Shadow

DeAr விமர்சனம்

குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம்.

கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, கீதா கைலாசம், இவர்களோடு ஜி.வி.பிரகாஷ்குமார் என்று அத்தனை பேரும் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி காளி வெங்கட்டின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நந்தினியின் உடல்மொழியையும் நடிப்பையும் பதிவு செய்தே ஆக வேண்டும். அவ்வளவு இயல்பான நடிப்பு. கணவனுக்கான எல்லாப் பணிவிடைகளையும் செய்து கொண்டே தனக்கான சுதந்திர தாகத்தை மென்மையாக வெளிப்படுத்தி, இருண்மையில் அடங்கிப் போகும் பல கோடி பெண்களைக் கண் முன் நிறுத்துகிறார். இது போன்ற, நடிகர் நடிகைகளின் மனதில் நிற்கும் நடிப்பினால் தான் சாதாரண காட்சிகள் கூட கணம் பொருந்திய காட்சிகளாக மாறிப் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இது நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு மெச்சிக் கொள்ளும்படியான படம். உண்மையாகவே பல காட்சிகளில் அவரின் நடிப்பு மேம்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. உள்ளூர அம்மா ஓர வஞ்சனை செய்கிறாளோ என்கின்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு, அதைக் காட்டியும் காட்டாமலும் தன் தாய் ரோகிணியிடம் உரையாடும் இடத்திலும், பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் தன் தந்தையை விட்டு விளாசும் இடத்திலும், குறட்டை சத்தத்தைக் கேட்டுப் பதறி எழும் தருணங்களிலும்,  அந்த க்ளைமாக்ஸ் காட்சியின் நுட்பமான தருணத்திலும் நடிப்பினால் நம் கண்களை நிறைக்கிறார் ஜி.வி.

க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்குப் பின்னர் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரம். அதை உணர்ந்து செவ்வனே செய்திருக்கிறார். முதலிரவு முழுக்கத் தூங்காமல் இருக்க முயலும் இடத்திலும், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்கான காரணங்களை அழுகையுடனும் வெறுப்புடன் அடுக்கும் இடத்திலும், தன் குறட்டையால் விளைந்த இழப்பை எப்படி சரி செய்ய என்று தெரியாமல், திமிறிச் செல்லும் ஜி.வி.யைக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல முனையும் இடத்திலும் தான் ஒரு கை தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணிக்குப் பிரிந்து சென்ற கணவனை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம். இரண்டாம் பாதியில் மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டு, அதுவரை கதை போன போக்கையும், ஒட்டு மொத்த கதையின் அடிநாதத்தையும் ஒரே சுழற்றில் சுழற்றி வேறொரு தளத்திற்கும், வேறொரு நிறத்திற்கும் கொண்டு செல்லும் மாயாஜாலத்தைத் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பினால் சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

நாயகனின் அண்ணனாக வரும் காளிவெங்கட்டிற்கு, பல படங்களில் நாசரும், சில படங்களில் பிரகாஷ்ராஜும் செய்த கதாபாத்திரம். ஒட்டு மொத்த குடும்பத்தையும் தன் ஓங்கி உயர்ந்த குரலால் கட்டுக்குள் வைத்திருக்கும் கதாபாத்திரம். காளி வெங்கட்டிற்கு இந்தக் கதாபாத்திரம் செய்வதற்கு அவரின் குரல் அந்தளவிற்குக் கை கொடுக்கவில்லை என்றாலும் அவரின் தேர்ந்த நடிப்பும் தனித்துவமான உடல்மொழியும் நிறையவே கை கொடுத்திருக்கின்றன. மனைவியின் சிறுகதை தொடர்பான பேச்சையும், தம்பிக்கு பிடித்திருக்கிறதா எனக் கேளுங்கள் என்று சொல்லும் விசயத்தையும் மிடுக்குடனும் மமதையுடனும் கடக்கும் இடத்தில் மகாகனம் பொருந்திய கணவன்மார்களைக் கண் முன் நிறுத்துகிறார்.

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் இளவரசுவின் கதாபாத்திர வார்ப்பு சிறப்பு. படத்தின் ஒட்டு மொத்த ஆண் கதாபாத்திரங்களில் ஐடியலாகக் கொள்ள வேண்டிய ஒற்றை ஆண் கதாபாத்திரமாக மனதில் ஓங்கி நிற்கிறார். குழந்தை வேண்டாம் என்று சொல்லும் மகளிடம் அவள் முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுப்பதிலும், அண்டை அயலாரின் வார்த்தைகளைச் சிறிதும் மதிக்காத ஆண்மையிலும் அசரடிக்கிறார்.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் அன்பையே தன் கணவன் மேல் அதிகாரமாக வெளிப்படுத்தும், அக்கறையைக் கோபமாக மகள் மேல் வெளிப்படுத்தும் தாய்மார்களை நினைவுகூர செய்கிறார். ஏற்கெனவே சொன்னது போல் அண்ணியாக வரும் நந்தினி அடுத்தவர்களின் வசனத்திற்கு கொடுக்கும் உடல்மொழியில் கூட சர்வ சாதாரணமாகச் சதமடிக்கிறார்.

இப்படி ஒட்டு மொத்தப் படத்தையும் நடிகர் நடிகைகள் பட்டாளம் போட்டி போட்டுக் கொண்டு தாங்கி இருக்கிறது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு குன்னூரின் குளுமையையும், சென்னையின் வறட்சியையும் கண்களின் வழியே உணர்வுகளாகக் கடத்துகிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மெல்லுணர்வுகளைக் கூட நம் உடலில் அழகாக மீட்டுருவாக்கம் செய்யும் மாயத்தினை இப்படத்தில் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டி, காட்சிகளின் கனத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ருகேஷின் கத்திகள் பதமூட்டப்பட்ட பக்குவத்துடன் வெட்டுதல் பணியை செய்திருக்கின்றன.

கதாபாத்திரங்களுக்கான மிகச் சிறந்த நடிகர்களைத் தேர்வு செய்த இடத்திலேயே இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பாதி வென்றுவிட்டார். படத்தின் தலைப்பைக் கதையோடு இணைத்த சாமர்த்தியம் ரசிக்க வைக்கிறது. அது போல் திரைப்படம் துவங்கி இரண்டாவது காட்சியிலேயே கதை துவங்கிவிடுவதும் சிறப்பு. குறட்டையை எதிர்கொள்வது தான் படத்தின் கதைக்கரு என்பதால், அது தொடர்பான இயல்பான யதார்த்தமான காட்சிகளைத் திரைக்கதையில் அடுக்கியதும் பாராட்டுக்குரியது. குறட்டைக்கு எதிரியாகத் தூக்கத்தையும், தூக்கம் முக்கியம் என்பதற்கு பின்னான வேலை தொடர்பான காரணத்தையும் இயக்குநர் குழு கனகச்சிதமாகத் தேர்வு செய்திருக்கிறது.

தலைவாசல் விஜயின் கதாபாத்திர வார்ப்பில் முழுமையும் யதார்த்தமும் இல்லை. அது போல், இழந்த குழந்தையைப் பற்றிய குற்றவுணர்வு துளியும் இல்லாமல் இருவரும் இருப்பது சற்று நெருடல். அது போல் இரண்டு மகன்களின் மனமாற்றத்திலும் உணர்வெழுச்சி இருப்பினும் அடர்த்தி இல்லை.

குறட்டைப் பிரச்சனை முற்றி வழக்குநீதிமன்றத்துக்கு வந்த பின்னர் திரைக்கதை எந்த பாதையில் பயணிப்பது என்று தெரியாமல் சற்று தத்தளிக்கிறது. ஒரு வீட்டின் ஆண்கள் அவ்வீட்டின் பெண்களை நடத்தும் விதத்தில் தொனிக்கும் ஆணாதிக்கம், அதனால் பாதிக்கப்படும் பெண்கள் என்று நகரும் கதை, ஒரு புள்ளி வரை தாமரை இலை நீர் போல் முன்பாதி கதையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் பயணிக்க, ரோகிணி கதாபாத்திரம் மருத்துவமனையில் பேசும் வசனங்களும் நடிப்பும் இந்த இருவேறு கதைகளுக்கான பிணைப்பை ஓரளவு சாத்தியப்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து வரும் அந்த உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ், சிறுசிறு குறைகளை மறக்கடித்து ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ரசிப்புக்குரியதாக மாற்றுகிறது.

மொத்தத்தில், DeAr – அன்புக்குரியவர்களுக்கான படம்.

– இன்பராஜா ராஜலிங்கம்