Search

களவாணி மாப்பிள்ளை விமர்சனம்

Kalavani mappilai movie review

எந்த வாகனமும் ஓட்டத் தெரியாத தேவாவிற்கு, பைக்கில் பறக்கும் துளசி மீது காதல் வந்துவிடுகிறது. துளசிக்கும் தேவாவைப் பிடித்துப் போய் விட, கல்யாணப் பேச்சை எடுக்கின்றனர். துளசியின் அம்மாவான பணக்கார ராஜேஸ்வரிக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். மாப்பிள்ளைக்குக் காரோட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே அது. அங்குத் தொடங்கும் மாப்பிள்ளையின் களவாணித்தனம் எங்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் ஸ்பூஃப் படம் போல் தெரிகிறது. நாயகியின் அம்மாவாக நடிக்கும் தேவயாணியின் பெயர் ராஜேஸ்வரி. மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யாவின் பெயர் ராஜராஜேஸ்வரி ஆகும். ஆனால், ஸ்ரீவித்யாவின் அந்த மிடுக்கும் கம்பீரமும் தேவயாணியிடம் சுத்தமாக மிஸ்ஸிங். காருக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும்படி அறிமுகமாகிறார் நான் கடவுள் ராஜேந்திரன். ஓரத்தில் ஒரு பையன், சட்டையைத் தரையில் வீசி அதை எதிரிலுள்ள கட்டையில் ‘ஆட்டியூட்’-உடன் போடுகிறான். ஜாக்கிசானின் ‘தி கராத்தே கிட்’ ஞாபகம் வருகிறது. இரண்டு காட்சிகள் போனதும், “சீனக்காரத் தம்பி ஒருத்தன்ட்ட, என் கார் உடைக்கும் கதையெ சொன்னேன். படமெடுத்துட்டான்ப்பா” என ஜாக்கிசானுடனான நான் கடவுள் ராஜேந்திரன் புகைப்படத்தைப் பின்புலத்தில் காட்டுகின்றனர். கதையோ, திருப்பமோ பெரிதும் இல்லாவிட்டாலும் முதல் பாதி போரடிக்காமல் போகிறது. Fun begins என் இடைவேளை விடுகின்றனர்.

முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் காம்போவில், இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கான ஸ்கோப் இருந்தும், திரைக்கதை அதற்கு முழு வீச்சில் உதவவில்லை. எப்படி சிம்பிளாகத் தொடங்கினார்களோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் கடைசி வரை ஒரே ஃப்ளோவில் பயணிக்கிறது. படத்தை முழுநீள நகைச்சுவையாகக் கொண்டு போவதற்கான கதைக்களம் இருந்தும் இயக்குநர் மணிவாசகம் சிம்பிளாகவே படத்தைச் சுபமாக முடித்தும் விடுகிறார். படம் முடிந்ததும் போடப்படும் ப்ளூப்பர்ஸ் ரசிக்க வைக்கிறது.

சர்கார் படத்தில், ஐஐடி மாணவராக சுந்தர் ராமசாமிக்கு உதவி புரியும் லல்லு, இப்படத்தில் நாயகன் நண்பனாக வருகிறார். படத்தின் வில்லன், வில்லங்கம் எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஸ்காந்த். வில்லத்தனமும் முழுமையாக இல்லை, காமெடியும் காமெடியும் இல்லை என்பதுதான் வில்லங்கம் கதாபாத்திரத்தின் குறை. நாஞ்சில் விஜயனும் பெரிதாகச் சோபிக்க திரைக்கதை இடமளிக்கவில்லை.

தேவாவாக தினேஷும், துளசியாக அதிதி மேனனும் நடித்துள்ளானர். சட்டென காதல் மலர்ந்து விடுகிறது. ‘கொஞ்சம் கேப் விட்டா யார் யாரோ வில்லன் ஆயிடுறாங்க’ என முனீஸ்காந்தைப் பார்த்து ஆனந்த் ராஜ் சொல்லுமிடத்தில் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஒரு மாறுதலுக்காகவாவது ஒரு சீரியஸான வில்லன் ரோலில் அவரை நடிக்க வைக்கலாம்.

களவாணித்தனம் செய்யாத அப்பாவி மாப்பிள்ளையாக தினேஷ் முழிக்க, கார்மேகமாக வரும் ஆனந்த் ராஜ் தான் களவாணித்தனம் செய்து ரசிக்க வைக்கிறார். களவாணி மாமனார் என்ற பெயரே படத்திற்குப் பொருந்தும்.