Search

களத்தூர் கிராமம் விமர்சனம்

Kalathur Gramam movie review

திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’.

பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத்தனை பழி வாங்க நினைக்கும் மனங்கள். படம் பார்வையாளர்களை ஈர்க்கவும் அதுவே காரணமாகிறது. பழி வாங்கும் எண்ணம் உயிர்களுக்கே உரிய ஆதி உணர்வு.

களத்தூர் என்பது தமிழக – ஆந்திர எல்லையிலுள்ள களவுத் தொழில் செய்யும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்து மனிதர்களுக்கு எல்லாமுமாக இருக்கும் கிடாதிருக்கையைச் சுற்றியே கதை நகர்கிறது. கிடாதிருக்கை பார்வையாளர்களை ஆட்கொள்வதற்கு, அப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோரே முக்கியக் காரணம். நெடுநெடுவென்ற அவரது கம்பீரம் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. களவுத் தொழிலில் ஈடுபடும் அந்தக் கிராமத்தினரைக் கரி மூட்டம் போடும் தொழிலுக்குத் திருப்புகிறார் கிஷோர். ஆனாலும் களத்தூர் கிராமம், அரசாங்கத்தால் ‘கரும்புள்ளி’ குத்தப்பட்ட கிராமமாகவே தொடர் இன்னல்களுக்கு ஆளாகிறது.

படம் ஒரு பீரியட் ஃபிலிம். ஆந்திர எல்லையோரத்தினைப் பிரதிபலிக்கும்படியான அவர்களது உடையும், கருவேல மரங்களின் அடர்த்தியான அரவணைப்பில் மறைந்திருக்கும் ஊரும், பார்வையாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். உடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜாவும், ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷும் படம் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு மிக முக்கியப் பொறுப்பேற்கிறார்கள். இடைவேளை வரையிலான கதையின் போக்கு பார்வையாளர்களின் கவனத்தை முழுவதுமாக ஆட்கொள்கிறது. இயக்குநர் சரண் கே.அத்வைதன் நிச்சயமாய் ஒரு தேர்ந்த கதைச்சொல்லி தான். யாருமற்று அனாதையாய் அரசு மருத்துவமனையில் இறப்பவர்களை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள் எனத் தொட்டுள்ளதே அதற்குச் சான்று. ஒரு கண்ணாமூச்சி போல் இரண்டு அரசுத்துறைகளுக்குள் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை அழுத்தமாகப் பதிந்துள்ளார்.

இளையராஜாவின் இசை இப்படத்திற்குக் கிடைத்த கொடை. என்றாலும், இரவில் நடக்கும் ஒரு திருமண வைபவத்திற்குத் தன் படத்தின் பாடல்களைப் போட்டு அக்காட்சியைக் கடந்து விடுகிறார். பீரியட் படம் என்ற முறையிலும், கொஞ்சம் சீரியசான அட்டெம்ப்ட் என்ற முறையிலும், அக்காட்சியில் ராஜாவின் பின்னணி தனித்து நின்றிருக்கலாம். அக்காலத்தைய கள்ளர் மரபின் படி இரவில் நடக்கும் திருமணக் காட்சி ஒரு பதிவாக இல்லாமல், ராஜாவின் பழம்பெருமையாக முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். நீதிபதியாக அஜய் ரத்னமும், காவல்துறை அதிகாரி தலக்காயனாக அவரது மகன் தீரஜ் ரத்னமும் நடித்துள்ளனர். இருவருமே அவர்களது வேடங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் நடித்த அத்தனைப் பேரிடமும் ஒழுங்காக வேலை வாங்கித் தானொரு கவனிக்கத்தக்க இயக்குநர் தானென நிரூபித்துள்ளார் சரண் கே.அத்வைதன்.

செல்வாம்பாவாக நாயகி யாக்னா ஷெட்டி நடித்துள்ளார். மகனை எண்ணி ஏங்கும் காட்சிகளை விட, கிடாதிருக்கையுடனான காட்சிகளிலும், வீரண்ணாவுடனான காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். வீரண்ணா எனும் உப நாயகன் போல் கிஷோரோடு தோளுக்குத் தோள் நின்று அறிமுகமாகும் சுலீல் குமார், தன் சபலமான சுபாவத்தால் மெல்ல எதிர் நாயகன் ஆகிறார். மனித மனங்களின் மாற்றத்தை இயக்குநர் நன்றாக உள்வாங்கி தன் கதாபாத்திரங்களின் மூலம் வெளிபடுத்தியுள்ளார். முக்கியமாக சுலீல் குமாரின் பெற்றோராக வரும் ராகுல் தாத்தாவும், அவரது மனைவியாக நடித்தவரின் கதாபாத்திரங்களைக் குறிப்பிட வேண்டும். மனதில் பெரும் வஞ்சத்தைச் சுமந்து கொண்டு, வெளியில் ஒரு வேஷம் காட்டி, ஒரு பிஞ்சின் நெஞ்சில் நஞ்சைத் தடவும் அவர்கள் மிகவும் பயமுறுத்துகின்றனர். அந்த நஞ்சைச் சுமக்கும் கதாபாத்திரத்தில் அறிமுக நாயகன் கிட்ணன் கலக்கியுள்ளார் மிதுன். கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் உடலோடு சிரமமின்றி மனதில் பதிகிறார். படத்தின் முடிவு இப்படி முடிந்து விடக் கூடாதென ஒரு பதற்றம் ஏற்படுத்துகிறது. ஆனால், காவியங்களை அப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற பொதுவிதியை இயக்குநர் தளர்த்தியிருந்தால் படம் மனதிற்கு இன்னும் நெருக்கமானதாக அமைந்திருக்கும்.