விக்ருதி எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘பயணிகள் கவனிக்கவும்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விக்ருதி என்ற மலையாளச் சொல்லிற்கு சில்மிஷம் எனப் பொருள் கொள்ளலாம். சோர்வில் தன்னை மறந்து தூங்கும் எழிலனைக் குடிக்காரர் எனக் கருதும் ஆண்டனி, தூங்கிக் கொண்டிருக்கும் நபரைப் புகைப்படமெடுத்து, போதையில் கிடக்கிறாரென மீம்ஸ் உருவாக்கி சமூக ஊடகத்தில் உலாவ விடுகிறார். ஆண்டனியின் சில்மிஷம், வாய் பேசவும் காது கேட்கவும் இயலாத எழிலனையும், அவனது குடும்பத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
எழிலனான விதார்த் அசத்தியுள்ளார். கலங்க வைக்கும் விதார்த், க்ளைமேக்ஸில் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சியை அளிக்கிறார். மலையாளப் படங்களுக்கே உரிய மென்மையான கவிதையோட்டமாகப் படம் நகர்கிறது. யாரோ ஒருவன் போகிற போக்கில் செய்த ஒரு விஷயம், எழிலனை நிலைகுலைய வைக்கிறது. போராட்டமான வாழ்க்கையிலுள்ள ஆறுதலே அவனது குடும்பம்தான். அங்கும் இளைப்பாற முடியாதபடிக்கு, மகனின் கோபத்திற்கு ஆளாகிறேன்; வேலையை இழக்கிறான்.
காரணம்? எழிலனைப் போலவே சாதாரண ஒருவனான ஆண்டனியின் செய்கை. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தாக்கத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லாக் காலகட்டத்தில் வாழுகிறோம். கையில் செல்பேசி உள்ளதால், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும், மற்றவர்களின் அனுமதியின்றிப் புகைப்படமெடுத்து சமூகவெளியில் வெளியிடும் பழக்கம் சகஜமாகி வருகிறது. அது குற்றம் என்ற புரிதல், பெரும்பாலானோருக்கு இல்லவே இல்லை.
சில ‘லைக்ஸ்’க்காக ஒருவரின் வாழ்க்கையில் விளையாடுகிறோம் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத மொன்னையான சமூகமாக மாறி வருகிறது உலகம். துபாயில் வேலை செய்யும் ஆண்டனி, விடுமுறையில் ஊருக்கு வரும்பொழுது விளையாட்டுத்தனமாகச் செய்யும் ஒரு காரியம் அவனுக்கு வினையாக மாறுகிறது.
ஜெஸ்ஸியாக மாசும் ஷங்கர் நடித்துள்ளார். பாராமுகமாய் இருக்கும் கணவன் ஆண்டனியிடம் என்ன பிரச்சனையென உடைந்து அழுது விசாரிக்கும் போது நன்றாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். விதார்த்தின் மனைவி தமிழ் செல்வியாக, லஷ்மி பிரியா சந்திரமெளலியும் வாய் பேசா இயலாத, காது கேட்காதவராக நடித்துள்ளார். கவிதாலயா பாஸ்கரன், ராமச்சந்திரன், மூனார் ரமேஷ், RJ சரித்திரன் என கதாபாத்திரத் தேர்விலேயே பாதி வென்றுள்ளார் இயக்குநர் S.P.சக்திவேல்.
படத்தின் பேசுபொருளையும் மீறி, விதார்த்தின் எதார்த்தமான நடிப்பு கவருகிறது. பார்வையாளர்கள் கவனிக்கும்படி க்ளைமேக்ஸில் கலக்கியுள்ளார்.