32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சைலன்ஸ் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 05/10/2020 2 நிமிட வாசிப்பு Updated: 29/08/2022 OTT
எழுத்து அளவு:

silence-2020-review

சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது.

டீட்டெயிலிங் இல்லாத கதாபாத்திரங்கள் மேடை நாடகத்தில் தோன்றுவது போல் தோன்றுவதும் அந்நியத்தன்மைக்குக் காரணமாக இருக்கலாம். கதாபாத்திர உருவாக்கத்தில் ஒரு ரெடிமேட் தன்மை தொனிக்கிறது.

பெண்களைக் கடத்திக் கொலை செய்யும் பிரதான கதாபாத்திரம், அதற்காகச் சொல்லும் காரணத்தை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தாதது குறை. கேமிரா கோணங்களும், த்ரில்லருக்கான பிரத்தியேக முனைப்பில் வைக்கப்படவில்லை.

சியாட்டலிலே வாழ்ந்தாலும், கற்பு சார்ந்தும், பாலியல் சுதந்திரம் சார்ந்தும் கட்டுப்பெட்டித்தனமான பார்வைகளைத்தான் இந்தியர்கள் கொண்டுள்ளார்கள் என திண்ணமாக நம்புகிறார் இயக்குநர் ஹேமந்த் மதுகர். அப்படி நம்பி அவர் வைத்த ட்விஸ்ட்கள் கொஞ்சமாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ம்ஹூம்..

க/பெ. ரணசிங்கம் படத்தினைத் தவிர்த்து, OTT இல் வெளியான சமீபத்திய தமிழ்ப் படங்களைக் கனத்த நிசப்தத்துடனே கடக்கவேண்டியுள்ளது. இப்படமும் அதற்கு விதிவிலக்கு அன்று.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.