Shadow

பில்லா பாண்டி விமர்சனம்

billa-pandi

அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, ‘தல’ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் ‘மீ டூ’ அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. ‘கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க வைத்துவிடுவேன்’ என படத்தின் 35% நீளம் அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. படத்தின் நீளம் குறைந்தாலும் பரவாயில்லையென, நகைச்சுவை என்ற பெயரில் தம்பி ராமையா செய்யும் அசட்டுத்தனங்களைக் கத்தரித்து எறிந்திருக்க வேண்டும் படக்குழு. காமெடியனுக்கும், வில்லனுக்கும்  கேரக்டர் டீட்டெயிலிங்கில் பெரிய வித்தியாசமில்லை என்றே சொல்லவேண்டும். வில்லனாக மிரட்டியிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தை இன்னும் வலுவாகப் பயன்படுத்தியிருக்கலாம். வில்லனென ஒருவர் வேண்டுமென்பதற்காகக் கடமைக்குப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. நாயகனின் நண்பனாக வரும் அமுதவாணனுக்கு வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு கேர்க்டர் ஆர்டிஸ்ட்டாக மிளிர சாத்தியக்கூறுகள் தெரிகிறது.

சாந்தினி, மேயாத மான் இந்துஜா எனப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். இருவருக்குமே பில்லா பாண்டி மீது அதீத காதல். அப்படியொரு கையறு நிலையில், வாழ்க்கை அவரைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்துகிறது. கதாநாயகிகள் அவ்வளவு சிரத்தையாய், அந்நிலையை அவர்கள் நடிப்பில் கொண்டு வந்தார்களா என்பது ஐயமே! R.K.சுரேஷ் , தானேற்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்கார். முதல் முறையாகக் கதாநாயகனாக நடித்துள்ளார். பாட்டு, நடனம், முகபாவம், உடலமைப்பு எனத் தானொரு பக்கா ஹீரோ மெட்டிரீயலென நிரூபித்துள்ளார் R.K.சுரேஷ். இளையவனின் இசையில், பாடல்கள் துள்ளல் போட வைக்கின்றன.

‘கிராமத்துப் படங்களில் நடித்து வெற்றி கண்ட ராஜ்கிரணுக்கு மாற்றாக இந்தத் தலைமுறையில் யாருமில்லை. R.K.சுரேஷ், அவ்வகை படங்களுக்குப் பொருந்துவார்’ என பில்லா பாண்டி படத்து இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் சொன்னார். அதைக் கவனத்தில் கொள்வது R.K.சுரேஷ்க்கு நன்மை பயக்கும்

படத்தில் அஜித்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றன. ‘தல’ச்சாமியைத் ‘தாலி காத்த காளியம்மன்’ ரேஞ்ச்க்குக் கொண்டு போய் உள்ளார் இயக்குநர் M.M.S.மூர்த்தி. இதெல்லாம் இன்றி, எடுத்துக் கொண்ட கருவில் இருந்து விலகாமல், யதார்த்தமான படமாகக் கொடுத்திருந்தாலே ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள்.