Search

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

Kadavul irukkaan Kumaru thirai vimarsanam

காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை.

த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் சம்பந்தப்பட்ட நடிகைகளோடு பொருத்தி நேரடி பொருள் கொள்ளக் கூடாது. அது ஓர் அழகான குறியீடு. எந்தப் பொழப்பும் இல்லாத விர்ஜின் பையனுக்கு, காதலிக்க எந்தப் பெண் கிடைத்தாலும் தேவதைதான். தேவதையை நேரில் பார்த்திராத யதார்த்தவாதியான நாயகன், நடிகைகளின் பெயரைக் கொண்டு தான் பார்க்கும் பெண்ணை ஒப்பீடு செய்து கொள்கிறான். அப்படி குமாருக்குக் கிடைக்கும் நாயகிகள் நான்சியாக வரும் ஆனந்தியும், ப்ரியாவாக வரும் நிக்கி கல்ராணியும்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற ஜீ.வி.பிரகாஷின் படத்தைப் பார்த்து இன்ஸ்பையராகித்தான் ராஜேஷ் அவரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தாராம். அதோடு நில்லாமல், அந்தக் கதையையே தழுவி, இந்தப் படத்தின் மையக்கருவாக்க தனித் தைரியம் வேண்டும். ராஜேஷ்க்கு அது ஏகமாய் இருக்கிறது என்று படத்தின் முதல் ஃப்ரேமில் இருந்தே தெரிகிறது.

மையக்கருவை முடிவு செய்யத்தான் ராஜேஷ் கொஞ்சம் சிரமப்பட்டிருப்பார் போல! திரைக்கதையை எளிதாக அதன் போக்கில் விட்டுவிட்டுள்ளார் ராஜேஷ். பாண்டிச்சேரியில் பேச்சிலர்ஸ் பார்ட்டி; ட்ராஃபிக் போலிஸில் மாட்டுதல்; பேய்ப் பங்களாவில் மழைக்கு ஒதுங்குதல்; இரண்டு நாயகிகளும் நாயகனை ஒதுக்குதல்; கடவுள் இருக்கிறாரா இல்லையா என க்ளைமேக்ஸில் சஸ்பென்ஸை அவிழ்த்தல் என திரைக்கதை தாறுமாறாய்ப் பயணிக்கிறது.

நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் பொறுமையை மிகவும் சோதித்து விடுகிறார் ராஜேஷ். சந்தானம் இல்லாமல், ஒன்னுமில்லாத கதையை மேக்கப் செய்து ரசிக்க வைக்க முயன்று பரிதாபமாகத் தோற்றுள்ளார்.  கதாநாயகியின் தந்தையிடம் நாயகன் மரியாதையின்றிப் பேசுவது; கான்ஸ்டபிள்களான ரோபோ ஷங்கர் சிங்கம்புலியைக் கொண்டு மொக்கை போடுதல்; டாக்டர் பங்களாவில் மிகத் திராபையான ஒரு பாடல் என ஒரு வழி பண்ணி விடுகிறார் இயக்குநர். வலுவில்லாத திரைக்கதையினால் பிரகாஷ்ராஜுமே டொக்காகிவிடுகிறார். படத்தில் நேரடியாக மது அருந்தும் காட்சிகள் இல்லாதது ஆறுதல். குடிப்போதையில் ஆர்.ஜே.பாலாஜி வாட்ஸ்-அப் க்ரூப்க்கு வீடியோ அனுப்பி விடும் கலாட்டா ரசிக்க வைக்கிறது.

‘சுப்ரீம் கோர்ட் சொல்வதை ஸ்டேட்டே கேட்க மாட்டேங்குது’ என இடையிடையில் வரும் சமகால அரசியலைப் பகடிக்கு உள்ளாக்கும் ஓன்-லைனர்கள் மட்டும் அத்தி பூத்தாற்போல் சிரிக்க வைக்கின்றன.