
‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர்.
சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், ‘தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்’ என்ற இரயில்வே போலீஸைச் (RPF) சேர்ந்த வில்லியம்ஸ் எனும் அதிகாரியின் விழைவில் தேங்கி விடுகிறது. நகைச்சுவைப் படம் என்பதை வில்லியம்ஸின் அறிமுகத்திலேயே பளீச்செனக் காட்டி விடுகின்றனர். ஆனால், படத்தின் தலைப்பு போடும் முன் தண்டவாளத்தில் இறங்கி இரயிலை நோக்கி ஓடும் நந்திதா கொஞ்சம் பதைபதைக்கத்தான் வைக்கிறார்.
தண்டவாளத்தில் சிறுநீர் கழிக்கும் அப்புக்குட்டி, இயக்குநராகும் கனவில் இருக்கும் செண்ட்ராயன், யதார்த்த நடிகர் சசிகுமார் நற்பணி மன்ற ரசிகனாக மீசையை முறுக்கும் அருண்ராஜா காமராஜா, கோடீஸ்வரனாக மயில்சாமி, பாலியல் மருத்துவராக மனோபாலா, குடிக்காரன், தண்டவாளத் திருடன், முதல் நாள் அலுவலகத்தில் சேர வேண்டியவன், பயந்த சுபாவம் உடைய பருமனான நபர், தமிழறியா ஆந்திரக்காரர் எனக் கலவையான மனிதர்கள் சிறையில் காத்திருக்கின்றனர். பெரும்பாலானோர், திருடனைத் தவிர, தாங்கள் செய்தது எல்லாம் குற்றமே இல்லை என்ற மனோபாவத்தோடே இருக்கின்றனர். அதை நியாயப்படுத்தி ரசிகர்களுக்குக் கடத்தவிம் செய்கிறார் இயக்குநர் பாலய்யா D.ராஜசேகர். உதாரணம் நாயகன், தனது பெயரையும் தன் காதலியின் பெயரையும் ட்ரெயினில் எழுதி ‘ஹார்ட்டின்’ வரைவதால் கைது செய்யப்படுகிறான். ‘அதற்கு முன்னூறு ரூபாய் தானே! வாங்கிட்டு விடுங்கள்’ என அலட்சியமாகச் சொல்கிறான். ட்ரெயினில் எழுதுவது மாபெரும் குற்றம் இல்லை தான் என்பதை மறுக்க முடியாது என்ற பொழுதும், அத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல் தவிர்க்கவும்பட வேண்டியது என்பதை அழுத்தமாகப் பதியத் தவறியுள்ளார்.
சத்யாவாக சச்சின் மணி மிகக் கேஷுவலாக நடித்துள்ளார். மேகலாவாக நடித்திருக்கும் நந்திதா மீது கண்டதும் காதல் கொள்கிறார். ஆனால் அந்த உடனடி காதல் உறுத்தாத வண்ணம் சச்சின் மணி மிக இயல்பாக நடித்துள்ளதோடு மல்லாமல், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் அந்த உடனடி காதலுக்கு வலு சேர்க்கிறது. பாடல்கள் அனைத்திலுமே இளமை வழியோடுகிறது. பாண்டிச்சேரியின் வீதிகளும், தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனும் M.சுகுமாரின் ஒளிப்பதிவில் காண்பதற்கு அழகாய், படத்தின் இளமைத்துள்ளலுக்கு உதவுகிறது.