
காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி அவன் முதுகிலும் வைத்து வளர்த்து விடுகிறார்கள். காந்தியத்தைச் சுமக்க முடியாமல் தவிக்கும் தாதா, வன்முறையில் அதற்கான வடிகாலைக் காணுகிறான். பெருங்கோபத்தோடு வரும் தாதாவை, மகான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
படத்தில், காந்தியத்தை மிக மேம்போக்காக அணுகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஏன் காந்தியே, அப்படித்தான் அணுகுவார். ‘காந்தியம் என்று எதையும் நான் புதிதாக உருவாக்கவில்லை. நாளையே நான் எனது கருத்துகளை மாற்றிக் கொள்ளக்கூடும். வாய்மையும் அஹிம்சையும் மலைகளைப் போன்று பழைமையானவை’ என்கிறார் காந்தி. காந்தி உட்பட, உலகளவில் காந்தியம் என்பதை சத்தியத்தோடும், அகிம்சையோடும் தான் முதலில் பொருத்திப் பார்க்கின்றனர். ஆனால் கார்த்திக் சுப்புராஜோ காந்தியம் என்பதை மது எதிர்ப்பு மட்டுந்தானென்ற பிம்பத்தைப் படத்தில் தோற்றுவிக்கிறார். நாயகனின் தந்தை மோகன்தாஸாக வரும் ஆடுகளம் நரேன், தன் மகனை நையப்புடைப்பதோடு, மகனின் பிறந்தநாள் தேதியை மாற்றியமைக்கும் பொய்மையையும் பெருமிதமாகக் கருதுபவராக உள்ளார். ஆக, காந்திய சித்தாந்தத்தை (Ideology) வாழ்க்கை நெறியாகக் கொள்ளும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினருக்குமே, அகிம்சை என்பது தேவையில்லாத ஆணியாகவே உள்ளது.
விக்ரமின் நடிப்பிற்குத் தீனி போட்டுள்ளது மகான். காந்தி மகானாக விக்ரம் அசத்தியுள்ளார். நாற்பது வயது வரை ஒரு விரக்தியான வாழ்க்கை வாழுபவராக, ஒரு ராஜா போல் பெரிதாக வாழ கனவு காணுபவராக, கனவை நனவாக்கும் தினவு கொண்டவராக, மகனைப் பிரிந்து ஏங்குபவராக, திடீரெனத் தோன்றி எதிர்த்து நிற்கும் மகனை என்ன செய்வது என்று குழம்பித் தவிப்பவராக, வஞ்சனை செய்யும் மகனைக் குழப்பம் தீர்ந்து சமாளிப்பவராக, விக்ரம் தன் அனுபவமிகு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காந்தி மகானின் விருப்பு, வெறுப்புகளை அழகாகக் கடத்திய வண்னம், தாதாவாக வரும் துருவ் விக்ரமின் அகத்தினை சரியாக கார்த்திக் சுப்புராஜ் கடத்தவில்லை. துருவிற்கு தனது தந்தை மீதான கோபத்திற்கான காரணம் அழுத்தமாக இருந்திருந்தால் படத்தில் விறுவிறுப்பு கூடியிருக்கும். இருவரும் சந்தித்த பின், தாறுமாறாகியிருக்க வேண்டிய படம் ஏனோ யோசனையுடன் அதன் பின் நகர்கிறது. தந்தைக்கு இணையாக துருவ் விக்ரமும் நன்றாக நடித்துள்ளார். எனினும் கதாபாத்திர வார்ப்பில் ஆழமில்லாத காரணத்தினால், தந்தையுடனான ரேஸில் பின் தங்கியே உள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்களான பாபி சிம்ஹா, சனந்த், ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஷ் ஆகியோர் இப்படத்திலும் உள்ளனர். ராக்கியாக சனந்த் பிரமாதப்படுத்தியுள்ளார். ராக்கியின் அம்மா, ‘இந்த எருமையை வேணா வளர்த்துக்கோங்க’ எனச் சொல்லும் காட்சியில் உள்ள அனைத்துக் கதாபாத்திரங்களுமே மிக அழகாகத் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். மன்னிக்கும் குணமில்லாத, மகனுக்கு அகிம்சையைப் போதிக்காத சிடுசிடு கதாபாத்திரத்தில் வரும் காந்தியவாதியான சிம்ரன் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.
அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு, கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார் முத்துகுமார். அரசியல்வாதி ஞானமாக, அவர் நடிப்பில் காட்டும் பவ்வியமும் வில்லத்தனமும் கவருகின்றன. மிகச் சிறப்பாக அரசியல் கணக்குகள் போடும் ஞானத்திற்கு, நாயை விட்டுக் கடிக்கவிட்ட மகான் மீது மட்டும் ஏன் சாஃப்ட் கார்னர் என்பது புரியாத புதிராய் உள்ளது. நாயகனென்ற சலுகையை வில்லனே விக்ரமிற்குத் தருவது ஒட்டவில்லை.
விஷுவல்களில் கார்த்திக் சுப்புராஜின் மேஜிக்கைக் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா. மேக்கிங்கில் உள்ள சிரத்தையின் காரணமாகவும், விக்ரமின் அபாரமான நடிப்பாலும், வெறும் அடிதடி என்றில்லாமல் மனித மனங்களின் உணர்வுகளைத் திரைக்கதை மையப்படுத்தியிருப்பதாலும், சிற்சில குறைகளை மீறி படத்தை ரசிக்க முடிகிறது. அமேசான் ப்ரைமில் படம் காணக் கிடைக்கிறது.