியனுக்குக் காட்டும் முகமும், அதிகாரத்திற்கும் பணத்திற்கும் காட்டும் முகமும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் போன்றது. இப்படம், அதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

இது அரசுடனான அரியநாச்சியின் தனிப்பட்ட போராட்டம். ஆனால் படத்தின் தலைப்பில் இருந்தே ரணசிங்கத்தின் ஆதிக்கம்தான். எவரையும் நம்பி வாழ முடியாது எனத் துணிந்து போராடத் தொடங்கும் அரியநாச்சி, கணவனின் சட்டையை அணிந்தே போராடுகிறார். இதைக் காதலின் விளைவாகப் பார்க்கலாம் என்ற போதும், காட்சியமைப்பின்படி, ஊருக்காக முன்னின்று போராடிய ரணசிங்கத்திடம் இருந்து போராட்டத்திற்கான தைரியத்தைப் பெறுகிறார் என்ற நேரடிப் பொருளைத் தருகிறது. அரியநாச்சியின் தீரமும் தைரியமும் அவரது கணவனிடம் இருந்தே பெறப்பட்டது என்ற சித்தரிப்பின் மூலம் அரியநாச்சிக்குப் பெரும் துரோகம் செய்துள்ளார் இயக்குநர் விருமாண்டி.

அரசு இயந்திரத்தின் கோர முகத்தை எதிர்த்துப் போராடும் ஒரு நாயகியைச் சுற்றி நகரும் கதைக்குள், வியாபாரக் காரணத்திற்காக ஒரு ஹீரோ இணைக்கப்பட்டால், படத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதற்குச் சாட்சியமாய்த் திகழ்கிறது இப்படம். முதல் மாற்றம், படத்தின் நீளம். இரண்டாவது நாயகனை ‘மாஸ்’ ஆகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக் கொண்டது. ரணசிங்கம் புரட்சியாளர்தான், ஆனாலும் அரியநாச்சியைப் பொதுவெளியில் சீண்டும் வழக்கமான ஹீரோவும் கூட! அரசியலை அழகாக, ரிலீஸ்க்குப் பிரச்சனை இல்லாத அளவு கையாண்டுள்ள விருமாண்டிக்கு, நாயகன் – நாயகிக்குள்ளான அன்பையும் அந்நியோன்யத்தையும் இயல்பாகக் காட்ட வரவில்லை. போராட்டக்காரராகவும் கலகக்காரராகவும் ரணசிங்கம் இருந்ததால்தான் அரசாங்கம், அரியநாச்சியின் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை என்ற கற்பிதமும் படத்தில் வருகிறது. ஊர் வம்புக்கே போகாதவராய்த் தானுண்டு தன் வேலையுண்டு என ரணசிங்கம் இருந்திருந்தாலும், அரசு இயந்திரம் இதே மெத்தனத்துடன் தான் செயல்படும் என்பதே கள எதார்த்தம்.

க/பெ. ரணசிங்கம், 2020 இல் வெளிவந்த மிக முக்கியமான படமாக நிலைக்கும். ரணசிங்கம் பாத்திரத்தில் விஜய் சேதுபதி அவராகவே வந்துவிட்டு செல்ல, ஐஸ்வர்யா ராஜேஷ் அரியநாச்சியாக வாழ்ந்துள்ளார். ஜிப்ரானின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், சிவனாடீஸ்வரனின் படத்தொகுப்பும் அரியநாச்சியின் வேதனையைக் கட்டியம் கூற உதவியுள்ளன. அரசு இயந்திரத்தின் செயற்பாட்டுப் போதாமையும், நடைமுறைச் சிக்கல்களும், தினம் எண்ணற்ற மக்களின் அடிப்படை உரிமையை நசுக்கி அழித்தவண்ணமே உள்ளது. அத்தகைய சாமனியர்களின் பாடுகளைத் தனது முதல் படத்திலேயே பேசி, மிக அழுத்தமான முத்திரையைப் பதிந்துள்ளார் இயக்குநர் விருமாண்டி. அவர் பேச விழைந்த கருவிற்கும், அதைக் காத்திரமாகத் திரைப்படுத்தியதற்கும் அவருக்கு வாழ்த்துகள்!

1 Comment

  • […] க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்குப் பின்னர் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரம். அதை உணர்ந்து செவ்வனே செய்திருக்கிறார். முதலிரவு முழுக்கத் தூங்காமல் இருக்க முயலும் இடத்திலும், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்கான காரணங்களை அழுகையுடனும் வெறுப்புடன் அடுக்கும் இடத்திலும், தன் குறட்டையால் விளைந்த இழப்பை எப்படி சரி செய்ய என்று தெரியாமல், திமிறிச் செல்லும் ஜி.வி.யைக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல முனையும் இடத்திலும் தான் ஒரு கை தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். […]

Comments are closed.