பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். “உழவன் தான் உலகின் வேர்” என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு செய்யும் கஞ்சர்கள் போல் தான் தண்ணீர் வருகிறது. வயல்கள் வறண்டு கிடக்கின்றன. 15 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி அதை வைத்து ஜீவனம் நடத்துகிறது ஒரு குடும்பம். பலரும் நிலங்களை விற்றுவிட்டு குளத்து வேலைக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார்கள். இப்படியான ஊரில் ஒற்றை ஆளான 83 வயது நல்லாண்டி மட்டும் விவசாயம் செய்து வருகிறார். ஊரை மழையின்றி வறுமை நெருக்குவதால் அனைத்துச் சாதியினரும் நம் கருப்பசாமிக்கு கொடை கொடுத்துக் கும்பிட்டால் ஊர் செழிக்கும் என்று நம்புகிறார்கள். விழா எடுக்க வேண்டுமானால் சாமிக்குப் படைக்க நெல் வேண்டும். ஊர் ஒன்று சேர்ந்து நல்லாண்டியிடம் நெல் கேட்கிறது. நல்லாண்டி தன் நிலத்தில் நெல்லைப் பயிரிட, நெல் வளர்ந்து வரும் நேரத்தில் உசிலம்பட்டி பாறைக்காட்டை தோகை காட்டி அழகுப்படுத்தும் மூன்று மயில்களால் ஒரு பெரும் பிரச்சனை வருகிறது. அதில் இருந்து நல்லாண்டி எப்படி மீண்டெழுந்தார் என்பதாக கதை பயணிக்கிறது.
ஒரு நல்ல கதையைக் காட்சிகளாக மக்கள் மனதில் ஏற்றுக் கொள்ள சரியான கதாபாத்திர வார்ப்புகளும், தேர்ந்த நடிகர்களும் அதி முக்கியம். அதை அதியற்புதமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் படத்தில் நடித்துள்ள அனைவரும். முதலில் படத்தின் நாயகன் பெரியவர் நல்லாண்டி காட்டியுள்ள நடிப்புத்திறன் பேரதிசயம். சில காட்சிகளில் அத்திப்பூ போல வந்து மனப்பிறழ்வில் உள்ள உளவியல் சிக்கலை தன் முகபாவனைகளால் வெளிப்படுத்தும் ராமையா கேரக்டரில் விஜய்சேதுபதி கன கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நீதிபதியாக வரும் ரேச்சல் இனி மனதில் நீண்டகாலம் தங்குவார். அவ்வளவு எதார்த்தமான நடிப்பு. ஏனைய கதாபாத்திரங்கள் அனைவருமே ஏற்றம் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் மிக முக்கிய அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் காட்டுப்படும் கிராமத்தின் வாழ்வியல் விஷுவல்கள் எல்லாம் அருமை. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் என்ற முருகர் பாட்டோடு துவங்கும் விஷுவல்ஸ் இனி நீண்டகாலம் மனதில் நிற்கும். இயக்குநர் மணிகண்டனே கேமராமேன் என்பதால் நினைத்ததை எல்லாம் அற்புதமாகத் திரையில் சாத்தியப்படுத்தியுள்ளார். பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே மென் உணர்வுகளைத் தீண்டுகின்றன
மிக முக்கியமான ஒரு கலைப்படைப்பு கமர்ஷியல் தன்மை இல்லாமல், அதே நேரம் துளியும் சுவாரசியம் குறையாமல் தந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். கடைசி விவசாயி, காண்பவர்கள் அனைவர் மனதையும் நல்ல மகசூலுக்கு அறுவடை செய்யும்.
– ஜெகன் கவிராஜ்