Shadow

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

En peyar Surya en veedu India vimarsanam

இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

‘கோபம் வந்துச்சு. அடிச்சேன்’ என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். ‘இவன் தான் சூர்யா’ எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. மாறாக, ‘இது என் நாடு இல்லை’ என அவநம்பிக்கை கொள்ளும் அன்வரை எப்படி சூர்யா இந்தியா மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறான் என நெகிழ்ச்சியாக முடிகிறது.

அக்மார்க் ஆந்திரப் படம் என்றாலும், முழு நீள ஆக்‌ஷனாய் இல்லாமல், தேசப்பற்று, காதல், குடும்ப சென்ட்டிமென்ட், பயங்கரமான வில்லனெனப் படம் 168 நிமிட நீளத்தினைக் கொண்டுள்ளது லேசாக அயற்சியைத் தருகிறது. அதுவும், இந்த டோலிவுட்டின் கெட்ட பழக்கம் என்னவென்றால், க்ளைமேக்ஸ்க்குக் கொஞ்சம் முன் ஒரு வண்ணமயமான பாடலை வைத்துவிடும் வழக்கம்தான். பாடல்களில் ஆடுவதற்கெனவே அனு இம்மானுவேல் அல்லு அர்ஜூனைக் காதலிக்கிறார். அதாவது, மியூசிக்கில் சால பிரேமம் கொண்ட பாத்திரத்தில் வருகிறார் அனு.

Arjun in Allu Arjun movieபடத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் என்றால் அது ராமகிருஷ்ண ராஜாக வரும் அர்ஜுன் தான். மனோதத்துவத் துறையில் பேராசிரியராக மிக வித்தியாசமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார் அர்ஜூன். கல்லாவாக நடித்திருக்கும் சரத்குமாரின் அறிமுகம் நன்றாக இருந்தாலும் அர்ஜூனைப் போல பார்வையாளர்களைக் கவர அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வெண்ணெலா கிஷோருக்குக் காமெடி செய்ய பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், ‘எங்களுக்கு எல்லாம் கோபம் வராதா?’ என அல்லு அர்ஜூனை அதட்டும் காட்சியில் மட்டும் பிரமாதப்படுத்தியுள்ளார். தமிழ் டப்பிங் உறுத்தாமல் பொருந்துவதால் நேரடி தமிழ்ப்படம் பார்ப்பது போலவே உள்ளது. நதியா, சாய்குமார், சாருஹாசன், ராவ் ரமேஷ், பொம்மன் இரானி, பிரதீப் ராவத், ரவி காலே, கிருஷ்ண முரளி எனப் படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே உண்டு.

நீட் (NEET) எனும் பயங்கரவாதத்தை நாம் எதிர்கொண்டிருக்கும் இச்சமயத்தில், படத்தில் ஒரு வசனம் வருகிறது. “நார்த் இந்தியா, செளத் இந்தியா, ஈஸ்ட், வெஸ்ட் என பல இந்தியா இல்லை. ஒரே இந்தியா” தான் எனத் தேசியம் பேசுகிறார் மொத்த இந்தியாவையுமே தனது வீடாகப் பாவிக்கும் சூர்யா. “அட!” என ஆச்சரியப்படுத்தினாலும், மத்தியில் ஆள்பவர்களும் அப்படிப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கனவு எட்டிப் பார்க்கிறது. அத்தகையதொரு துள்ளலான கனவாகத்தான், மிகச் சுபமாய் முடிகிறது இப்படம்.