நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற கேள்விக்கு, ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் வரிகளைப் பதிலாகக் கொள்ளலாம். மோடி அரசோ, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய பயத்தையும் பதற்றத்தையும், தனி மனிதன் பலருக்கும் உருவாக்கி வைத்துள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)’ என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழி, மதம், சடங்கு, உணவு வேறுபாட்டினைக் குறிக்கும் பதம் மட்டுமன்று, மக்களின் பொருளாதார அடுக்கினையும் சேர்த்தே குறிக்கிறது. அதிகாரத்தோடு நெருங்கிப் பழகும் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் (Crony capitalists) முதல் தினக் கூலியை (Daily wages) நம்பிப் பிழைக்கும் அன்றாடங்காச்சிகள்/கழைக்கூத்தாடிகள் வரை எண்ணற்ற அடுக்கினைக் கொண்டது.
இந்த அடுக்குகளைப் பற்றிப் போதிய ஞானம் இல்லாமல், அடுக்கின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு, 2 நாட்களில் நாட்டை வெளுக்க அரசு ஓர் அரைவேக்காட்டுத் திட்டத்தை அமுல்படுத்துகிறது (அரை கூட இல்லை; கால்வேக்காட்டிற்கும் கம்மி என்றே சொல்லவேண்டும்). அரசின் இந்த அதிரடித் திட்டம், அதன் பலவீனத்தால், நிலைமை சீராக 50 நாட்களாகும் எனப் பல்லிளிக்கிறது. 50 நாட்களுக்குப் பின்னும், சுடச் சுட ஒரு சப்பைக்கட்டைத் தரும் அரசு.
இன்று பத்தாவது நாள். இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, தனது வெள்ளைப் பணத்தை எடுக்க, வேலையை விட்டுவிட்டு, மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இன்னும் மாறியபாடில்லை. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 47. நேற்று மட்டும் 3 வங்கி ஊழியர்கள் மாரடைப்பில் இறந்துள்ளனர். ‘எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது’ என கண்ணீர் சிந்திய பிரதமர், நாற்பத்தியேழு பேரின் மரணத்துக்குக் காரணமாகியுள்ளார். இந்த மரணம் யாருக்காக? எதற்காக? நாட்டுக்கு நல்லது நடக்கத் தரப்பட்ட களப்பலியா?
செயற்கை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையது என்று அனுபவ ரீதியாகப் பார்த்தோம். இன்று, ஒரு வருடத்திற்குள், செயற்கைப் பொருளாதார முடக்கத்தைப் பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடாலடி ஸ்டன்ட்டில், கறுப்புப்பணத்தைத் தடுப்பதற்கான எந்த வழிமுறையும் இல்லை. பதுக்கப்பட்டுள்ள 500/1000 ரூபாய்க் கட்டுகளை வெளியில் கொண்டு வர மட்டுமே இயலும். அப்படி வெளியில் வராத பணத்துக்குப் பதில், புதிய 500/1000 ரூபாய்களை அரசாங்கம் அச்சடிக்க உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு உயரும் என்பதே அரசின் திட்டம். ஆனால், இத்திட்டம் கறுப்புப்பணத்தை எவ்வழியிலும் தடுக்காததோடு, டெப்பாசிட் செய்யும் பொழுது கள்ள ரூபாய்களும் கலந்து விடும் சாத்தியம் உள்ளதால், இந்தத் திட்டத்தின் வெற்றியே திரிசங்கு சொர்க்கம் போல் தடுமாற்றம் நிறைந்தது. எதிர்பார்த்ததை விட அதிக பணம் டெப்பாசிட்டானால், ரூபாயின் மதிப்பு மேலும் குறையும் ஆபத்துள்ளது.
தியரிட்டிக்கலாகவே இது ப்ராபபிலிட்டியை நம்பி, பதுக்கல் பணத்தின் மீது எய்யப்பட்ட வியூகம். 100% தியரிட்டிக்கல் என்றாலே, அது ப்ராக்டிக்கலாகச் செயல்படுத்தும் பொழுது பயங்கரமாகச் சொதப்பும். அரசோ போதைய முன் தயாரிப்புகள் இன்றி, மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. புலி வாலைப் பிடித்த கதையாக, சமாளிக்க வழி தெரியாமல், தினமொரு விதியென இடியாப்பச் சிக்கலை உருவாக்கி, மக்களை மேலும் மேலும் வதைத்து வருகிறது.
கறுப்புப்பணத்தின் மீதான போர் என்பது மனதை மயக்கம் கொள்ளச் செய்யும் மிக மிகக் கவர்ச்சியான சொல்லாடல். சந்தைக்குள் கறுப்புப்பணம் உட்புகும் ஓட்டைகளை அடைக்காமல், இதுவரை தேங்கிய நீரை வெளியில் கொண்டு வருவதில் அரசு முழு ஈடுபாடினைக் காட்டுகிறது. சாதாரணமாய்ப் பார்க்க, ‘ஆகா, இறங்கிட்டான்ய்யா என் தலைவன். இனி எல்லாம் சுத்தமாகிடும்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. உட்புகவுள்ள நாளைய கறுப்புப்பணத்தினைச் சுலபமாகப் பதுக்க 2000 ரூபாய் நோட்டுகள் வழிவகை செய்யப் போகின்றன.
அதுவாவது கணக்கில் வராத கறுப்புப்பணமென மனதை ஆற்றிக் கொள்ளலாம். அரசால் பதற்றத்திற்கு உள்ளான மக்களோ, தனக்குக் கிடைக்கும் 100 ரூபாய்களைப் பதுக்கத் தொடங்கி விட்டனர். நாளொரு விதி பொழுதொரு கட்டுப்பாடு என எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென அரசும் குழம்பி, மக்களையும் குழப்பி, சாதாரணர்களையும் பதுக்கல் பேர்வழிகளாக்கி விட்டது அரசு. புது 500 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்திற்குக் கொண்டு வரத் தாமதப்படுத்தினால் நிலைமை மிக மோசமாகிவிடும்.
கறுப்புப்பணத்தை அனைத்து வழிகளிலும் வெள்ளை ஆக்குகின்றனர் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். பஸ் டிப்போக்களில் கடைசி ஷிஃப்ட் முடிந்து வரும் பேருந்தின் நடத்துநரிடம் பணம் வாங்க ஆட்கள் காத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒளிவுமறைவில்லாத லாண்டரிங் நடக்கிறது. ஒரு டேஷும் இங்கு மாறலை; மாறப் போவதுமில்லை.
பல சிறு தொழில்களையும், குடிசைத் தொழில்களையும் டீலில் விட்டுவிட்டது அரசு. அரசின் இந்தத் திட்டத்தால், ஒரே ஒரு தற்காலிக நன்மை என்னவென்றால், ஒரு புது வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளதுதான். கமிஷன் தர்றோமென பணத்தை மாற்றுவதற்கு வேலையில்லாதவர்களையும், அரசால் தொழில் இல்லாமல் போனவர்களையும் பதுக்கல் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏதேனும் அடையாள அட்டை காட்டி மாற்றிக் கொள்ளலாம், டிஜிட்டைசேஷன் அது இது என, பணத்தை மாற்றுவது குறித்த ஒரு சிறு பயத்தை அரசு ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ‘நாங்க அவ்ளோ வொர்த் இல்லை. மை வச்சுத்தான் கண்டுபிடிப்போம்’ எனத் தனது துப்பில்லாத்தனத்தை ஒத்துக் கொண்டுள்ளது அரசு. ‘உனக்கு உன் பணம் வேண்டுமா? உன் எல்லா வேலையையும் விட்டுவிட்டு ஏ.டி.எம்., ஏ.டி.எம். ஆக அலைந்து கொண்டிரு’ என்ற அரசின் அலட்சியமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த, வெளிநாட்டில் பத்து மாதம் ரூம் போட்டு வேறு யோசித்துள்ளனராம்.
போதிய மாற்றுப் பணம் அச்சடிக்காத நிலையில், 10 கிராமங்களுக்கு ஒரு வங்கி/ 2 ஏ.டி.எம். என்ற நிலையில், அரசின் கண்மூடித்தனமான இந்தச் செயல் நகைப்பிற்குரியது; பெரும் கண்டனத்துக்குரியது. எவரைப் பற்றியும் சிந்திக்காதது மோடியும் அவரது அரசும் மட்டுமல்ல; அவரை நம்பும் பக்தர்களும்தான். ‘நாட்டுக்காக, 2 நாள் ஏ.டி.எம்.மில் நிற்க முடியாதா?’ என மிக்ச்சரை வாயில் போட்டு மென்றவாறே அலட்சியமாகக் கேட்கின்றனர். மாசக் கடைசி வந்ததும் அனைவரின் அலட்சியமும் ஆட்டம் காணத்தான் போகிறது. சூப்பர் மார்க்கெட்டை நோக்கி நம்மைத் தள்ளி, நுகர்வுக் கலாச்சாரத்துக்கு நம்மை அடிமைப்படுத்தும் அரசை எப்படித் தடுப்பது? யாரிடம் நாம் பொருட்களை வாங்க வேண்டுமென முடிவு செய்து அரசு காய் நகர்த்துகிறது.
130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், அனைவருக்கும் கேஷ்லெஸ் எகானெமியைத் திணிப்பது சாத்தியமான செயலா? கரும்பு வெட்டும் ஆட்கள், நாத்து நடும் பெண்கள், கதிரடிப்பவர்கள் போன்றோர்களுக்கு காசோலையாகவோ (cheque), வங்கிக் கணக்கிற்கு மின் பரிவர்த்தனை (eTransaction) செய்து கொள்ளுங்கள் எனச் சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஒரு வாரத்திற்குப் பின், மனமிறங்கி அரசு கொஞ்சமாக விதிகளை மெல்ல தளர்த்தியுள்ளது. விவசாயிகளை, விவசாயக் கூலிகளை, இப்படி எண்ணற்றவர்களை ஒரு பொருட்டாகக் கருதிடாது துச்சமென மதிக்கும் அரசாங்கத்திற்கு எத்தகைய அலட்சியமும் அகம்பாவமும் இருக்கவேண்டும்?
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
(அதிகாரம்: கொடுங்கோண்மை – குறள் 551)
மு.வரதராசனார் உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
#StopWarOnPeople
– J.ஷாலினி