Shadow

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

சிறு வயதிலேயே ராசி கெட்டவர் என்ற பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட விஜய்சேதுபதிக்கு இரு காதல் ஒரே நேரத்தில் மலர்கிறது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாவம் என இருவரையுமே காதலிக்கிறார். இவர், இரண்டு ட்ராக்கிலும் ட்ரெயின் ஓட்டுவது காதலிகளுக்குத் தெரிய வர, அடுத்தடுத்து என்னாகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

காத்துவாக்குல ரெண்டு காதலையும் சமாளிக்கும் இடங்களில் விஜய்சேதுபதி காதல் சேதுபதியாகக் கோலேச்சுகிறார். அவர் நடனமாடச் சிரமப்படும் போதும் அவர் மேல் நமக்கே பரிதாபம் வருகிறது. சமந்தாவிற்கும் நயனுக்கும் வராதா என்ன?

நயன்தாரா சென்டிமென்ட் காட்சிகளில் கவனம் ஈர்த்தாலும் அவருக்கான வெளி படத்தில் நிறைய இருந்தாலும் இளைஞர்களின் கிளாப்ஸை அள்ளுவதென்னவோ சமந்தா தான். சின்னச் சின்ன மேனரிசங்களில் அசத்தி விடுகிறார். ஒரு கதாபாத்திரத்தின் மனம் என்ன நினைக்கிறது என்பதை முகத்தில் கொண்டு வரும் வித்தை சமந்தாவிற்கு நன்றாக வருகிறது. கிங்ஸ்லி, மாறன் கூட்டணியில் ஒருசில காமெடிகள் வொர்க்கவுட் ஆகியுள்ளது.

விஜய் கார்த்திக் கண்ணன், S.R.கதிர் ஆகிய இரட்டை ஒளிப்பதிவாளர்களின் கேமரா வண்ணம் படத்தின் தரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவுகிறது. சமந்தா வரும் இரவுக்காட்சிகளும் சரி, நயன்தாரா வரும் பகல் காட்சிகளும் சரி, மிக அருமையான ஒளிப்பதிவு. படத்தின் மிக முக்கியமான தூண் அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும். குறிப்பாக, ‘நான் பிழை’ பாடலில் காதல் துள்ளல் என்றால், ‘டூ டூ’ பாடலோ கொண்டாட்டத் துள்ளல். பின்னணி இசையிலும் அதகளம் செய்திருக்கிறார் அனிருத்.

இரண்டு பேரையும் உண்மையாகக் காதலிக்கிறேன் என்று விஜய் சேதுபதி சொல்லும் தத்துவங்கள் எல்லாம் சமாளிப்புகேஷனாகவே இருப்பதால் அவரோடு ஒட்ட முடியவில்லை. படத்தின் வசனங்களில் இருக்கும் காதல், காட்சிகளில் இல்லை.

இடைவேளைக்கு முன்பாக வரும் ஒரு பதினைந்து நிமிடம் படத்தை அட்டகாசமாக வடிவமைத்த விக்னேஷ் சிவன், படம் நெடுக சுவாரசியத்தைத் தூவியிருந்தால் படம் வெகுவாக ஈர்த்திருக்கும். இருப்பினும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் காம்போவிற்காகவும் படத்தில் ஆங்கங்கே வெடித்து மகிழ வைக்கும் சில தருணங்களுக்காகவும் ஒரு ஜாலி விசிட் அடிக்கலாம்.

– ஜெகன் கவிராஜ்